காதல் கதையை இப்படியும் எடுக்கலாம்: கவனம் ஈர்க்கும் குறும்படம் 

காதல்… ஒரு குறிப்பிட்ட வயதில் அனைவரும் கடந்து வரும் ஒன்று. சிலருக்கு கைகூடும் காதல், பலருக்கும் தோல்வியில் முடியும்.
காதல் கதையை இப்படியும் எடுக்கலாம்: கவனம் ஈர்க்கும் குறும்படம் 

காதல்… ஒரு குறிப்பிட்ட வயதில் அனைவரும் கடந்து வரும் ஒன்று. சிலருக்கு கைகூடும் காதல், பலருக்கும் தோல்வியில் முடியும். இதனால், தற்கொலை செய்துகொள்பவர்களும், வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து செல்லாமல் முடங்கி போகிறவர்களும் உண்டு. இருவரும் காதலித்து பின்னர் பிரிவது ஒருவகை என்றால், ஒருதலை காதல் அதை விட கொடியது. ஒரு பெண்ணை மிக அதிகமாக நேசித்து கடைசி வரை அவளிடம் காதலை சொல்லாமல் போகின்றவர்கள் இங்கே உண்டு. காலம்காலமாக சினிமாவில் காதல் கதைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நூற்றில் 80 சதவீதம் கதைகள் காதல், காதலர்கள், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னை, அவர்களின் காதல் கைகூடியதா? தோல்வியில் முடிந்ததா? என்று இப்படி காதல் கதைகளை சினிமாவில் தவிர்க்க முடியாது.

யூ-டியூப்பில் ரிலீஸ் செய்யப்படும் குறும்படங்களும் அதற்கு விதிவிலக்கு இல்லை. ஏகப்பட்ட காதல் கதைகள் கொண்ட குறும்படங்கள் யூ-டியூப்பில் காணக் கிடைக்கின்றன. காரணம், குறும்படங்களை அதிக அளவில் எடுப்பதும், அதற்கான பார்வையாளர்களும் இளைஞர்களாக இருப்பதே என்று எடுத்துக் கொள்ளலாம்.

அப்படி அண்மையில் வெளியான தாடி என்ற குறும்படம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து அதிக லைக்குகளையும், ஷேர்களையும் குவித்து வருகிறது.

தாடி- என்ன கதை. படம் தொடங்கும்போதே காதலை முறித்துக்கொள்ளலாம் என்று காதலியிடம் அறிவிக்கிறார் காதலன். அவனது காதலி அதை ஏற்றுக்கொண்டு அவனைவிட்டு விலகுகிறாள். இது நமக்கு திரையில் காட்சிகளாக விரியாமல் வசனங்கள் மூலமே தெரிவிக்கப்படுகிறது. உண்மையாக காதலித்த அந்தப் பெண்ணுக்கு காதல் முறிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் துவண்டு போகிறாள். மதுவை நாடுகிறாள். அப்போது பெண்களும் மதுபானம் அருந்துவார்களா? என்று அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்கிறான் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று சென்னை வந்த இளைஞன். அவளிடம் நட்பு கொள்கிறான். அவள் தனது காதல் தோல்வி அடைந்த கதையை அவனிடம் பகிர்கிறாள். ஒருகட்டத்தில் அவனுக்கு அவள் மீது காதல் வர அதை அவளிடம் அவன் வெளிப்படுத்துகிறான். அவனது காதலை அவள் ஏற்கிறாளா? இல்லையா? என்பது கதை.

நடுநிசி இரவினில் நானும் கண்ணீர் தீ மூட்டி குளிர் காய…என்ற பாடலும், அந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதமும் மிகவும் அருமை. இளைஞிகளின் காதல் தோல்வி கீதமாக அந்தப் பாடல் ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தடுமாறி நான் விழுந்தாலும் பாடல் மனதை பிசைகிறது.

காதலர்கள் இறக்கலாம், காதல் இறக்காது; முடிந்துபோன காதலை எழுதுவது சூடான காபியையும், குளிர்ந்த நீரையும் ஒரே நேரத்தில் மாறி மாறி பருகுவது போன்றது என்ற வசனங்களால் ஈர்க்கிறார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி.

கதையின் முடிவு வித்தியாசமானது. காதல் கதையை இப்படியும் எடுக்கலாம் என்பதை கிளைமாக்ஸ் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இந்தப் படத்தை தனது  திறமையான நடிப்பால் கட்டிப்போட்டுவிடுகிறார் கதையின் பிரதான பாத்திரமான நட்சத்திரா நாகேஷ். கதையின் நாயகனாக சிறப்பாக செய்திருக்கிறார் வினாயக் வைத்தியநாதன்.

கதையும், திரைக்கதையும் என்னதான் சிறப்பாக இருந்தாலும் ஒளிப்பதிவாளரின் கண்கள் வழியே கதை பார்வையாளர்களுக்கு கடத்தப்படுவது எப்படி என்பதை பொறுத்தே படத்தில் ரிசல்ட் தெரியும்.

இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சத்யஜித் ரவி, ஜென் மார்ட்டின் ஆகியோரின் இசையும், பரத் விக்ரமனின் படத்தொகுப்பும் படத்தை முழுமையாக்குகின்றன. இந்தப் படத்தை உருவாக்கிய சிபி சக்ரவர்த்தி, சினிமா மீது கொண்ட தீராக் காதலால் தாராபுரத்திலிருந்து சென்னை வந்தவர். பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு இந்தப் படத்தை எடுத்து முடித்து யூ-டியூப்பில் ரிலீஸ் செய்து தனக்கென்று ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். அடுத்தடுத்து நல்ல படங்களை எடுக்க சிபி சக்ரவர்த்திக்கும் அவரது குழுவினருக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com