சேமிப்பே பாதுகாப்பு!

கடன் வாங்காமல், வருவாய்க்குள் செலவுகளை முடித்துக் கொள்வது ஒரு சாமர்த்தியம்தான். குடும்பத்தின் பல செலவுகளுக்கு இடையில் சேமிப்புக்கும் கட்டாயமாக ஒரு சிறு பகுதியை ஒதுக்குபவர்கள் ஒரு ரகம்.
சேமிப்பே பாதுகாப்பு!

கடன் வாங்காமல், வருவாய்க்குள் செலவுகளை முடித்துக் கொள்வது ஒரு சாமர்த்தியம்தான். குடும்பத்தின் பல செலவுகளுக்கு இடையில் சேமிப்புக்கும் கட்டாயமாக ஒரு சிறு பகுதியை ஒதுக்குபவர்கள் ஒரு ரகம். இந்தப் பிரிவினரை மாதச் செலவுப் பட்டியலில் சேமிப்பையே செலவெனக் கருதி, தொகை ஒதுக்கும் ரகம் என்று கூறலாம்!

முறையான சேமிப்பை ஊக்குவிக்க பல திட்டங்கள் உள்ளன. சேமிப்பு திட்டங்கள் என்று நோக்கும்போது, ஆயுள் காப்பீடு, அஞ்சலகத்தில் பி.பி.எஃப்., தனியார் சேம நல நிதிக் கணக்கு, பரஸ்பர நிதித் திட்டங்கள் என்று, முதலீட்டுக்கு கூடுதல் வட்டி வருவாய் அளிக்கும் பல திட்டங்கள் உள்ளன. 

முறையாக சேமிக்கும் பழக்கம் என்பது எதிர்காலத் தேவைக்கு உதவுவதோடு, உடனடிப் பலனாக வருமான வரிச் சலுகை போன்றவற்றையும் பெறலாம். வருமான வரிச் சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வெவ்வேறு விகிதத்தில் வருமான வரிச் சலுகை பெறலாம். இதில் மிகப் பொதுவான - பிரபலமான பிரிவு - 80-சி பிரிவுதான். இந்தப் பிரிவின் கீழ் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை சேமித்து, வருமான வரிச் சலுகை பெறலாம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கும் ஆயுள் காப்பீடு செய்திருந்தால், அதன் பிரீமியம் தொகையை சேமிப்பாக கருதி வருமான வரி சட்டம் 80-சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம். உங்கள் பிள்ளைகளின் பள்ளிக் கல்விக் கட்டணத் தொகைக்கும் இந்தப் பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை உண்டு. வருவாயை திட்டமிட்டு செலவு செய்து, நீண்ட கால சேமிப்பை ஊக்குவிக்க இது வழிவகுக்கிறது. 

தபால் நிலையங்களிலும், பொதுத் துறை வங்கிகள் மூலமாகவும் உங்கள் பெயரில் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கு (பி.பி.எஃப்.) இல்லையென்றால், உடனடியாக அதைத் தொடங்குங்கள்! இன்றைய அளவில், அதுபோன்ற சிறந்த நீண்ட கால சேமிப்புத் திட்டமே இல்லை எனலாம். அஞ்சலக பி.பி.எஃப். திட்டத்தில் சேர வெறும் நூறு ரூபாய்தான் தேவை! அதன் பின்னர் ஆண்டுக்கு ரூ. 500 முதல் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை உங்கள் செüகரியம் போல சேமிக்கலாம். நமது வசதிக்கேற்ற மாறுபட்ட சேமிப்புத் தவணைத் தொகை என்பதுதான் இதன் மிக சாதகமான அம்சம். இன்றைய அளவில் இதற்கு வட்டி 7.6 சதவீதம். இத்திட்டத்தின் கால அளவு பதினைந்து ஆண்டுகள். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வட்டியும் முதலும் திரண்டு கூட்டு வட்டி முறையில், உங்கள் சேமிப்புக்கு நல்ல வருவாயை அளிக்கக் கூடியது பி.பி.எஃப். திட்டம். மூன்றாம் ஆண்டிலிருந்து உங்கள் அவசரத் தேவைக்கு சேமிக்கப்பட்ட தொகையிலிருந்து கடன் பெறலாம். கணக்கு தொடங்கிய ஏழாம் ஆண்டிலிருந்து குறிப்பிட்ட அளவு தொகையைத் திரும்ப எடுத்துக் கொள்ளலாம். பதினைந்து ஆண்டுகள் நிறைவடையும்போது, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு சேமிப்புக் கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம்.

பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும் பங்கு முதலீட்டுடன் தொடர்புள்ள சேமிப்புத் திட்டங்களில் (இ.எல்.எஸ்.எஸ்.) சேமித்து வருகிறீர்களா? அந்தத் தொகைக்கு 80-சி பிரிவின் கீழ் வருமான வரி விலுக்கு உண்டு. பங்குடன் தொடர்புடைய இ.எல்.எஸ்.எஸ். திட்டங்கள் மூலம் பெறப்படும் தொகையை பங்குச் சந்தைகள், அரசு வெளியிடும் பத்திரங்களில் முதலீடு செய்து, நமக்கு வருவாயை அளிக்கின்றன பரஸ்பர நிதி நிறுவனங்கள். பொதுவாக இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் சேர்ந்தால் மூன்றாண்டுகள் நிறைவடையும் முன்னர் அதிலிருந்து விலக முடியாது. அதாவது, குறைந்தபட்ச சேமிப்பு காலம் மூன்றாண்டுகள் எனலாம். பங்குச் சந்தை பெரும் லாபம் ஈட்டித் தரும் நிலையில், நமது வருவாயும் கூடும். பங்குச் சந்தை, அரசு பத்திரங்களில் எந்த விகிதத்தில் நமது சேமிப்பை முதலீடு செய்ய வேண்டும் என்று நாமே தீர்மானித்து பரஸ்பர நிதி நிறுவனத்துக்குத் தெரிவிக்கவும் முடியும். இ.எல்.எஸ்.எஸ். முறையில் சேமிக்கும் தொகைக்கு 80-சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.

தேசிய சேமிப்பு பத்திரங்கள் (நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட் என்கிற என்.எஸ்.சி.) தபால் நிலையங்கள் வழியாகப் பெறக் கூடிய சேமிப்பு வழிமுறையாகும். இன்றைய அளவில் இதற்கு 7.6 சதவீத வட்டி வழங்குகிறது மத்திய அரசு. குறைந்தபட்சமாக, நூறு ரூபாய்க்கும் கூட தேசிய சேமிப்பு பத்திரம் பெற முடியும். என்.எஸ்.சி. சேமிப்புக்கு உச்ச வரம்புத் தொகை கிடையாது. இந்தப் பத்திரத்தின் கால அளவு ஐந்தாண்டுகள். 

பெண் குழந்தைகளின் பெயரில் தொடங்கக் கூடிய மற்றொரு சேமிப்புத் திட்டம் சுகன்யா சம்ருத்தி திட்டம். ஓராண்டுக்கு குறைந்த பட்சம் ரூ. 1000 சேமிக்கலாம். பெண் குழந்தை பிறந்த தேதி முதல் அந்தக் குழந்தை பத்து வயதை அடையும் வரையில் இத்திட்டத்தில் சேர இயலும். பெண் 18 வயதை அடையும்போது, சேமித்துள்ள தொகையில் பாதியளவைத் திரும்பப் பெறலாம். பெண் 21 வயதை அடையும்போது சேமிப்புக் கணக்கை முடித்துக் கொண்டு சேமித்த தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். தற்போது இந்த திட்டத்திற்கான வட்டித் தொகை 8.1 சதவீதமாக உள்ளது. பெண் குழந்தையைப் பெற்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறந்த திட்டம் இது.

அதே போல, ஆயுள் காப்பீடும் நீண்ட கால அளவில் உறுதியான, பாதுகாப்பான ஒரு தொகையை உங்களுக்கு வழங்கக் கூடியது. இந்தத் திட்டத்தின் மற்றொரு சாதகமான அம்சம், அதன் பெயரே குறிப்பிடுவது போல, ஆயுளுக்கும் காப்பீடாக அது அமையும். 

சேமிப்புத் தொகைகளுக்கு வருமான வரி சலுகை அளிப்பது என்பது நமது சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவே. இதனை இரட்டை நலன் எனக் கூறலாம். நாளைக்கு உதவும் இன்றைய சேமிப்பு என்னும் நலனுடன், வருமான வரிச் சலுகையும் கிடைப்பதுதான் இரு நலன்கள். இது போல, பல வகை சேமிப்புகள், வட்டி செலுத்துதல், கட்டணங்கள் வருமான வரிச் சலுகையைப் பெற்றுத் தருகின்றன. ஆயினும், வரிச் சலுகையை மட்டும் கருத்தில் கொண்டு சேமிக்காமல், எதிர்காலத் தேவையை நோக்கமாகக் கொண்டு சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இன்றைய சேமிப்பே நாளைய பாதுகாப்பு என்பதை உணர்ந்து சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com