ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஏ தில் ஹை முஷ்கில்' படத்தை வெளியிட ராஜ் தாக்கரே சம்மதம்!

பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் நடித்த ஏ தில் ஹை முஷ்கில் என்ற ஹிந்தி திரைப்படத்தை சுமுகமாக வெளியிட...
ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஏ தில் ஹை முஷ்கில்' படத்தை வெளியிட ராஜ் தாக்கரே சம்மதம்!

பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் நடித்த ஏ தில் ஹை முஷ்கில் என்ற ஹிந்தி திரைப்படத்தை சுமுகமாக வெளியிட ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக் கட்சி சம்மதம் அளித்துள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முகேஷ் பட், ஏ தில் ஹை முஷ்கில் பட இயக்குநர் கரண் ஜோஹர் ஆகியோர் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நவிஸை இன்று சந்தித்தார்கள். இந்தச் சந்திப்பில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூர், சாஜித் நாடியாட்வாலா, விஜய் சிங் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஏ தில் ஹை முஷ்கில் படத்தை வெளியிட ராஜ் தாக்கரே சம்மதம் தெரிவிப்பதாக அறிவித்தார்.  

ரண்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோரது நடிப்பில் உருவான திரைப்படம் ஏ தில் ஹை முஷ்கில். இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகர் ஃபவாத் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இத்திரைப்பட்டத்தை வெளியிட ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கலைஞர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்படும் எந்தப் படத்தையும் இந்தியாவுக்குள் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். வரும் தீபாவளிக்கு திரையிடத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இத்தகைய எதிர்ப்புகள் எழுந்த நிலையில், படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். 

இந்தியாவுக்குள் படத்தை திரையிட மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் அப்போது கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. அதனை ராஜ்நாத் சிங் ஏற்றுக் கொண்டதாகவும், படம் வெளியாவதற்கு 100 சதவீத ஒத்துழைப்பைத் தருவதாக உறுதியளித்ததாகவும் கரண் ஜோஹர் தெரிவித்தார். இதேபோல், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸூம் திரைப்படம் வெளியாவதற்கு முழு ஆதரவு அளிப்பதாக கரண் ஜோஹரிடம் உறுதியளித்தார்.

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குவதாக மகாராஷ்டிர மாநில அரசும் உத்தரவாதம் அளித்துள்ளதால், திட்டமிட்டபடி திரையரங்குகளில் "ஏ தில் ஹை முஷ்கில்' படம் வெளியாக உள்ளது. முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முகேஷ் பட்டும் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், இத்திரைப்பட்டத்தை வெளியிட ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்றைய சந்திப்புக்குப் பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. ஏ தில் ஹை முஷ்கில் படத்தை சுமுகமாக வெளியிட மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக் கட்சி சம்மதம் அளித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் நடிகர்களைக் கொண்டு படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள், அதற்குப் பரிகாரமாக ராணுவ நல நிதிக்கு ஒவ்வொருவரும் ரூ. 5 கோடி அளிக்கவேண்டும் என்று அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ராஜ் தாக்கரே இந்த விவகாரம் குறித்து பேசும்போது, நடிகர்கள், பாடகர்கள் என பாகிஸ்தானைச் சேர்ந்த கலைஞர்கள் இனி பாலிவுட்டில் பணியாற்றக்கூடாது. எல்லையில் நமது வீரர்கள் உயிரை இழக்கும்போது பாகிஸ்தான் கலைஞர்களுக்கு நாம் ஏன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கவேண்டும்? உரி தாக்குதல் முதல்முறையாக நடந்துள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கரண் ஜோஹரிடம், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக் கட்சி இரு கோரிக்கைகளை முன்வைத்தது. ராணுவ நல நிதிக்குக் குறிப்பிட்ட தொகையை அளிக்கவேண்டும். உரி ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வாசகங்கள் டைட்டில் கார்டில் இடம்பெறவேண்டும் என்கிற கோரிக்கைகளை கரண் ஜோஹர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, ஏ தில் ஹை முஷ்கில் படத்தைக் குறிப்பிட்ட தினத்தில் வெளியிட சம்மதம் அளிப்பதாக ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com