குறு, சிறு தொழில்: அரசு அனுமதி பெற ஒற்றைச் சாளர வலைதளம்

குறு, சிறு தொழில் முனைவோர் தொழில் துவங்குவதற்கு பல அரசுத் துறைகளின் அனுமதி பெறுவதை எளிதாக்கும் வகையில் தமிழக அரசின் ஒற்றைச் சாளர வலைதளம் பயன்பாட்டில் உள்ளது. 
குறு, சிறு தொழில்: அரசு அனுமதி பெற ஒற்றைச் சாளர வலைதளம்

குறு, சிறு தொழில் முனைவோர் தொழில் துவங்குவதற்கு பல அரசுத் துறைகளின் அனுமதி பெறுவதை எளிதாக்கும் வகையில் தமிழக அரசின் ஒற்றைச் சாளர வலைதளம் பயன்பாட்டில் உள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நாட்டின் தொழில் துறையில் முக்கியப் பங்காற்றுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீத பங்களிப்பை வழங்கும் இந்தத் துறை, 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை தற்போது வழங்கி வருகிறது. கடந்த நான்காண்டுகளில் 4 கோடி வேலைவாய்ப்புகளை இத்துறை வழங்கியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் மட்டுமே 5 கோடி வேலைவாய்ப்புகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படித்து, தொழில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை இந்த தொழில் துறைதான் அதிக அளவு வழங்கி வருகிறது. அதனால் அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்துப் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. கடனுதவி, மானிய உதவி, புதிய தொழில் தொடங்குவதற்கு விரைந்து அனுமதி வழங்குவது உள்பட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. அதோடு மட்டுமல்லாமல் பொதுத் துறை நிறுவனங்களும், மத்திய அரசின் பல்வேறு துறைகளும் தங்களுடைய ஆண்டு கொள்முதலில் 20 சதவீத அளவுத் தேவையை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து வாங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிதாகத் தொடங்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரசின் பல்வேறு துறைகளிடமிருந்து அனுமதி பெற வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது. நகர மற்றும் ஊரமைப்பு திட்டமிடல் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, தொழிலாளர் நலத் துறை, தொழிலக பாதுகாப்புத் துறை, சுகாதார இயக்ககம், மின்சார வாரியம், கொதிகலன் (பாய்லர்) இயக்ககம் உள்ளிட்ட துறைகளின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியமாகும். 

புதிய தொழில் தொடங்க ஒவ்வொரு துறையிடமிருந்தும் தனித் தனியாக அனுமதி பெற வேண்டியிருப்பதால், ஒவ்வொரு கட்டத்திலும் கால தாமதம் ஏற்படுவது இன்றைய நிலையில் மிகவும் சகஜமாக உள்ளது. 
இதைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிடமிருந்து உரிய அனுமதிகள் பெறுவதற்கு தமிழக அரசின் ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென தனியாக வலைதளமும் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
புதிதாக தொழில் தொடங்க அனுமதி பெற விரும்புகிறவர்கள் அதற்கான குறிப்பிட்ட வலைதளம் மூலமாகப் பதிவு செய்து கொண்டு, அதற்கான உள்ளீட்டு முகவரி மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த உள்ளீட்டு முகவரி மூலம், வலைதளம் வாயிலாக நிறுவனத்தை தொடங்குவதற்கான அனைத்து அரசுத் துறைகளின் அனுமதியைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். வலைதளத்தில் கேட்கப்படும் விவரங்களை உள்ளீடு செய்து, அனுமதிகள் கோரி விண்ணப்பிக்கலாம். 
மேலும், அந்த வலைதளத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்குவதற்கான பதிவுச் சான்று, மானிய உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை, பெரிய தொழில் நிறுவனங்களுக்கு பொருட்களை சப்ளை செய்ததற்கான பணம் நிலுவை வைக்கப்படும்போது, அதை பெற்றுத் தருவதற்காக ஃபெசிலிடேஷன் கவுன்சில் என்னும் உதவி மையத்துக்கு புகார் அளிப்பது ஆகியவற்றுக்கான இணைய இணைப்புகளும் உள்ளன. மேலும் பல்வேறு தொழில் துறை சம்பந்தமான தகவல்களும் வலைதளத்தில் உள்ளன. 
இந்த ஒற்றைச் சாளர வலைதளத்தை புதிதாக தொழில் தொடங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கால தாமதம் தவிர்க்கப்படும். பணச் செலவும் குறையும்.

இந்த ஒற்றைச் சாளர வலைதள முகவரி: https://easybusiness.tn.gov.in/msme/
-ஆம்பூர் எம். அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com