சர்ச்சையின்றி, லாபியின்றி ஆஸ்கருக்குத் தேர்வான ‘விசாரணை’!

எவ்வித சர்ச்சையுமின்றி ஆஸ்கர் விருதுக்கேற்றாற்போல தேர்வு செய்யவேண்டும் என்பது... 
சர்ச்சையின்றி, லாபியின்றி ஆஸ்கருக்குத் தேர்வான ‘விசாரணை’!

ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு, திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் பங்கேற்கும் போட்டிக்கு, இந்தியா சார்பாக வெற்றிமாறனின் விசாரணை படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கேதன் மேத்தா தலைமையிலான நடுவர் குழு ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த வருடம், "கோர்ட்' என்ற மராத்தி மொழி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டது.

தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்’ நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘விசாரணை’. கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய ‘லாக் அப்’ என்ற நாவலின் தழுவலாக இது உருவானது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி போன்றோர் நடித்துள்ளளார்கள். 72-வது வெனீஸ் திரைப்பட விழாவில் திரையிடும் பிரிவில் கலந்து கொண்ட இந்தப் படம், விருதுக்கான போட்டி பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டது. அத்துடன், மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் விருதுக்கான படமாக அறிவிக்கப்பட்டது.

கடந்த வருடம் ஆஸ்கர் விருது போட்டிக்கு, "கோர்ட்' என்ற மராத்தி மொழி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டது. புதுமுக இயக்குநர் சைதன்யா தமானே இயக்கிய படத்தை பிரபல இயக்குநர் அமோல் பாலேகர் தலைமையிலான நடுவர் குழு ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது. வயதான நாட்டுப்புற பாடகர் ஒருவர், கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி துப்புரவுத் தொழிலாளி உயிரிழக்கும் அவலத்தை விவரித்தும், இந்திய அரசியல் சட்டத்தை விமர்சித்தும் பாடல் இயற்றுகிறார். இதனால் அவர் வழக்கை சந்திக்க நேரிடுகிறது. வழக்கை அவர் எதிர்கொள்ளும் விதத்தை மையமாக வைத்து கோர்ட் படம் உருவாக்கப்பட்டது. 

சிறந்த படம் என்கிற தேசிய விருது 3.5 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட கோர்ட் படத்துக்குக் கிடைத்தது. மேலும் 17 சர்வதேசத் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளது. வெனீஸ் திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டது. அதில் Horizons category விருது இப்படத்துக்குக் கிடைத்தது. Lion Of The Future விருது இயக்குநர் சைதன்யாவுக்குக் கிடைத்தது. விமரிசகர்கள் பலரும் இந்தியாவின் ஆஸ்கர் தேர்வுக்கு கோர்ட் படமே தேர்வாகவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்கள். வெளிநாட்டு இதழ்களிலும் இப்படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தன. பலமான விருதுகள், விமரிசகர்களின் பரிந்துரை, நடுவர் குழுவின் அமோக ஆதரவு போன்ற காரணங்களினால் கோர்ட் படம் தேர்வானது. இதனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காக்கா முட்டை படத்துக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. காக்கா முட்டை, தேசிய அளவில் சிறந்த குழந்தைகள் படம் என்கிற விருதைப் பெற்றது. நிறைய பாராட்டுகளை வட இந்தியாவிலும் பெற்றது. சர்வதேசப் படவிழாவிலும் கலந்துகொண்டது. ஆனால் கோர்ட்டுக்குக் கிடைத்த ஏராளமான விருதுகளும் பாராட்டுகளுடனும் ஒப்பிடும்போது காக்கா முட்டை பின்தங்கவேண்டியதாகப் போய்விட்டது.

அமோல் பாலேகர் தலைமையிலான நடுவர் குழுவில் 15 பேர் இருந்தார்கள். அதில் கடைசி ஓட்டுப் பதிவுக்கு முன்பு ராகுல் ரவைல் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார். அவரும் கூட கோர்ட் தேர்வுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை, பாலேகருடனான கருத்துவேறுபாடு தொடர்பாகவே குழுவிலிருந்து விலகுவதாகக் கூறினார். 2013-ல் லஞ்ச் பாக்ஸ் படத்துக்குப் பதிலாக தி குட் ரோட் படம் தேர்வானபோது பலத்த சர்ச்சை ஏற்பட்டது. அதேபோல கோர்ட் படத்தின் தேர்விலும் சர்ச்சைகள் இருந்தன. 

