பங்குச் சந்தையில் தொடரும் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 36,000 புள்ளிகள் கடந்து சாதனை

பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் ஐந்து நாள்களாக தொடர்வதையடுத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் முதல் முறையாக 36,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.
பங்குச் சந்தையில் தொடரும் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 36,000 புள்ளிகள் கடந்து சாதனை

பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் ஐந்து நாள்களாக தொடர்வதையடுத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் முதல் முறையாக 36,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2018-19 ஆண்டுகளில் 7.4 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதியம் தெரிவித்தது. மேலும், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற அந்தஸ்தை இந்தியா மீட்கும் என்று அந்த நிதியத்தின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி முதலீட்டாளர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. அந்நிய முதலீட்டு வரத்தும் இந்திய பங்குச் சந்தைகளின் விறுவிறுப்புக்கு கூடுதல் வலு சேர்த்தது.
அந்நிய முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை வர்த்தகத்தின்போது ரூ.1,567.51 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாகவும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.461.87 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாகவும் தாற்காலிக விவரத்தில் தெரிவிக்கப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் உலோகத் துறை பங்குகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததையடுத்து அதன் குறியீட்டெண் 4.29 சதவீதம் ஏற்றம் கண்டது. இதைத் தொடர்ந்து, பொதுத் துறை 2.15 சதவீதம், எண்ணெய்-எரிவாயு 1.93 சதவீதம், வங்கி, 1.63 சதவீதம், தகவல் தொழில்நுட்பம் 1.20 சதவீதம், மருந்து 0.94 சதவீதம், தொழில்நுட்பம் 0.92 சதவீதம், உள்கட்டமைப்பு குறியீட்டெண் 0.88 சதவீதம் அதிகரித்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், எஸ்பிஐ பங்கின் விலை 3.84 சதவீதமும், டாடா ஸ்டீல் 3.72 சதவீதமும், ஓஎன்ஜிசி 3.60 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 3.06 சதவீதமும், கோல் இந்தியா 3.04 சதவீதமும் அதிகரித்தன. இவைதவிர, இன்டஸ்இண்ட் வங்கி (2.37%), இன்ஃபோசிஸ் (2.16%), டாக்டர் ரெட்டீஸ் (1.24%), மஹிந்திரா & மஹிந்திரா (1.14%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (1.08%), ஐடிசி (1.08%), யெஸ் வங்கி (1.01%) மற்றும் மாருதி சுஸுகி (0.97%) பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின. 
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 341 புள்ளிகள் அதிகரித்து 36,139 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு நிறைவடைந்தது. கடந்த ஜன.17 முதல் ஜன. 23 வரையிலான ஐந்து வர்த்தக தினங்களில் மட்டும் சென்செக்ஸ் 35,000 புள்ளிகளிலிருந்து அதிகரித்து 36,000 புள்ளிகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 117 புள்ளிகள் உயர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவில் 11,083 புள்ளிகளாக நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com