புத்தாண்டில் முதல்முறையாக பங்குச் சந்தைகளில் ஏற்றம்

புத்தாண்டிலிருந்து தொடர்ச்சியாக மூன்று தினங்கள் சரிவை சந்தித்து வந்த பங்குச் சந்தைகள் சாதகமான நிலவரங்களால் வியாழக்கிழமை முதல்முறையாக ஏற்றம் கண்டன.
புத்தாண்டில் முதல்முறையாக பங்குச் சந்தைகளில் ஏற்றம்

புத்தாண்டிலிருந்து தொடர்ச்சியாக மூன்று தினங்கள் சரிவை சந்தித்து வந்த பங்குச் சந்தைகள் சாதகமான நிலவரங்களால் வியாழக்கிழமை முதல்முறையாக ஏற்றம் கண்டன.
வாராக் கடனில் சிக்கி தவித்து வரும் பொதுத் துறை வங்கிகளை காப்பாற்றும் வகையில் மறுமூலதனம் அளிக்க மத்திய அரசு ஏற்கெனவே முடிவெடுத்துள்ளது. அந்த வகையில், ரூ.80,000 கோடி கூடுதல் மறுமூலதனத்தை வங்கிகளுக்கு வழங்க நாடாளுமன்றத்தின் அனுமதியை மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை கோரியது. இந்த நிகழ்வு பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. 
புதிய ஆர்டர்கள் கிடைத்ததையடுத்து சென்ற டிசம்பரில் இந்திய சேவைகள் துறை உற்பத்தி வளர்ச்சிப் பாதையை நோக்கி திரும்பியுள்ளதாக மாதாந்திர ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டதும் பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு உறுதுணையாக அமைந்தது. 
கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் உதவியால் எரிசக்தி நிறுவனங்களின் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே அதிக கிராக்கி காணப்பட்டதையடுத்து ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
உலக பொருளாதார வளர்ச்சி நன்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பால் உலோகத் துறை குறியீட்டெண் அதிகபட்சமாக 2.77 சதவீதமும், நுகர்வோர் சாதனம் 2.53 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 2.11 சதவீதமும் ஏற்றம் பெற்றன. இவை தவிர, பொதுத் துறை நிறுவனங்கள் 1.55 சதவீதமும், அடிப்படை கட்டமைப்பு 1.03 சதவீதமும், மருந்து 0.99 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 0.80 சதவீதமும், வங்கி 0.51 சதவீதமும், மின்சாரம் 0.33 சதவீதம் அதிகரித்தன.
மத்திய அரசு, வங்கிகளுக்கு மூலதனம் அளிக்க எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி பங்கின் விலை 1.72 சதவீதம் உயர்ந்தது. யுகோ வங்கி, ஐடிபிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் பங்குகளின் விலை 8.50 சதவீதம் வரை உயர்ந்தது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில் சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள டாடா ஸ்டீல் பங்கின் விலை 3.74 சதவீதமும், டாக்டர் ரெட்டீஸ் பங்கின் விலை 3.14 சதவீதமும் அதிகரித்தன.
இவைதவிர, எல் & டி, ஓஎன்ஜிசி, ஏஷியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, கோல் இந்தியா, பார்தி ஏர்டெல், டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி நிறுவனப் பங்குகளின் விலை 3.08 சதவீதம் வரை உயர்ந்தன. 
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 176 புள்ளிகள் அதிகரித்து 33,969 புள்ளிகளாக நிலைத்தது. புத்தாண்டில் பங்குச் சந்தைகள் காணும் முதல் ஏற்றம் இதுவாகும்.
தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 61 புள்ளிகள் உயர்ந்து 10,504 புள்ளிகளாக நிலைத்தது.
சென்ற புதன்கிழமை நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.96.31 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாகவும், உள்நாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.269.20 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றதாகவும் தாற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com