ஜூன் மாத வாகன விற்பனை நிலவரம்

ஜூன் மாத வாகன விற்பனை நிலவரம்
ஜூன் மாத வாகன விற்பனை நிலவரம்

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 15% உயர்வு
சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் வாகன விற்பனை சென்ற ஜூனில் 3,13,614-ஆக இருந்தது. கடந்தாண்டின் இதே கால அளவு விற்பனையான 2,73,791 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 15% அதிகமாகும். இருசக்கர வாகன விற்பனை 2,68,638 லிருந்து 12.1% உயர்ந்து 3,01,201-ஆனது. உள்நாட்டில் இருசக்கர வாகன விற்பனை 7.7% அதிகரித்து 2,46,176-ஆக காணப்பட்டது.
அசோக் லேலண்ட் விற்பனை 28% அதிகரிப்பு

ஹிந்துஜா குழும நிறுவனமான அசோக் லேலண்ட் சென்ற ஜூனில் 15,791 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு விற்பனையான 12,333 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 28% அதிகம். நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 22 சதவீதம் அதிகரித்து 11,257-ஆகவும், இலகு ரக வர்த்தக வாகன விற்பனை 45% வளர்ச்சி கண்டு 4,534-ஆகவும் இருந்தன.
டாடா மோட்டார்ஸ் விற்பனை 54% வளர்ச்சி
டாடா மோட்டார்ஸின் வாகன விற்பனை சென்ற ஜூனில் 54% வளர்ச்சி கண்டு 56,773-ஆக இருந்தது. உள்நாட்டு சந்தையில் பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விற்பனை சூடுபிடித்ததையடுத்து, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் விற்பனை 64% அதிகரித்து 1,64,579 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. வாகன ஏற்றுமதி 3,504-லிருந்து 50% உயர்ந்து 5,246-ஆனது.
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 13% உயர்வு
ஹீரோ மோட்டோகார்ப் வாகன விற்பனை சென்ற ஜூனில் 15% உயர்ந்து 7,04,562-ஆக இருந்தது. ஏப்-ஜூன் காலாண்டில் 21,04,949 வாகனங்களை விற்பனை செய்ததன் மூலம் தனது முந்தைய சாதனையை (கடந்த நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் 20,22,805 வாகனங்கள் விற்பனை) தானே முறியடித்துள்ளது. மாதாந்தோறும் வாகன விற்பனை 7 லட்சத்தை தாண்டி வருவதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com