தீவிரமடைந்து வரும் அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்!: சென்செக்ஸ் 73 புள்ளிகள் சரிவு

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள கடும் வர்த்தக போட்டியின் எதிரொலியால் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம்
தீவிரமடைந்து வரும் அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்!: சென்செக்ஸ் 73 புள்ளிகள் சரிவு

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள கடும் வர்த்தக போட்டியின் எதிரொலியால் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் மந்தமாக காணப்பட்டதுடன் சென்செக்ஸ் 73 புள்ளிகள் சரிவைக் கண்டது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 5,000 கோடி டாலர் மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார். மேலும், சீனா நேர்மையற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 
இந்த நடவடிக்கைக்குப் போட்டியாக சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதே அளவுக்கு வரி விதிப்பை அமல்படுத்தியது. இதையடுத்து, உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக திகழும் இரண்டு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த வர்த்தகப் போரால் பிற நாடுகளும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, சர்வதேச முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
மேலும், கச்சா எண்ணெய் விலையில் ஸ்திரத்தன்மை காணப்படுவதையடுத்து, நடப்பு வாரத்தில் ஒபெக் மற்றும் ரஷிய நாடுகளிடையே நடைபெறவுள்ள கூட்டத்தில் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையில் தளர்வு ஏற்படுத்தும் முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்பதை எதிர்பார்த்தும் முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சியடையும் என்ற நிலைப்பாட்டால் மும்பை பங்குச் சந்தையில் உலோகத் துறை குறியீட்டெண் 1.76 சதவீதம் சரிந்தது. இதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பம் 0.80 சதவீதமும், தொழில்நுட்பம் 0.73 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 0.68 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் துறை குறியீட்டெண் 0.58 சதவீதமும் குறைந்தன.
அதேசமயம், எண்ணெய்-எரிவாயு, பொதுத் துறை, வங்கி, மருந்து துறை குறியீட்டெண்கள் 1.25 சதவீதம் வரை அதிகரித்தன.
வேதாந்தா பங்கின் விலை 2.70 சதவீதமும், கோட்டக் வங்கி 1.97 சதவீதமும், பார்தி ஏர்டெல் 1.67 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்கின் விலை 1.28 சதவீதமும் குறைந்தன. அதேநேரம், ஐசிஐசிஐ வங்கி பங்கின் விலை 3.61 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 1.83 சதவீதமும் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 73 புள்ளிகள் சரிந்து 35,548 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 17 புள்ளிகள் குறைந்து 10,799 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com