போதும், நிறுத்திக்கொள்ளுங்கள்: நடிகைகளுக்கு ஸ்ரீப்ரியா வேண்டுகோள்!

நடிகைகள் பங்குபெறும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை யாரும் பார்க்கவேண்டாம் என்று நடிகை ஸ்ரீப்ரியா வேண்டுகோள்... 
போதும், நிறுத்திக்கொள்ளுங்கள்: நடிகைகளுக்கு ஸ்ரீப்ரியா வேண்டுகோள்!

நடிகைகள் பங்குபெறும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை யாரும் பார்க்கவேண்டாம் என்று நடிகை ஸ்ரீப்ரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடும்பப் பிரச்னைகளுக்குப் பஞ்சாயத்து செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடிகை ஸ்ரீப்ரியா எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சொல்வதெல்லாம் உண்மை, நிஜங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்பு ஆகியோர் நடுவர்களாக இருந்து சாமானிய மக்களின் குடும்பப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கிறார்கள். இதுபோன்ற பஞ்சாயத்துகளை டிவி நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பக் கூடாது என்று அவ்வப்போது எதிர்ப்புகள் கிளம்பினாலும் அந்நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகை ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபோன்ற டிவி நிகழ்ச்சிகளைச் சாடி சில பதிவுகளை வெளியிட்டார். 

அதில் அவர் கூறியதாவது: நாம் கற்றுவைத்திருக்கும் கலைக்கு மட்டும் நடுவராக இருக்கலாமே. குடும்பப் பிரச்னைகளுக்கு நீதிமன்றங்கள் உள்ளன. கிரிமினல் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் அதற்குரிய சட்டங்கள் உள்ளன. ஆனால் டிவி நிகழ்ச்சிகள் வழியாக இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. இதைத் தயவு செய்து நிறுத்தலாமே? என்கிற அவருடைய ட்வீட்களுக்கு சமூகவலைத்தளங்களில் பலத்த ஆதரவு பெருகியது. ஆனால் இதற்குப் பதிலளித்த நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணனும் குஷ்புவும் ஸ்ரீப்ரியாவின் கருத்தை மறுத்தார்கள். வசதியுள்ளவர்களுக்கு பிரச்னைகளைத் தீர்ப்பதற்குரிய விழிப்புணர்வு உள்ளது. எங்குச் சென்றால் பிரச்னை தீரும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் ஏழைகளுக்கு அவ்வித வசதியில்லை. அவர்களுக்கு உதவவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் உள்ளன என்று பதிலளித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். 

சமூகவலைத்தளத்தில் ஸ்ரீப்ரியாவுக்குப் பலத்த ஆதரவு கிடைத்துள்ளதால் அவர் தொடர்ந்து இதுகுறித்த ட்வீட்களை வெளியிட்டுவருகிறார். இறுதியாக இதுகுறித்து ட்வீட் செய்த ஸ்ரீப்ரியா கூறியதாவது: 

ஒரு தொகுப்பாளர் சொல்கிறார், அவருக்கு 3 குழந்தைகளும் அனுபவமும் உண்டு; எனவே அறிவுரை சொல்லத் தகுதி உள்ளது என்று (மகாபாரதத்தில் 101 குழந்தைகள் உடைய காந்தாரி, எதற்குத் தகுதியானவர் என்பதை இதைவைத்து யோசித்துப் பாருங்கள்). இன்னொரு தொகுப்பாளர் சொல்கிறார், அவர் வித்தியாசமானவர். வித்தியாசமாக யோசிப்பவர். இதனால் பலராலும் மதிக்கப்படுபவர் என்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வா, போ என்று அழைப்பதுதான் வித்தியாசமா? 

இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அதிகப் பார்வையாளர்கள் கிடைத்து ரேட்டிங்கும் கிடைக்கலாம். ஆனால் சிலருக்குக் கண்ணாடியில் கல் எரிவது போன்றதுதான் இந்நிகழ்ச்சிகள் எல்லாம். பஞ்சாயத்து நடிகைகளுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். போதும். நிறுத்திக்கொள்ளுங்கள். சட்ட நிபுணர்களாகவும் ஆலோசகர்களாகவும் சினிமாவில் மட்டும் இருப்போம். நிஜ வாழ்க்கையில் இதற்கென நிபுணர்கள் உள்ளார்கள். பொறுப்புணர்வு கொண்ட மனிதர்களாக இருப்போம். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நிறுத்துங்கள். நிச்சயம் இது மாற்றத்தை உண்டுபண்ணும். 

மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அப்பாவி மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள், சுயநலத்துக்காக அவர்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று. இதுபோன்ற தொலைக்காட்சிகளின் வலையில் விழவேண்டாம் என்று அறிவுரை கூறுங்கள். அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உங்கள் வீடுகளில் இந்த நிகழ்ச்சிகளுக்குத் தடை விதியுங்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com