சென்செக்ஸ் 463 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 463 புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்தது.
சென்செக்ஸ் 463 புள்ளிகள் வீழ்ச்சி


மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 463 புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்தது.
வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க ரிசர்வ் வங்கி அதற்கான விதிமுறைகளை தளர்த்தியது. எனினும், இந்த நடவடிக்கைகளால் பங்குச் சந்தைகளில் எந்தவித சாதகமான பலனும் கிடைக்கவில்லை.
அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இழுபறியால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டு வருகிறது. மேலும், அமெரிக்க மத்திய வங்கி வரும் டிசம்பர் மாதத்துக்குள் வட்டி விகிதங்களை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, வளர்ந்து வரும் நாடுகளின் பங்குச் சந்தைகளிலிருந்து முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர். இதுவும், சந்தைகளின் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்ப துறை பங்குகளின் விலை அதிகபட்சமாக 2.60 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதையடுத்து, தொழில்நுட்பம் 2.41 சதவீதமும், மோட்டார் வாகனம் 1.42 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 0.76 சதவீதமும், உள்கட்டமைப்பு 0.75 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் துறை பங்குகளின் விலை 0.68 சதவீதமும் சரிந்தன.
இரண்டாம் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 17.4 சதவீதம் அதிகரித்து ரூ.9,516 கோடியாகவும், வருவாய் 54.5 சதவீதம் உயர்ந்து ரூ.1,56,291 கோடியாகவும் இருப்பதாக தெரிவித்த நிலையிலும், அந்நிறுவனப் பங்கின் விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 4.11 சதவீதம் சரிவடைந்தது. இதற்கு, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலமாக கிடைக்கும் மொத்த லாபம் குறைந்ததை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொண்டதே காரணம் என சந்தை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
இதைத் தவிர, ஹெச்டிஎஃப்சி பங்கின் விலை 4.32 சதவீதமும், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், திவான் ஹவுசிங் பைனான்ஸ், ஐஎல் அண்டு எஃப்எஸ் என்ஜினியரிங் அண்டு கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனப் பங்குகளின் விலை 16.55 சதவீதம் வரையிலும் குறைந்து போயின.
அதேசமயம், சன் பார்மா பங்கின் விலை 2.52 சதவீதமும், கோட்டக் வங்கி 1.74 சதவீதமும் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 463 புள்ளிகள் சரிவடைந்து (1.33%) 34,315 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 149 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 10,303 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com