அழிவை நோக்கி கொசுவலை தயாரிப்பு

மூலப்பொருள்கள் விலை கடும் உயர்வு, வங்கதேச கடத்தல் சரக்கு போன்ற காரணங்களால் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது கரூர் கொசு வலைத் தொழில்.
அழிவை நோக்கி கொசுவலை தயாரிப்பு

மூலப்பொருள்கள் விலை கடும் உயர்வு, வங்கதேச கடத்தல் சரக்கு போன்ற காரணங்களால் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது கரூர் கொசு வலைத் தொழில்.
வீட்டு உபயோக ஜவுளிக்கு அடுத்தபடியாக நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தருவது கரூர் கொசு வலைத் தொழில். ஆல்பாசைபர் மெத்ரின் என்ற ரசாயனம் கலந்த, கலக்காத இருவகை கொசுவலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ரசாயன கொசுவலை இந்தியாவிலேயே கரூரில்தான் உற்பத்தி செய்யப்பட்டு, ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 கோடி வரை அந்நிய செலாவணி ஈட்டித் தருகிறது. சாதாரண கொசுவலை நாடு முழுவதிலும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தென்மேற்கு பருவமழைக் காலங்களில் பல்வேறு மாநிலங்களில் விற்பனை அதிகரிக்கும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வருமானம் கிடைத்து வந்தது. தற்போது வங்கதேசத்திலிருந்து மேற்குவங்க மாநிலம் வழியாக கடத்திவரப்படும் சாதாரண ரக கொசுவலைகள் எவ்வித வரியும் இன்றி இந்தியாவுக்குள் விற்பனை செய்யப்படுவதாலும், மூலப்பொருள் விலை அதிகரித்துவிட்டதாலும், கரூர் கொசுவலைத் தொழில் அழிவை நோக்கிச் செல்கிறது.
இதுகுறித்து சாதாரண கொசுவலைத் தொழில் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் கூறுகையில், இங்கு உற்பத்திச் செய்யப்படும் கொசுவலை நேர்த்தி, தரமானதாக இருப்பதால் நாடு முழுவதும் கரூர் கொசுவலைக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அதிக வனங்கள் கொண்ட கேரளம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலும், கிணற்றுப் பாசனம் மூலம் விவசாயம் செய்யும் பகுதிகளில் மர இலைகள், குப்பைகள் கிணற்றில் விழாதவாறு தடுக்கும் வகையிலும் பயன்படுத்தப்படுகிறது. சில இடங்களில் பட்டுப் பூச்சிகளை பாதுகாப்பாக வளர்க்க அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படுகிறது. கரூர் கொசுவலைக்கு போட்டியாக மேற்கு வங்கம், பெங்களூரு உற்பத்தியாளர்கள் இருந்தனர். 
ஆனால் அவர்களால் தரமான கொசுவலைகள் உற்பத்தி செய்ய இயலாததால், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் தங்களது நிறுவனங்களை மூடிவிட்டு எங்களிடம் இருந்து வாங்கிச் சென்று விற்று வருகின்றனர்.
ஆனால் கடந்த ஓராண்டாக பெட்ரோலிய பொருள்கள் விலை உயர்வு காரணமாக, கொசுவலை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான பாலி எத்திலின் குருணையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்ற பாலி எத்திலின் தற்போது ரூ.122 வரை உயர்ந்துள்ளது.
தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கொசு வலை விற்பனை அதிகரிக்கும்; ஏற்றுதிமதியும் அதிகரிக்கும். இந்நிலையில் மூலப்பொருளின் கடும் விலை உயர்வால் கொசுவலைத் தொழில் ஸ்தம்பித்திருக்கிறது. இவற்றைத் தவிர வங்கதேசத்தின் தரமற்ற கொசுவலைகள், மேற்குவங்க மாநிலம் வழியாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு, குறைந்த விலையில் விற்கப்படுவதாலும் கரூரில் உற்பத்தியான கொசு வலைகள் தேக்கம் கண்டுள்ளன. மாதம் சுமார் 2000 டன் உற்பத்தி செய்யப்பட்டு வந்த கொசுவலைகள் தற்போது 300 டன் கூட உற்பத்தியாவதில்லை. இதனால் ஆண்டுக்கு சுமார் ரூ.250 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலியம் பொருள்கள் விலையைக் கட்டுப்படுத்துவதோடு, கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் நுழையும் வங்கதேச கொசு வலைகளை தடை செய்தால் மட்டுமே கரூர் கொசுவலைத் தொழிலை காப்பாற்ற முடியும். இதுதொடர்பாக மத்திய அரசிற்கும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com