தீபாவளியன்று யார் கொடி பறக்கும்?

நம்மை சுற்றி பின்னப்படுகிற அரசியல் ஆட்டங்கள்தான் கதை...
தீபாவளியன்று யார் கொடி பறக்கும்?

2016 தீபாவளிக்கு நான்கு தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றன. அவற்றில் காஷ்மோரா, கொடி என இரு பெரிய படங்கள். திரைக்கு வராத கதை, கடலை என இரு சிறிய படங்கள்.

நான்கு படங்களில் காஷ்மோராவுக்கும் கொடிக்கும் நேரடிப் போட்டி உருவாகியுள்ளது. கொடியின் டிரெய்லரைப் பார்க்கும்போது அக்மார்க் மசாலா படம் என்பதால் இதன் வெற்றி மீது பலரும் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

எதிர்நீச்சல், காக்கிசட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் குமார், அடுத்ததாக இயக்கியுள்ள கொடி படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். த்ரிஷா கதாநாயகி. இது அரசியல் கதை கொண்ட படம். இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் தனுஷ். இசை - சந்தோஷ் நாராயணன். தீபாவளி அன்று வெளியாகும் கொடி படத்துக்குத் தணிக்கையில் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

அதென்ன கொடி? இயக்குநரின் பதில்: எனக்கு சுருக்கமாக, சுள்ளென்று இருக்க வேண்டும் டைட்டில். அதுதான் கொடி. விளையாட்டு, மெடிக்கல் த்ரில்லர் என முதல் இரண்டு படங்களிலும் வித்தியாசம் காட்டினேன். இப்போது அரசியல்... ரொம்பவே துணிச்சலாக இருக்கும். நமக்கு நிம்மதி வேண்டும் என்றால் ஒன்று, தலைவனாக இருக்க வேண்டும்... இல்லை, ஒரு நல்ல தலைவன் நமக்கு வாய்க்க வேண்டும். இதுதான் லைன். பொதுவாக சொன்னால், நம்மை சுற்றி பின்னப்படுகிற அரசியல் ஆட்டங்கள்தான் கதை. முழுக்க முழுக்க தனுஷ் சாருக்கு ஆக்ஷன்... ஆக்ஷன்... இதுதான் கொடி. 

அரசியல் படம் என்பதால் இதன் கதை எதைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது?: ஒவ்வொரு நாளும் மனிதம், விவசாயம், சகோதரம் என எல்லாவற்றிலும் மாற்றங்களை உருவாக்கி வைத்துவிட்டது இந்த அரசியல். குறிப்பாக தொண்டர்களின் நாள்கள், அரசியல்வாதிகளின் திட்டங்களால் நிரம்பி கிடக்கின்றன. பலர் பணம், அதிகாரம் என பெரிய இடங்களை அடைந்து விட்டதையும், நாம் ஆதர்சங்களாக நினைக்கும் பலரால் பணம், அதிகாரம் எதிலும் ஓர் இடத்தை அடைய முடியவில்லை என்கிற வேறுபாடுகள்தான் இந்த தலைமுறையையும், அடுத்த தலைமுறையையும் தவறான பாதையில் பயணப்பட வைக்கின்றன. இந்த முரண்கள்தான் கதை.

பசி தீர்க்கும் கருணையைப் பரிசளிக்காமல், யார் எப்படி போனால் என்ன அடித்து இரை தேடு என சொல்லிக் கொடுக்கும் அரசியல், ரொம்பவே அபாயகரமானது. அதை கடந்து போகிற ஒரு தனி மனிதனுக்கு இந்த சமூகமும், அரசியலும் தந்தது என்ன? இதுதான் இந்த கதை பேசும் பொருள் என்கிறார் இயக்குநர் செந்தில் குமார். 

இந்தப் படத்தில் முதல்முறையாக தனுஷுடன் ஜோடி சேர்கிறார் த்ரிஷா. ஆடுகளம்' படத்தில் தனுஷ் ஜோடியாக த்ரிஷாதான் நடித்தார். பல நாள்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அது ஏனோ நின்று போனது. இப்போது இருவரும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளார்கள்.

கொடி படத்தை சமூகவலைத்தளத்தில் உற்சாகமாக விளம்பரப்படுத்திவருகிறார் தனுஷ். கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, நெல்லை, மதுரை போன்ற பகுதிகளுக்குச் சென்று படத்தை ரசிகர்களிடம் விளம்பரப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். தொடரி படம் தோல்வியடைந்ததால் அதன் பாதிப்பு கொடி படத்துக்கு இருக்கக்கூடாது என்பதால் படக்குழுவினருடன் இணைந்து இந்த முயற்சியை எடுத்துள்ளார். 

கொடியும் காஷ்மோராவும் தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் போட்டி போடுகின்றன. இவ்விரு படங்களும் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டுள்ளன. சபாஷ்... சரியான போட்டி என்பது இதுதானோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com