'விஜய்'யின் மெர்சல் - சினிமா விமர்சனம்

மருத்துவத் துறையில் ஆரம்பிக்கும் ஊழலின் ஆணிவேர் எப்படி சிதைக்கப்படுகிறது என்பதையும், அவரின் வாரிசுகள் அந்த ஊழல் ஆசாமியை எப்படிப் பழிவாங்குகிறார்கள் என்பதையும்

மருத்துவத் துறையில் நிகழும் மோசடிகளை காரசாரமாக விமர்சிக்க முயன்றிருக்கும் இன்னொரு தமிழ் திரைப்படம் – மெர்சல்.

சாலை விபத்து, மாரடைப்பு போன்ற அசந்தர்ப்பமான தருணங்களில் சிக்குபவர்கள், ‘Golden Hour’ எனப்படும் தக்க நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படாமல் பரிதாபமாக இறப்பது அதிகமாகிக்கொண்டு வருகிறது. ‘பத்து நிமிடத்துக்குள் கொண்டுவந்திருந்தால் ஒருவேளை காப்பாற்றியிருக்க முடியும்’ என மருத்துவர்கள் கூறும் காட்சிகளை சினிமாக்களில் கிளிஷேவாக நாம் நிறைய பார்த்திருக்கிறோம் என்றாலும், ஒருவகையில் நடைமுறையிலும் அது ஆதாரமான உண்மை.

‘தகுந்த நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இனி எந்த உயிரும் போகக் கூடாது’ என்கிற உறுதியுடன், தன்னுடைய கிராமத்தில் மருத்துவமனை கட்டும் ஒருவனின் தியாகம், மருத்துவத் துறையில் ஆரம்பிக்கும் ஊழலின் ஆணிவேர் எப்படி சிதைக்கப்படுகிறது என்பதையும், அவரின் வாரிசுகள் அந்த ஊழல் ஆசாமியை எப்படிப் பழிவாங்குகிறார்கள் என்பதையும் வெகுஜன பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அட்லி. 

**

மருத்துவத் துறை சார்ந்த சில நபர்களை ‘எவரோ’ கடத்துகிறார்கள். காவல் துறையின் விசாரணையில், திருவல்லிக்கேணி ஹவுஸிங் போர்டில் வசிக்கும் மாறன் என்பவரின் மீது சந்தேகம் வலுக்கிறது. அவரை கைது செய்து விசாரிக்கிறார்கள். மாறன் (விஜய்) ஒரு நேர்மையான மருத்துவர். அந்தப் பகுதி மக்களுக்கு ‘ஐந்து ரூபாய்’ மட்டும் கட்டணமாகப் பெற்று சிகிச்சை அளிப்பவர். இதற்காக அவருக்கு வெளிநாட்டில் ‘மனித நேய’ விருது வழங்கப்படுகிறது. “உயிர்களைக் காக்க வேண்டிய மருத்துவரான நீ, ஏன் சிலரைக் கடத்தி வைத்திருக்கிறாய்?” என்று ஆவேசமாக விசாரிக்கிறார் காவல்துறை அதிகாரி சத்யராஜ்.

இதற்குப் பிறகு சில பிளாஷ்பேக் காட்சிகள் விரிகின்றன. கைது செய்யப்பட்டிருப்பவர் மாறன் அல்ல வெற்றி (இன்னொரு விஜய்) என்பது தெரியவருகிறது. ஏன் இந்த ஆள் மாறாட்டம், எதற்காக சிலர் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம், மேலும் பல பிளாஷ்பேக் காட்சிகளின் மூலம் விரிகின்றன. முறுக்கு மீசையும் மடித்துக் கட்டிய வேட்டியுமாக இன்னொரு விஜய்யின் அறிமுகமும் இடைவேளைக்குப் பிறகு நமக்குக் கிடைக்கிறது.

தங்களின் தந்தைக்கு இழைக்கப்பட்ட துரோகத்துக்கும் அவர் மரணத்துக்குக் காரணமாக இருந்த வில்லனையும் இரு சகோதரர்களும் இணைந்து பழிவாங்குவதுதான் மீதமுள்ள காட்சிகள். 

