இன்னும் இறங்குமா மொபைல் கட்டணங்கள்?

ரிலையன்ஸ் ஜியோ உலுக்கிய உலுக்கலில், கடந்த 6 மாதங்களில் மட்டும் செல்லிடப் பேசி நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை சராசரியாக 30-லிருந்து, 40 சதவீதம் வரை குறைத்திருக்கின்றன.
இன்னும் இறங்குமா மொபைல் கட்டணங்கள்?

ரிலையன்ஸ் ஜியோ உலுக்கிய உலுக்கலில், கடந்த 6 மாதங்களில் மட்டும் செல்லிடப் பேசி நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை சராசரியாக 30-லிருந்து, 40 சதவீதம் வரை குறைத்திருக்கின்றன.

ஒரு ஜி.பி. இணையதள பரிமாற்றத்துக்கே ரூ.300-க்கு மேல் தீட்டிய நிறுவனங்கள்கூட தற்போது தினமும் ஒரு ஜி.பி. தருகின்றன.

நிமிடத்துக்கு நிமிடம், நொடிக்கு நொடி என்று தொலைபேசி அழைப்புகளுக்கு கந்துவட்டி போல் கட்டணம் வசூலித்தவர்கள், இன்று ஒரு முறை பணம் கட்டினால் மாதம் முழுவதும் வரம்பற்ற இலவச அழைப்புகளை வாரி வழங்குகிறார்கள்.
இப்போதெல்லாம் வாடிக்கையாளர்களில் "மிஸ்டு கால் பார்ட்டி' என்று பெயர் வாங்கியவர்கள் கூட, செல்லிடப் பேசியில் தாங்களே அழைத்து, மணிக்கணக்கில் பேசுகிறார்கள்.
ஒருசிலருக்கு செல்லிடப் பேசி சேவைகளுக்காக ஆகும் மாதாந்திர செலவு 90 சதவீதம் வரை மளமளவென்று வீழ்ந்திருக்கிறது.
போகிறப் போக்கைப் பார்த்தால், ரிலையன்ஸ் ஜியோவின் தயவில் இந்தக் கட்டணங்கள் இன்னும் வீழ்ச்சியடைந்து, இப்போதுள்ள கட்டணச் சுமைகள் கூட பஞ்சு மாதிரி பறந்துவிடும் என்று பலருக்கும் தோன்றும்.
இன்னும் சொல்லப்போனால், ஒரு 100 ரூபாய்க்கு மாதம் முழுவதும் வரம்பற்ற அழைப்பு வசதியும், முடிவில்லாத அதிவேக இணையதள இணைப்பும் எப்போது வரும் என்று கனவுகளுடன் காத்திருக்கும் இளைஞர்களும், குடும்பஸ்தர்களும் ஏராளமாக இருக்கிறார்கள்.
ஆனால், தொடர்ந்து சரிந்து வந்த தொலைபேசிக் கட்டணங்கள் இனியும் சரியுமா?
ஜியோவின் சித்துவேலை தொடருமா?
நிச்சயம் இல்லை என்கிறார்கள் இந்தத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள்.
காரணம், ஜியோ எழுப்பிய பூகம்பத்தில் தங்களது சாம்ராஜ்யம் தரைமட்டமாகிவிடக் கூடாது என்பதற்காக மற்ற நிறுவனங்கள் மளமளவென்று கட்டணங்களைக் குறைத்தாலும், அதற்காக அவை இழந்தவை ஏராளம்.
ஜியோ வரவுக்குப் பிறகு, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற முன்னணி செல்லிடப் பேசி சேவை நிறுவனங்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டின் ஜூன் மாதத்திலிருந்து 2017-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் வரையிலான வருவாயில் முந்தை ஆண்டைவிட சுமார் ரூ.61,820 கோடி இழப்பு ஏற்பட்டது.
நிறுவனங்கள் இழந்த இந்தக் கோடிகளின் பெரும்பங்கு, வாடிக்கையாளர்கள் சட்டைப் பைக்குள்தான் போனது என்பது மற்றொரு விஷயம்.
செல்லிடப் பேசி சேவைக் கட்டணங்கள் மூலம்தான் என்றில்லை, 4ஜி செல்லிடப் பேசிகளின் விற்பனைக்காக அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் இணைந்து சேவை நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்ததாலும் வாடிக்கையாளர்கள் கணிசமான தொகை மிச்சம் பிடித்தனர்.
இணையதள வசதியை அதிக அளவில், மிக வேகமாக அளிக்கும் நவீன ரக செல்லிடப் பேசிகளை, மிகக் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் சேவை நிறுவனங்கள் மும்முரம் காட்டின. எனினும், இந்த முயற்சிகளால் நிறுவனங்களின் லாபத்தில் எந்த மாற்றமும் எல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
நிறுவனங்கள் இவ்வளவு சோகமாக இருக்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு சுகமளிக்கும் கட்டண வீழ்ச்சிகளை இனியும் எதிர்பார்க்க முடியாது என்று கூறும் சந்தை நிபுணர்கள், வழக்கமான கட்டணத்திலேயே இணையதள பரிவர்த்தனைகள், கேளிக்கை வசதிகள் ஆகியவற்றை கூடுதலாகப் பெறுவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.
உதாரணத்துக்கு, குறிப்பிட்ட தொகைக்கு மேல் கட்டணம் செலுத்துபவர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் அமேஸான் பிரைம் கேளிக்கை வலைதள சேவையையும், வோடஃபோன் நெட்ஃப்ளிக்ஸ் கேளிக்கை வலைதள சேவையையும் இலவசமாக அளிக்கிறது. இதுபோன்ற சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் முயற்சியில் மற்ற செல்லிடப் பேசி சேவை நிறுவனங்களும் இறங்கியுள்ளன.
எப்படிப் பார்த்தாலும், இதற்கு மேல் வாடிக்கையாளர்களின் மாதாந்திர செல்லிடப் பேசிக் கட்டணச் செலவு இன்னும் ஓராண்டு வரை 10 முதல் 15 சதவீதத்துக்கு மேல் குறைய வாய்ப்பில்லை என்று சந்தை ஆய்வாளர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். எனவே, இனியும் கட்டணங்கள் குறையும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதை விடுத்துவிட்டு, புதுப் புது சேவைகளை வரவேற்கத் தயாராவோம்!

ஜூன் 2016 - டிசம்பர் 2017

மொபைல் கட்டண வீழ்ச்சியால் நிறுவனங்களின் வருவாய் இழப்பு ரூ.61,820 கோடி

இழந்தவர்கள் (கோடியில்)

ஏர்டெல் ரூ.15,618
வோடஃபோன் ரூ.11,713
ஐடியா ரூ.10,412
பிஎஸ்என்எல் ரூ.5,206
ஆர்-காம் ரூ.5,206
டாடா டெலி ரூ.5,856
ஏர்செல் ரூ.4,555
டெலிநார் ரூ.1,952
எஸ்எஸ்டிஎல் ரூ.1,302
பெற்றவர்கள் (கோடியில்)
ரிலையன்ஸ் ஜியோ ரூ.21,474
வாடிக்கையாளர்கள் ரூ.40,997
(தொகைகள் தோராயமாக)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com