ஏப்ரலில் ஆட்டோமொபைல் துறை...

நடப்பு நிதியாண்டின் தொடக்க மாதமான ஏப்ரலில், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கணிசமான விற்பனை வளர்ச்சியைக் கண்டுள்ளன. 
ஏப்ரலில் ஆட்டோமொபைல் துறை...

நடப்பு நிதியாண்டின் தொடக்க மாதமான ஏப்ரலில், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கணிசமான விற்பனை வளர்ச்சியைக் கண்டுள்ளன. 
புதிய அறிமுகங்களுக்குக் கிடைத்த வரவேற்பு, சிலவகை வாகனங்களுக்கான தேவை அதிகரித்தது போன்ற காரணங்களால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டிவிஎஸ் மோட்டார் +24%
இரு சக்கர வாகனங்களுக்கான தேவை கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரித்ததாகக் கூறப்படும் நிலையில், அந்த மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது 2.93 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ஏப்ரலை விட 21.7 சதவீதம் அதிகமாகும். ஒட்டுமொத்த வாகன விற்பனையில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரலில் 2.46 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த அந்த நிறுவனம், கடந்த மாதம் 3.4 லட்சம் வாகனங்களை விற்றுள்ளது. இது, 24 சதவீத வளர்ச்சியாகும்.
மாருதி சுஸுகி +14.4%
நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுஸுகி நிறுவனம், 2017-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தைவிட கடந்த ஏப்ரல் மாதத்தில் 14.4 சதவீதம் அதிக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டின் ஏப்ரலில் 1.52 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 1.73 லட்சம் ஆகும். நிறுவனத்தின் ஏற்றுமதி மட்டும் கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தைவிட (6,723) இந்த ஆண்டின் ஏப்ரலில் (8,008) 19.1 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
மஹிந்திரா டிராக்டர்ஸ் +18%
2017-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனம் 18 சதவீத விற்பனை வளர்ச்சியைக் கண்டுள்ளது. முந்தைய ஆண்டின் ஏப்ரலில் 26,151 டிராக்டர்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனத்தின் கடந்த மாத விற்பனை 30,925 டிராக்டர்களாக உள்ளது. உள்நாட்டில் மட்டும் கடந்த மாதம் 29,884 டிராக்டர்களை விற்பனை செய்து, முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தைவிட 19 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் +86%
கடந்த மாதம் டாடா மோட்டார்ஸின் உள்நாட்டு விற்பனை 53,511 வாகனங்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதம் அந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனையான 28,844- வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 86 சதவீதம் அதிகமாகும். ஏற்றுமதியைப் பொருத்தவரை 2017 ஏப்ரல் மாதத்தைவிட 41 சதவீதம் அதிகமாக, 3,010 வாகனங்களை டாடா மோட்டார்ஸ் கடந்த மாதம் ஏற்றுமதி செய்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் +6%
கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 56,368 வாகனங்களை விற்பனை செய்த ஹூண்டாய், இந்த ஆண்டின் அதே மாதத்தில் 59,744 வாகனங்களை விற்பனை செய்து 6 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. உள்நாட்டு விற்பனையைப் பொருத்தவரை 46,735 வாகனங்களுடன் 4.4 சதவீத வளர்ச்சியையும், ஏற்றுமதியைப் பொருத்தவரை 13,009 வாகனங்களுடன் 12 சதவீத உயர்வையும் அந்த நிறுவனம் அடைந்துள்ளது.
ஃபோர்டு இந்தியா -39%
கடந்த ஏப்ரல் மாதத்தில் 15,281 வாகனங்களை ஃபோர்டு மோட்டார்ஸ் விற்பனை செய்தது. எனினும், முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தில் அந்த நிறுவனம் விற்பனை செய்த 25,149 வாகனங்களோடு ஒப்பிடுகையில், இது 39 சதவீதம் குறைவாகும். உள்நாட்டு விற்பனையைப் பொருத்தவரை, 7,428 வாகனங்களுடன், முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தைவிட 2.49 சதவீதம் சரிந்துள்ளது.
விஇசிவி +28%
முன்னணி வர்த்தக வாகன நிறுவனங்களான வால்வோ மற்றும் எய்ஷர் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான விஇ கமர்ஷியல் வெஹிக்கல்ஸ் (விஇசிவி) கடந்த ஏப்ரல் மாதம் 3,959 வாகனங்களை விற்பனை செய்து, 2017 ஏப்ரல் மாத விற்பனையை விட 28.1 சதவீத உயர்வைக் கண்டிருக்கிறது. அந்த மாதத்தில் நிறுவனத்தின் விற்பனை 3,089-ஆக இருந்தது. உள்நாட்டுச் சந்தையைப் பொருத்தவரை இந்த ஏப்ரலில் 3,389 வாகனங்களை விற்பனை செய்து, கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தைவிட 31.5 சதவீதம் வளர்ச்சியடைந்திருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com