ஆதார்: மின்னணு பொருளாதாரத்தின் ஆதாரம்

ஆதார் தொடர்பாக, கடந்த செப்டம்பர் 26-இல் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாஸன அமர்வு அளித்த தீர்ப்பு பலவகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, நமது அரசியல் சாஸனம் அளிக்கும் அடிப்படை உரிமைகளை
ஆதார்: மின்னணு பொருளாதாரத்தின் ஆதாரம்

ஆதார் தொடர்பாக, கடந்த செப்டம்பர் 26-இல் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாஸன அமர்வு அளித்த தீர்ப்பு பலவகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, நமது அரசியல் சாஸனம் அளிக்கும் அடிப்படை உரிமைகளை ஆதார் மீறவில்லை என்றும், வருங்காலத்தில் மின்னணுப் பொருளாதாரத்தின் அடையாளமாக ஆதார் விளங்கும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

உச்சநீதிமன்றம் ஆதாருக்கு முழுமையாகத் தடை விதிக்கும் என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் பொய்யானது. இருப்பினும், ஆதார்-வங்கிக் கணக்கு இணைப்பு, தனியார் நிறுவனங்கள் ஆதார் எண் பதிவது, செல்லிடப்பேசி இணைப்புக்கு கட்டாயம் ஆக்குவது ஆகியவற்றை உச்சநீதிமன்றம் ஏற்காமல் நிராகரித்துவிட்டது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மத்திய அரசு இதுநாள் வரை ஆதார் எண் இணைப்பை வலியுறுத்திக் கூறிவந்த கருத்துகளை நீதிமன்றம் ஏற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

ஆதார் எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் எண்ணானது, நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருக்கும் வழங்கத் திட்டமிடப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாட்டின் குடிமகன்கள் அனைவருக்குமான பொது அடையாள அட்டை உருவாக்கப்படவில்லை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதுதான் ஆதார் என்ற தனித்துவ அடையாள எண் சாத்தியமானது. தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேகனி தலைமையில் அமைந்த ஆணையம் அதற்கான அடிப்படைப் பணிகளை மேற்கொண்டது. அடுத்து அமைந்த நரேந்திர மோடி அரசு ஆதாரை சமூக நலத் திட்டங்களிலும் வருமான வரித் துறையிலும், வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி இணைப்பு ஆகியவற்றிலும் கட்டாயமாக்கியது.

எனினும், ஆதார் தனி மனித அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி மத்திய அரசின் முயற்சிகளை எதிர்த்து பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதனால் ஆதாரின் அடிப்படையே கேள்விக்குறியாகியது. ஆனால், உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பால், இந்திய குடிமக்களின் எதிர்கால "அடிப்படையாக' ஆதார் மாறிவிட்டது!

நமது நாட்டின் மக்கள்தொகை 132 கோடிக்கும் மேல். இவர்களில் இதுவரை 122.65 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. இது 93.5 சதவீதமாகும். இத்துணை பேருக்கு, உயிரியல் பதிவுகள், 12 இலக்க எண் கொண்ட தனித்துவ அடையாளம் வழங்கப்பட்டிருப்பது ஓர் உலக சாதனை. இதனை உலக வங்கி போன்ற அமைப்புகளும் உலக நாடுகள் பலவும் பாராட்டுகின்றன. இதன் மூலம் முறைகேடுகள் தடுக்கப்பட்டிருப்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.

ஆயினும், ஆதாரை அறிமுகப்படுத்திய காங்கிரஸ் கட்சியே, அரசியல் நோக்கங்களுடன் அதனை எதிர்த்தது. மனித உரிமைப் போராளிகளும் தங்கள் பங்கிற்கு எதிர்த்தனர். இறுதியில் உச்சநீதிமன்றம் உறுதியான, தெளிவான தீர்ப்பை வழங்கியதன் மூலம், இதுவரையிலான ஆதார் செயல்பாடுகளை அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் சமூக நலத் திட்டங்களின் பயன்கள் தேவையானவர்களுக்கு மட்டும் கிடைப்பதும், வருமான வரித் துறையில் சீர்திருத்தமும் சாத்தியமாகி உள்ளன.

ஆதார் மூலமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது சீரடைந்துள்ளது. "பான்'- ஆதார் இணைப்பு மூலமாக, ஒருவரே பல "பான்' எண்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டு களையப்பட்டுள்ளது. ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட "பான்' எண் பெறுவது குற்றம் என்றபோதிலும், வருமான வரி ஏய்ப்புக்கு இந்த மோசடி வழிமுறையைப் பின்பற்றி வந்தனர். ஆதாருடன் இணைந்த சரிபார்ப்பு இதனைத் தடுக்கிறது. இதுவரை 11.44 லட்சம் போலி "பான்' அட்டைகள் ஒழிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்ல, போலி "பான்' அட்டைகள் மூலம் இயங்கி வந்த 7.75 லட்சம் போலி நிறுவனங்களும், முறைகேடான வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. இது கடந்த ஆண்டு புள்ளிவிவரம் என்பதைக் குறிப்பிட வேண்டும். இதுவரை கருப்புப் பணத்தை வெள்ளையாக்கவும், வெளிநாடுகளிலிருந்து வரும் முறைகேடான பணத்தைப் பெறவும் இந்த போலி நிறுவனங்களும் போலி வங்கிக் கணக்குகளும் பயன்பட்டு வந்தன. ஆக, "பான்' - ஆதார் இணைப்பால் கருப்புப் பண ஒழிப்பும் உறுதியாகி உள்ளது.

