ஜியோ அடுத்த அதிரடி!

தொலைத் தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கிய பிறகு பல முன்னணி நிறுவனங்கள் தூக்கத்தை தொலைத்து விட்டன என்றே வெளிப்படையாக கூறிவிடலாம்!.
ஜியோ அடுத்த அதிரடி!

தொலைத் தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கிய பிறகு பல முன்னணி நிறுவனங்கள் தூக்கத்தை தொலைத்து விட்டன என்றே வெளிப்படையாக கூறிவிடலாம்!. அந்த அளவுக்கு ஜியோ சேவை பிற நிறுவனங்களின் செயல்பாடுகளில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

முற்றிலும் 4ஜி தொழில்நுட்பத்தில் ஜியோ செல்லிடப்பேசி சேவையை தொடங்கியபோது மிக குறுகிய காலத்தில் ஆலவிருட்சம் போல் வளரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. முதலில் இழப்பை மட்டுமே கண்ட அந்த நிறுவனம் பத்தோடு ஒன்றாக மறைந்து போகும் என்பதே பலரின் கருத்தாக இருந்தது. ஆனால், குறைந்த விலையில் தரமான சேவையை வழங்கியதையடுத்து எதிரணியில் உள்ளோரையும் ஈர்க்கும் காந்தமாக மாறிப்போனது ஜியோ. பிறந்து சில மாதங்களே ஆன நிலையில் இன்று 18 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. இந்த சூடு அடங்குவதற்குள் தற்போது பிராட்பேண்ட் சேவையிலும் களமிறங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது பிற நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. ஏற்கெனவே ஜியோவின் வருவாய் பாதிக்கப்பட்டு தத்தளித்து வரும் நிறுவனங்களுக்கு ஜியோவின் இந்த அறிவிப்பு நிச்சயம் கசப்பாகத்தான் இருக்கும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 41-ஆவது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, நாடு முழுவதிலுமுள்ள 1,100 முக்கிய நகரங்களில் விரைவில் பிராட்பேண்ட் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றார். 
ரௌட்டர் மற்றும் டிவிக்கான செட்-டாப் பாக்ஸூடன் வரவுள்ள ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் சேவையின் டேட்டா வேகம் நிமிடத்துக்கு 1ஜிகாபைட் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 முதல் இதற்கான முன்பதிவுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முதல்கட்டமாக சுமார் 5 கோடி குடும்பங்களை குறிவைத்து இந்த சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது, இந்த துறையில் ஏற்கெனவே கால் பதித்துள்ள நிறுவனங்களுக்கு வேகம், விலை ஆகியவற்றின் அடிப்படையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
குறிப்பாக, கேபிள் டிவி நிறுவனங்களான டென் நெட்வொர்க்ஸ், ஹாத்வே கேபிள் & டேட்டாகாம் மற்றும் டிடிஹெச் சேவையில் உள்ள டாடா ஸ்கை, டிஷ் டிவி உள்ளிட்ட பல நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஜியோவின் இந்த அறிவிப்பு வெளியான உடன் டென் மற்றும் ஹாத்வே கேபிள் பங்குகளின் விலை 10.7 சதவீதம் வரை சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் பங்குகளும் ஆட்டம் கண்டன.
ஜியோவின் முதல் கட்ட அறிவிப்புக்கே சந்தை இவ்வளவு எதிர்வினை ஆற்றிடும் நிலையில், அது நேரடியாக களத்தில் இறங்கும்போது பிராட்பேண்ட் சந்தையில் என்னென்ன நடக்குமோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com