இரு சக்கர வாகன விற்பனையில் 40 சதவீத இலக்கு: சுஸுகி

நடப்பு நிதியாண்டில் இரு சக்கர வாகன விற்பனையில் 40 சதவீத வளர்ச்சியை எட்ட சுஸுகி இலக்கு நிர்ணயித்துள்ளது.
சுஸுகி அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஸ்கூட்டர்.
சுஸுகி அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஸ்கூட்டர்.

நடப்பு நிதியாண்டில் இரு சக்கர வாகன விற்பனையில் 40 சதவீத வளர்ச்சியை எட்ட சுஸுகி இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சடோஷி உசிதா, செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: சுஸுகி நிறுவனம் 125சிசி பிரிவில் பர்க்மேன் ஸ்டீரிட்' என்ற புதிய வகை ஸ்கூட்டரை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை, ரூ.68,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்புதிய வெளியீடு மட்டுமின்றி வாகன விற்பனையை நடப்பு நிதி ஆண்டில் 7 லட்சமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். 2017-18 நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையான 5 லட்சம் வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 40 சதவீதம் அதிகம் என்பது நினைவுகூரத்தக்கது.
வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் வாகன விற்பனையை 10 லட்சமாக அதிகரிப்பதே எங்களின் கனவு. இந்த கனவை நனவாக்கும் வகையில் புதிய வாகனங்கள் அறிமுகம் மற்றும் விற்பனை மைய விரிவாக்கம் ஆகியவற்றில் சுஸுகி மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நடப்பு நிதியாண்டுக்குள் நாடு முழுவதும் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை 200-ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
ரூ.600 கோடியில் புதிய ஆலை: இந்தியாவில் வாகன உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ரூ.600 கோடி முதலீட்டில் புதிய ஆலையின் முதல் கட்ட பணிகளை தொடங்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். இது, சுஸுகி அமைக்கவுள்ள இரண்டாவது ஆலையாகும். 
சந்தையில் 10 லட்சம் வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் நிலையில் அதனை ஈடு செய்யும் வகையில் வாகன உற்பத்தியை கட்டாயம் அதிகரிக்க வேண்டும். அதற்காக, தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இப்புதிய ஆலையின் மூலம் ஆண்டுக்கு 3-5 லட்சம் வாகனங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஆலை அமைக்கும் இடத்தை இறுதி செய்வது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.
சுஸுகி நிறுவனத்துக்கு ஏற்கெனவே குர்கானில் ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் வகையில் ஆலை ஒன்று உள்ளது. சுஸுகியின் இரண்டாவது புதிய ஆலை, பஞ்சாப், உத்தரபிரதேசம் அல்லது ஹரியாணாவில் அமைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com