இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8%-ஆக அதிகரிக்கும்: ஃபிட்ச்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக அதிகரிக்கும் என்று சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8%-ஆக அதிகரிக்கும்: ஃபிட்ச்


நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக அதிகரிக்கும் என்று சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
அந்த நிறுவனத்தின் சர்வதேச பொருளாதார ஆய்வறிக்கையில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று ஃபிட்ச் முன்பு மதிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஃபிட்ச் மதிப்பீடான 7.7 சதவீதத்தைக் காட்டிலும் அதிகம். மேலும், வரும் 2019-ஆம் ஆண்டில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மத்திய அரசின் நிதிக் கொள்கை முடிவுகளும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்து ஊக்குவிக்கும் வகையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
அதேசமயம், 2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி முந்தைய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டதை காட்டிலும் 0.2 சதவீதம் குறைந்து 7.3 சதவீதமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
நிதி நெருக்கடி, வட்டி விகிதம் உயர்வு, கச்சா எண்ணெய் செலவினம் அதிகரிப்பு மற்றும் வங்கிகளின் மோசமான செயல்பாடு ஆகிய பல்வேறு தடைகளுக்கிடையிலும் இந்த வளர்ச்சி எட்டப்படும். அதேசமயம், ரூபாய் மதிப்பு சரிவு பணவீக்கம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.
நடப்பாண்டில் இதுவரையில் ஆசிய கரன்ஸிகளில் இந்திய ரூபாயின் செயல்பாடு மட்டுமே மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ரூபாய் மதிப்பு சரிவை கையாளுவதில் மத்திய வங்கி நிதானத்தை கடைபிடித்த நிலையிலும், வட்டி விகிதங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே உயர்த்தப்பட்டுள்ளன.
சர்வதேச நாடுகளைப் பொருத்தவரையில் அமெரிக்கா-சீனா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தவே வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, 2019-ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 0.2 சதவீதம் குறைந்து 6.1 சதவீதமாக இருக்கும். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 2018-இல் 3.3 சதவீதமாகவும், 2019-இல் 3.1 சதவீதமாகவும் இருக்கும் என்று ஃபிட்ச் அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com