ஆதார் - வங்கிக் கணக்கு இணைப்பு தேவையில்லை என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. ஆனால் வரி ஏய்ப்பு, கருப்புப் பண ஒழிப்பை முன்வைத்து, ஆதார் - வங்கிக் கணக்கு இணைப்பை உறுதி செய்யும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார்.

சமூக நலத் திட்டங்களில் ஆதாரை இணைத்ததன் மூலமாக, பெருமளவிலான போலி பயனாளிகளை மத்திய அரசால் நீக்க முடிந்திருக்கிறது. உதாரணமாக, பொது விநியோகத் துறையில் ஊழியர்களும் அதிகாரிகளும் செய்து வந்த முறைகேடுகளால் உண்மையான பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் முழுமையாகச் சென்றடைவது கனவாக இருந்து வந்தது. போலி குடும்ப அட்டைகள் வாயிலாக அரசின் மானியம் விரயமாகி வந்தது.

குடும்ப அட்டைகளுடன் ஆதார் இணைப்பைக் கட்டாயமாக்கியதால், பல லட்சக் கணக்கான போலி பெயர்கள் நீக்கப்பட்டன. தவிர, 2016-17இல் மட்டும் 3.95 கோடி போலி குடும்ப அட்டைகள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டன. இவற்றில் தமிழகத்தில் 5.5 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டன. இதனால் அரசின் பல கோடி மானியத் தொகை மிச்சமாகியுள்ளது.

தற்போது மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் 78 வகையான சமூக நலத் திட்டங்களால் கோடிக்கணக்கான எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இவற்றில் உண்மையான பயனாளிகளுக்கு நலத் திட்டங்கள் சென்றடைய ஆதார் இணைப்பு உதவிகரமாக உள்ளது. இதனையே உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தனது வாதத்தில் முன்வைத்தது.

சமையல் எரிவாயு இணைப்புடன் ஆதாரை இணைத்ததன் வாயிலாக 14.5 கோடியாக இருந்த எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை }போலிகள் களையப்பட்டு - 11.9 கோடியாகக் குறைந்தது. போலி பயனாளிகள் நீக்கப்பட்டதால் 2014-15இல் மட்டும் ரூ. 12,700 கோடி மிச்சமானதாக, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியம் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆதார் உதவியுடன் கூடிய நேரடி மானியத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதால் 2018 மார்ச் 31 வரை ரூ. 90,000 கோடி அரசுக்கு மிச்சமாகியுள்ளதாக, நீதி ஆயோக் நிர்வாகி ஜே.சத்யநாராயணன் கூறியுள்ளதையும் இங்கு நினைவுகூரலாம். ஆதார் அட்டையை அரசுத் திட்டங்களில் ஒருங்கிணைப்பதில் மத்திய அரசு காட்டிவந்த கண்டிப்புக்கு கிடைத்த பயன்களை இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுவதாக உள்ளன.

தவிர, ஆதார் உதவியுடன் கூடிய எண்ம (டிஜிட்டல்) கையொப்பம், முதியோரின் இருப்புச் சான்றிதழ் ஆகியவை அலைக்கழிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன. வருங்கால வைப்பு நிதிப் பரிமாற்றத்திலும் பத்து நாள்களில் பணம் பயனாளிகளைச் சென்றடைய ஆதார் உறுதுணையாக உள்ளது. பாஸ்போர்ட் பெறுவதிலும்கூட புரட்சிகரமான மாற்றத்தை ஆதார் கொண்டுவந்துள்ளது. இணையவழியில் ஆதாருடன் விண்ணப்பித்தால் மூன்றே நாள்களில் நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. பங்குச் சந்தையில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதும், விவசாய நிலப்பதிவேடுகளுடன் ஆதார் இணைக்கப்பட இருப்பதும் வரும் நாட்களில் பல பயன்களை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாத்திரத்தின் ஓட்டைகளை அடைப்பதன் மூலம் கசிவுகள் தடுக்கப்படுவது போல ஆதார் பல வகைகளில் அரசு நிதி விரயமாவதைத் தடுப்பதுடன், தேவையுள்ள பயனாளிகளுக்கு மட்டும் அரசு மானியம் சேர்வதை உறுதிப்படுத்துகிறது. அதனால்தானோ, உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், "மின்னணுப் பொருளாதாரத்தின் அடையாளம் ஆதார்' என்று கூறியது?

 ஆதார் எண் பெற்றவர்கள் விகிதம்

ஆதார் எண் சரிபார்ப்பு மூலம் போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு, களையப்பட்டதில் ரூ. 14,000 கோடி சமையல் எரிவாயு மானியம் சேமிக்கப்பட்டது.

 - வ.மு. முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com