இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் 8.4%-ஆக அதிகரிப்பு

இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் சென்ற நவம்பரில் 8.4 சதவீதமாக அதிகரித்தது. இது, கடந்த 17 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.

இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் சென்ற நவம்பரில் 8.4 சதவீதமாக அதிகரித்தது. இது, கடந்த 17 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.
இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: 
2017-ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் 8.4 சதவீதமாக அதிகரித்தது. சென்ற 2016 நவம்பரில் இது 5.1 சதவீதமாக காணப்பட்டது.
இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூனில் தான் 8.9 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்திருந்தது. அதற்கு பிறகு 17 மாதங்கள் கழித்து சென்ற ஆண்டு நவம்பரில் தான் அது இந்த அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
இந்திய தொழிலக உற்பத்தி விகிதத்தை கணக்கிடுவதில் 77.63 சதவீத பங்களிப்பைக் கொண்ட தயாரிப்பு துறையின் உற்பத்தி சென்ற நவம்பரில் 10.2 சதவீதமாக வளர்ச்சி கண்டது. 2016 நவம்பரில் இது வெறும் 4 சதவீதமாகவே காணப்பட்டது.
பொறியியல் பொருள்கள் உற்பத்தி 5.3 சதவீதத்திலிருந்து அதிகரித்து 9.4 சதவீதமாகவும், நுகர்வோர் சாதனங்கள் சாராத தயாரிப்புத் துறை நிறுவனங்களின் உற்பத்தி 3.3 சதவீதத்திலிருந்து பல மடங்கு உயர்ந்து 23.1 சதவீதமாகவும் இருந்தன. இதற்கு, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்களின் விற்பனை வேகமெடுத்ததே முக்கிய காரணம். அதேசமயம், சுரங்கத் துறை உற்பத்தி 2017 நவம்பரில் 1.1 சதவீதமாக சரிந்தது. 2016 நவம்பரில் இது 8.1 சதவீதமாக மிகவும் அதிகரித்திருந்தது.
இதேபோன்று, மின் துறை நிறுவனங்களின் உற்பத்தி 9.5 சதவீதத்திலிருந்து குறைந்து 3.9 சதவீதமாக இருந்தது. தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி 6.8 சதவீதத்திலிருந்து வீழ்ச்சியடைந்து 2.5 சதவீதமானது.
கடந்த 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தயாரிப்புத் துறையில் மொத்தமுள்ள 23 தொழிற்பிரிவுகளில் 15 சென்ற நவம்பரில் நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com