ஒடுக்கப்பட்டவர்களின் குரல் உயர்ந்து ஒலிக்கிறது: மாவீரன் கிட்டு படத்தைப் பாராட்டும் தொல். திருமாவளவன்

அனைவரும் எந்தளவுக்குச் சாதிக்குத் துணை நிற்கிறார்கள் என்பதை இப்படம் குறிப்பிடுகிறது...
ஒடுக்கப்பட்டவர்களின் குரல் உயர்ந்து ஒலிக்கிறது: மாவீரன் கிட்டு படத்தைப் பாராட்டும் தொல். திருமாவளவன்

சுசீந்திரன் இயக்கியுள்ள மாவீரன் கிட்டு சமீபத்தில் வெளியானது. விஷ்ணு, விஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் எழுதுவதுடன் இப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் அறிமுகமாகியுள்ளார் கவிஞர் யுகபாரதி.

இந்தப் படத்தைப் பாராட்டி தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

ஒடுக்கப்பட்டவர்களின் குரல் உயர்ந்து ஒலிக்கின்ற ஒரு படமாக, அடித்தட்டிலே இருப்பவர்கள் ஆவேசமாகப் பேசும் குரலாக இயக்குநர் சுசீந்திரனின் மாவீரன் கிட்டு திரைப்படம் உள்ளது. சமூகத்தில் நடக்கின்ற யதார்த்தமான போக்குகளையும் சாதி இந்தச் சமுதாயத்தில் எப்படி ஒடுக்கப்படுகிறது, எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, எந்தளவுக்கு முரண்பாடாக உள்ளது என்பதை மிக யதார்த்தமாகச் சொல்லும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது. 

இப்படத்தின் இயக்குநர் மட்டுமல்ல, இப்படத்தைத் தயாரித்து இருப்பவர், வசனம் எழுதி இருப்பவர் என அனைவரும் மிகத் துணிச்சலாக இதைச் செய்துள்ளனர். பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்தில் வசனம் எழுதியுள்ளார். படத்தில் ஒரு இடத்தில் அதிகாரத்தில் இருப்பவரை நாங்கள் தவறு சொல்லவில்லை, அதிகாரமே தவறு எனச் சொல்கிறோம் என்ற வசனம் மிக அழகாக உள்ளது. 

காவல் அதிகாரி, வருவாய்த் துறை அதிகாரி, அரசியல்வாதிகள், அதிகாரத்தில் உள்ளவர்கள் என அனைவரும் எந்தளவுக்குச் சாதிக்குத் துணை நிற்கிறார்கள் என்பதை இப்படம் குறிப்பிடுகிறது. மேலும் சாதி வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதத்தில் உள்ளது. அதற்கும் மேலாக காதல் என்பது மேலானது, உயர்வானது, அதைக் கட்டுப்படுத்த இயலாது என்பதனையும், மேலும் ஒடுக்கப்பட்டவர்களில் சிலர் விலைபோகிறவர்களாக இருப்பதால் அந்தப் புரட்சிகரமான போராட்டம் தோல்வியாக அமைகிறது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. இறுக்கமான சாதி அமைப்பினுள் மிகச்சிறந்த ஜனநாயகவாதிகள் இருக்கின்றார்கள் என்பதனை உணர்த்தும்விதமாக மிகச் சிறந்த ஜனநாயகவாதியாக கதாநாயகனின் தந்தை மிகச் சிறந்த முறையில் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டும் போராடினால் ஒரு போராட்டம் வெல்லாது, அதனோடு சில ஜனநாயக மனிதர்கள் ஒன்று சேர்ந்தால்தான் ஒரு போராட்டம் வெல்லும் என்பதனை இப்படம் விவரிக்கிறது. தியாகத்தினால் கிட்டு மாவீரனாக இருக்கின்றார். மக்களுடைய போராட்டம் என்பது ஒருவனை மாவீரன் ஆக்குகிறது, ஒரு மாவீரன் மக்கள் போராட்டத்தைக் கட்டமைக்கிறான் என்பதனை உணர்த்தும்விதமாக இப்படம் அமைந்துள்ளது என்றார் தொல்.திருமாவளவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com