காஷ்மோரா: இதற்குத்தான் ஆசைப்பட்டாரா கார்த்தி?

அதிக எதிர்பார்ப்பு, காஷ்மோரா படத்துக்கு உருவாகியுள்ளது.
காஷ்மோரா: இதற்குத்தான் ஆசைப்பட்டாரா கார்த்தி?

2016 தீபாவளிக்கு நான்கு தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றன. அவற்றில் காஷ்மோரா, கொடி என இரு பெரிய படங்கள். திரைக்கு வராத கதை, கடலை என இரு சிறிய படங்கள்.

*

நான்கு படங்களில் அதிக எதிர்பார்ப்பு, காஷ்மோரா படத்துக்கு உருவாகியுள்ளது.

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் கார்த்தி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் - காஷ்மோரா. கோகுல் இயக்கியுள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன். 

அதென்ன காஷ்மோரா? இது என்ன மாதிரியான படம்? சில புகைப்படங்களைப் பார்த்தால் பாகுபலியை நினைவூட்டுகிறதே என்று உங்களுக்குக் கேள்விகள் எழுகிறது அல்லவா? 

வரலாற்றுக்காலம், த்ரில்லர், ஃபேண்டஸி என மூன்றுவகைக் கதைக்களமும் படத்தில் உண்டு என்கிறார் இயக்குநர் கோகுல். கார்த்திக்கு 3 வேடங்கள். காஷ்மோரா, நாஜ்நாயக் மற்றும் இன்னொரு கதாபாத்திரம். இளவரசி வேடத்தில் நயன்தாரா. பில்லி சூனியம், ஆவிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவியாக ஸ்ரீவித்யா. 

ஹாலிவுட் பாணியில் ஹாரர், காமெடி, ஆக்ஷன், பீரியட் என்று பல்வேறு களங்களில் பயணிக்கும் தமிழ் சினிமாவாக இப்படம் உருவாகியுள்ளது. கார்த்தி மூன்று வெவ்வேறு விதமான வேடங்களில் நடிக்கிறார். அந்த மூன்று தோற்றங்களுக்காகவும் பல மணி நேரங்கள் மேக்கப் போடப்பட்டுள்ளது. இதற்காக ஏழு மாதம் எடுத்து கொண்டு 47 தோற்றங்களை தேர்வு செய்து வைத்து, அதில் இருந்து இந்த 3 வேடங்களை இயக்குநர் இறுதி செய்துள்ளார். படத்தில் இடம் பெறும் பீரியட் காட்சிகளை படமாக்க தமிழகத்தின் பல்வேறு நிலச்சூழல்களில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

காஷ்மோரா, கார்த்திக்குப் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் என்ன சொல்கிறார்: 

இதற்குதானே ஆசைப்பட்டாய் படம் பார்த்துவிட்டு கோகுல் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். எனக்கு பேய்க்கதைப் பிடிக்கும் என்பதால் அதுபோன்ற ஒரு கதையுடன் வந்தார். நம்ம ஊரிலேயே பிரமாண்டமான விஷுவல் எஃபெக்ஸ்ட் பண்ணமுடியும் என்பதை காஷ்மோரா நிரூபிக்கும். இந்தப் படத்தில் யானை, குதிரைகளைச் செயற்கை முறைகளில் உருவாக்க அந்தக் காலத்தில் பணியாற்றிய கலைஞர்களைத் தேடிப்பிடித்து பணியாற்ற வைத்துள்ளோம்.  

இப்படத்தில் வரும் காஷ்மோரா கதாபாத்திரம் இயக்குநர் கோகுலின் கடுமையான உழைப்பால் உருவானது. இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்க இயக்குநர் கோகுல் அதிக காலம் எடுத்து கொண்டு மிகவும் ஆழமாக ஆராய்ந்து இப்பாத்திரத்தை படைத்துள்ளார். தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் கையிலெடுக்காத ஒரு கதாபாத்திரம் இது. காஷ்மோரா என்பவன் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் ஆழமாகச் சொல்லாத, தொடாத பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றைச் செய்யும் பிளாக் மேஜிசியன். இப்பாத்திரம் ராஜ் நாயக் பாத்திரத்தில் இருந்து முற்றிலும் வேறுபடும். நிச்சயம் இதை ரசிகர்கள் மிகபெரிய அளவில் ரசிப்பார்கள். பையா படத்தில் நயன்தாராவுடன் நான் நடித்திருக்கவேண்டும். சில காரணங்களால் முடியாமல் போனது. இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. 

சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த ஆசை ஓர் புல்வெளி பாடலில் முதல் விழுந்தேன். மெட்ராஸ் படத்துக்கு அவர் பின்னணி இசை அமைத்தபிறகு படம் எங்கேயோ போய்விட்டது. இந்தப் படத்திலும் அவர் இசை பலம் சேர்த்துள்ளது. பாகுபலி படம் பார்த்தபோது அதுபோல நமக்கு ஒரு படம் கிடைக்காதா என்று எண்ணினேன். அதற்கான விடைதான் காஷ்மோரா. குடும்பங்கள் கொண்டாடும் படம் இது என்கிறார். 

17 செட்கள், 360 டிகிரி கேமரா கொண்டு காட்சிப்படுத்தப்பட்ட காட்சிகள், ஃபேஸ் ஸ்கேனிங் டெக்னாலஜி, 90 நிமிடங்கள் நீளும் கிராபிக்ஸ் காட்சிகள் என இப்படத்தைப் பற்றிய தகவல்கள் எல்லாமே பிரமாண்டமாக உள்ளன. 

படத்தில் வரலாற்றுக் காட்சிகள் சிறிய பகுதியாகவே வரும். பாகுபலி படத்துக்குச் செலவு செய்ததில் கால் பங்குதான் இந்தப் படத்துக்குச் செலவு செய்துள்ளோம் என்கிறார் இயக்குநர். 1000 திரையரங்குகளில் திரையிடப்படுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பைப் பிரதிபலிக்கிறது. 

வரலாற்றுப் படமா, பேய்ப்படமா என்கிற குழப்பம் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனால் இதற்குத்தானே.. படம் எடுத்தவரின் அடுத்தப் படம் எப்படி இருக்கும்? ஆமாம் பாஸ், படத்தில் காமெடி தான் அதிகமாக உள்ளது என்று உத்தரவாதமாகச் சொல்கிறது படக்குழு! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com