புத்தாண்டு தின பங்கு வர்த்தகத்தில் வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி செயல்பட்டதால் 2018ஆம் ஆண்டின் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற பங்கு வர்த்தகம் திடீர் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் வரலாற்று உச்சத்திலிருந்து
புத்தாண்டு தின பங்கு வர்த்தகத்தில் வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி செயல்பட்டதால் 2018ஆம் ஆண்டின் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற பங்கு வர்த்தகம் திடீர் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் வரலாற்று உச்சத்திலிருந்து சறுக்கி அதிர்ச்சியளித்ததையடுத்து முதலீட்டாளர்களுக்கு புத்தாண்டு தொடக்க தினம் சோகமயமானதாக மாறிப்போனது.
 மாருதி சுஸுகி, டிவிஎஸ், ஹுண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களின் டிசம்பர் மாத மோட்டார் வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டது. இந்த புள்ளிவிவர வெளியீடு பங்குச் சந்தைகளுக்கு சாதகமாக இருந்தபோதிலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது, தயாரிப்பு துறை குறித்த மத்திய அரசின் புள்ளிவிவர எதிர்பார்ப்பு, நிதி பற்றாக்குறை ஏற்படும் என்ற நிலைப்பாடு ஆகியவை பங்கு வர்த்தகத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது.
 முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்ததை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முற்பட்ட வாடிக்கையாளர்கள் அவற்றை லாப நோக்கம் கருதி விற்பனை செய்தது பங்குச் சந்தை சரிவுக்கு வழிவகுத்தது. புத்தாண்டை முன்னிட்டு பல நாடுகளின் பங்குச் சந்தைகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அவற்றின் அனுகூலமான ஆதரவு எதுவும் இந்திய பங்குச் சந்தைகளுக்கு கிடைக்கவில்லை.
 மும்பை பங்குச் சந்தை மோட்டார் வாகன துறை குறியீட்டு எண் 0.78 சதவீதமும், வங்கி 0.75 சதவீதமும் சரிந்தன.
 அதேசமயம், பொறியியல் சாதனங்கள், ரியல் எஸ்டேட், மருந்து, நுகர்வோர் சாதன துறை பங்குகளில் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு மேற்கொண்டதையடுத்து பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
 டிசிஎஸ் நிறுவனப் பங்கின் விலை அதிகபட்சமாக 1.69 சதவீதம் சரிவைக் கண்டது. இதனைத் தொடர்ந்து, இண்டஸ்இந்த் பேங்க் பங்கின் விலை 1.45 சதவீதமும், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்கின் விலை 1.40 சதவீதமும் குறைந்தன.
 இவைதவிர, ஹெச்டிஎஃப்சி நிறுவனம், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, கோட்டக் வங்கி, யெஸ் வங்கிப் பங்குகளின் விலை 1.35 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது.
 அதேபோன்று, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி சுஸுகி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனப் பங்குகளின் விலையும் 1.35 சதவீதம் வரை சரிந்தன.
 மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 244 புள்ளிகளை இழந்து 33,812 புள்ளிகளில் நிலைத்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி ஏற்பட்ட 316 புள்ளிகள் இழப்புக்குப் பிறகு ஒரே நாளில் சென்செக்ஸ் இந்த அளவுக்கு குறைந்தது இதுவே முதல் முறை.
 தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 95 புள்ளிகள் சரிந்து 10,435 புள்ளிகளாக நிலைத்தது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com