**

இயக்குநர் அட்லிக்கு இது மூன்றாவது திரைப்படம். விஜய் நடித்திருப்பது மூன்று வேடங்களில். இரண்டுக்கும் அதிகத் தொடர்பிருக்காது என நம்புவோம்.

மெளனராகத்தின் நகல் என்று சொல்லப்பட்டாலும், ‘ராஜா ராணி’ என்கிற இயல்பான திரைப்படத்தை எடுத்த அட்லி, தனது குருநாதரான ஷங்கரின் பாணியில் பிரம்மாண்ட வெகுஜன திரைப்பட உருவாக்கத்தை நோக்கி நகர முயற்சித்திருக்கும் திரைப்படம் – மெர்சல். குருவைப்போல் இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு சுவாரசியமாக கதை சொல்வதில் வெற்றிபெற்றிருக்கிறார். முதல் பாதி வேகமாக நகர்ந்து முடிந்தாலும், இரண்டாம் பாதி நிறைய நொண்டியடிக்கிறது.

எண்பதுகளின் காலகட்ட பின்னணியில் மூத்த விஜய் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் அவசியமானவை என்றாலும், அத்தனை நீளமாக இழுத்து சலிப்பூட்டியிருக்க வேண்டாம். மகன்களாக வரும் விஜய்களின் பாத்திரங்கள் வழக்கமான பாணியைக் கொண்டிருப்பவை. இதிலிருந்து சற்று வித்தியாசமாக, நரைமுடிகள் எட்டிப் பார்க்கும் தாடியும், முறுக்கு மீசையுமாக தோன்றும் தந்தை விஜய்யின் பாத்திரம் ரசிக்கத்தக்கதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அதில் நடிப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஒரு மரணத்துக்காக அழும் காட்சியில் பார்வையாளர்களையும் உருக்கப்பட வைத்திருக்கிறார்.

மூன்று வேட நாயகர்கள் இருக்கும்போது மூன்று நாயகிகளும் இருக்க வேண்டியது மரபுதானே? எனவே இருக்கிறார்கள். காஜல் அகர்வால் மற்றும் சமந்தாவுக்கு அதிக வேலையில்லை. ‘ஏய் தம்பி வாடா, அக்கா ரோஸ்மில்க் வாங்கித் தரேன்டா’ என்று குறும்பு செய்யும் காட்சிகளில் மட்டும் சமந்தா ஜொலிக்கிறார். மூன்றாம் நாயகியான நித்யா மேனனுக்கு நடிக்கும் வாய்ப்பு அதிகம். சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். விஜய்யுடான காதல் காட்சிகளிலும், ஒரு கிராமத்துக்கு கோவிலைவிடவும் மருத்துவமனை எத்தனை அவசியமானது என்று ஆவேசமாகச் செயல்படும் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.

வில்லனாக எஸ்.ஜே.சூர்யா வருகிறார். பிளாஷ்பேக் காட்சிகளின் வித்தியாசமான ஒப்பனையைவிடவும், சமகாலத்தில் வரும் வயதான சூர்யா ஸ்டைலாக இருக்கிறார். சில காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். ஆனால் குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை. இவரைப் போன்றே சத்யராஜ், வடிவேலு, ஹரீஷ் பராடி போன்ற உன்னதமான நடிகர்களும் உதிரிகளாக வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விஜய் + ஏ.ஆர்.ரஹ்மான் என்பது எப்போதுமே சற்று குழப்பமான கூட்டணி. ரஹ்மான் தனது தரத்தையும் பேண வேண்டும்; அதேசமயத்தில் வெகுஊன பாணிக்கும் இறங்கி அடிக்க வேண்டும். சகிப்புத்தன்மையோடு ரஹ்மான் இரண்டையும் செய்திருக்கிறார். “நீதானே” என்பது நல்ல மெலடி. நன்றாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது. வழக்கம்போல் பின்னணி இசையில் அவர் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் என்பதை இந்தத் திரைப்படமும் நிரூபிக்கிறது.

