பாகுபலி அதி பிரமாண்டத்தை ஈடு செய்ய ‘பான் இந்தியா’ படமாக தயாராகிக் கொண்டிருக்கும் சாஹூ!

அபுதாபியில் சாஹூ திரைப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நடைபெறும் எனப் படப்பிடிப்புக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகுபலி அதி பிரமாண்டத்தை ஈடு செய்ய ‘பான் இந்தியா’ படமாக தயாராகிக் கொண்டிருக்கும் சாஹூ!

பாகுபலி ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் சாஹூ. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 150 கோடி. இதில் ஒரு சண்டைக்காட்சிக்கு மட்டுமே 35 கோடி ரூபாய்கள் செலவளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தெலுங்கு சினிமா சண்டைக்காட்சிகளிலேயே மிக அதிகத் தொகை ஒதுக்கப்பட்டது இந்தப் படத்துக்காகத் தான் என்று கூறப்படுகிறது. பாகுபலி- 2 வெளியான ஏப்ரல் 28 ஆம் தேதி பிரபாஸின் அடுத்த படமான சாஹூ டீஸர் வெளியிடப்பட்டது. படத்தின் டீஸருக்கு உண்டான பிரமாதமான வரவேற்பைக் கண்டு படப்பிடிப்புக் குழுவினர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாலும், பாகுபலி எனும் அதி பிரமாண்டத்தின் பின் பிரபாஸின் அடுத்த படமாக சாஹூ வெளி வரவிருப்பதால் பாகுபலியின் வெற்றிகளையும், எதிர்பார்ப்புகளையும் இது ஈடு கட்ட வேண்டும் எனும் கடுமையான முனைப்பில் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது பிரபாஸ் பாகுபலி 2 வெளியானதைத் தொடர்ந்து அதன் போஸ்ட் ரிலீஸ் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருப்பதால், அவை முடிந்ததும் அபுதாபியில் முதற்கட்டமாக சாஹூ திரைப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நடைபெறும் எனப் படப்பிடிப்புக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாஹூ திரைப்படத்தின் படப்பிடிப்பு உலகமெங்கும் பல நாடுகளில் நடைபெறலாம் என்றாலும் பெரும்பான்மை காட்சிகள் அபுதாபியை மையமாக வைத்தே எடுக்கப் பட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கசிகின்றன.

யுவி கிரியேஸன்ஸ் தயாரிப்பில் சுஜித் இயக்க, மதி ஒளிப்பதிவில் கலை இயக்கம் சாபு சிரில் எனத் திட்டமிட்டுள்ளார்கள். நாயகியாக இது வரை எந்த நடிகையையும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை. படத்தின் நாயகித் தேர்வில் பலர் கலந்து கொண்ட நிலையில் இன்னும் நாயகி யார் என முடிவு செய்யப்படவில்லை என்பதாகத் தெரிகிறது. இத்திரைப்படம் பிரபாஸுக்கு உலகளாவிய அங்கீகாரம் பெற்றுத் தந்த பாகுபலி1 மற்றும் 2 க்குப் பிறகு வெளிவருவதால் அதன் வெற்றிக்கு அருகில் செல்ல முடியாவிட்டாலும் கூட பிரபாஸைப் பொறுத்தவரை அப்படம் பெற்றுத் தந்த  பெருமையை தக்க வைக்கும் வண்ணம் மிகுந்த சிரத்தையோடு, ஆக்ஸன் மற்றும் காதல் கலந்து அதிக பொருட்செலவில் உருவாகிக் கொண்டிருக்கிறது. சாஹூ திட்டமிட்டவாறு படப்பிடிப்பு நடந்து முடிந்தால் 2018 ல் திரை தொடும் என நம்பப் படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com