ஜி.கே.விஷ்ணு (ஒளிப்பதிவு), அனல் அரசு (சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு), ரூபன் (எடிட்டிங்) போன்ற கலைஞர்களின் அசாதாரணமான உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ஆனால், ஒரு வணிக மசாலா திரைப்படத்தில், அவர்களால் இதைத்தானே செய்ய முடியும் என்கிற சோர்வும் தோன்றுகிறது.

**

ரமணா முதற்கொண்டு மருத்துவத் துறை ஊழல் தொடர்பாக இதுவரை வெளிவந்த அனைத்து திரைப்படக் காட்சிகளும், ‘மெர்சலின்’ மூலம் நமக்கு நினைவுக்கு வருகின்றன. ஒரு நாயகரையே மிகையாக உயர்த்திப்பிடிக்கும் தமிழ் சினிமா, மூன்று நாயக வேடங்கள் என்றால் விட்டுவிடுமா? எனவே, உற்சாகமாக ஜமாய்த்திருக்கிறார்கள். திரையில் தோன்றும் எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து விஜய் நடந்து வருவது போன்ற காட்சி ஓர் உதாரணம். தமிழன், தமிழர் அடையாளம், பண்பாடு போன்ற பாவனைகளும் உற்சாகமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

“கடவுளுக்குப் பிறகு மக்கள் நம்புவது மருத்துவர்களை”, “ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் தேவைப்படும்” போன்ற வசனங்கள் சூழலுக்குப் பொருத்தமாக ஒலிக்கின்றன. ஒரு காலத்தில் இயல்பான முறையில் நிகழ்ந்துகொண்டிருந்த பிரசவங்கள், வணிகக் காரணங்களுக்காக சிசேரியனாக ‘மாற்றப்பட்டு’, அதுவே இன்றைக்கு எவ்வாறு கட்டாயமாக ஆக்கப்பட்டிருக்கிறது என்பதை சூர்யாவின் பாத்திரம் மூலம் வலுவாக நிறுவியிருக்கிறார்கள். சேவையாக நிகழ்த்தப்பட வேண்டிய மருத்துவம், பல கோடி ரூபாய்கள் புழங்கும் வணிகமாக மாறிவிட்ட அவலம் பல காட்சிகளின் மூலமாக சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மருத்துவரின் மனசாட்சியையும் உலுக்கும் கேள்விகளால் படம் நிறைந்திருக்கிறது.

ஆனால் இந்த ஊழல்களில் மருத்துவர்களுக்கு மட்டுமல்லாது, அரசு இயந்திரம், பன்னாட்டு மருத்துவ நிறுவனங்கள் என்று உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் நுட்பமான வணிக வலையைப் பற்றியும் சற்று பேசியிருக்கலாம்.

‘எங்க வீட்டுப் பிள்ளை” போன்ற பழைய எம்.ஜி.ஆர். பாணி காலத்துக் கதையை, நவீன மசாலாவில் முக்கியெடுத்து தந்திருப்பதைத்தான் அட்லி செய்திருக்கிறார். ஒரு தீவிரமான சமூகப் பிரச்னையை, உரையாடும் பாவனையில் பிரம்மாண்டமான வெகுஜன மசாலாவை உருவாக்கும் ஷங்கரின் தடத்தை அட்லியும் தொடர முயற்சித்திருக்கிறார். ஒரு பாவனைக்காக நீதி பேசிவிட்டு, இதர காட்சிகளில் பொழுதுபோக்கு அம்சங்களை நிறைத்திருக்கும் சராசரியான இந்த வெகுஜன திரைப்படத்தில், பிரத்யேகமாக வேறெந்த சிறப்பும் இல்லை.

இதர துறைகளின் மோசடிகளையும் ஊழல்களையும் தமிழ் சினிமா எப்போதுமே ஆவேசத்துடன் உற்சாகமாகப் பேசுகிறது. நல்ல விஷயம்தான். ஆனால், திரைத்துறைக்குள் நிகழும் மோசடிகளையும், தங்களின் பிம்பங்களை உயர்த்திக்கொண்டு அதிகாரத்தை நோக்கி நகர முயற்சிக்கும் நாயகர்களின் அபத்தங்களையும் பற்றி சுயபரிசீலனை நோக்கில் அது எப்போது உரையாடும் என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com