தேர்வுக்குழுவில் இடம்பெற்ற இயக்குநரும் நடிகருமான அரிந்தம் சில், கோர்ட் படத் தேர்வு தொடர்பாக அதிர்ச்சியான தகவலைத் தந்தார். கடந்த வருடம், ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆஸ்கர் தேர்வில் இடம்பெற்ற முறைகேடுகள் எனக்குப் பிடிக்கவில்லை. ஓட்டெடுப்பில் பல படிகள் இருந்தன. ஒரு இடைநிலை ஓட்டெடுப்பின்போது நான்கு படங்களின் முடிவுகளில் மாற்றம் செய்யப்பட்டன. அவை - மார்கரிட்டா வித் ஏ ஸ்டிரா, காக்கா முட்டை, மசான், கோர்ட். மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது தேர்வுக்குழுத் தலைவர் அமோல் பாலேகர் கொடுத்த முடிவு தவறு எனத் தெரிந்தது. கோர்ட் படத்தை அவர் வெளியேற்ற நினைத்தார். நானும் இயக்குநர் கமலேஷ்வர் முகர்ஜியும் கோர்ட் படத்துக்கு ஆதரவாகப் பேசினோம். அதிலிருந்து நிலைமை மாறியது. எனக்கு காக்கா முட்டை படம் மீது எந்த வெறுப்பும் கிடையாது. கடைசியில், ஆஸ்கர் தேர்வுக்கு கோர்ட்டா இல்லை காக்கா முட்டையா என ஒன்றரை நாள் விவாதித்தோம். இது மிகவும் கடினமான தேர்வுதான். கடைசியில் நாங்கள் எல்லோரும் ஒருமனதாக கோர்ட் படத்தைத் தேர்வு செய்தோம். மற்றொரு தேர்வுக்குழு உறுப்பினரான ராகுல் ரவைல் போல நான் ராஜினாமா செய்யவில்லை. நான் ராஜினாமா செய்திருந்தால் கோர்ட் படம் தேர்வாகியிருக்காது. மற்றவர்கள் போல நானும் பதவியில் இருந்து கோர்ட் படத்துக்காக வாதாடினேன். என்றார். 

இந்த சர்ச்சைகளுக்கு ஏற்றாற்போல கோர்ட் படத்தால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறமுடியாமல் போனது. அடுத்தச் சுற்றுக்கான 9 படங்களில் கோர்ட் படம் தேர்வாகவில்லை. The Brand New Testament (பெல்ஜியம்), Embrace of the Serpent (கொலம்பியா), A War (டென்மார்க்), The Fencer (ஃபின்லாந்து), Mustang (பிரான்சு), Labyrinth of Lies (ஜெர்மனி) Son of Saul (ஹங்கேரி), Viva (அயர்லாந்து) மற்றும் Theeb (ஜோர்டான்) ஆகிய 9 நாட்டுப் படங்கள், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான அடுத்தச் சுற்றுக்குத் தேர்வாகின. 

1957 முதல் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதுக்காக இந்தியப் படங்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், இதுவரை ஆஸ்கர் விருதுக்காக ’மதர் இந்தியா’, ’சலாம் பாம்பே’, ’லகான்’  ஆகிய 3 இந்தியப் படங்கள் மட்டுமே ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு இறுதிக்கட்டம் வரை (டாப் 5) சென்றுள்ளன. இதனால் படங்களைத் தேர்வு செய்யும்போது எவ்வித சர்ச்சையுமின்றி ஆஸ்கர் விருதுக்கேற்றாற்போல தேர்வு செய்யவேண்டும் என்பது திரையுலகினரின் வேண்டுகோளாக இருந்தது. விசாரணை படம் அப்படியொரு தேர்வாக அமைந்துள்ளது.

தேர்வுக்குழுவில் இடம்பெற்ற இயக்குநர் சுதேஷ்னா ராய், விசாரணை படத்தின் தேர்வு குறித்து ஒரு பேட்டியில் கூறியதாவது: போட்டியில் இடம்பெற்ற 'Parched', 'Aligarh', 'Island City', 'Shankhachil', 'Budhia', 'Airlift' உள்ளிட்ட 29 படங்களும் தரமாக இருந்தன. ஆனால் அனைத்தையும்விட விசாரணை மிகச்சிறப்பாக இருந்தது. இந்தப் படத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த குரல்களில் தேர்வு செய்தார்கள். மிக அற்புதமான படத்தை ஆஸ்கருக்கு அனுப்புவதில் பெருமையாக உள்ளது. எல்லாவகையான படங்களையும் ஒரேபோல நடத்தினார் தலைவர் கேதன் மேத்தா. கமர்ஷியல் படங்கள் ஒதுக்கப்படவில்லை.

தேர்வுக்குழுவில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை. இருப்பினும் விசாரணை தேர்வானது. தமிழ்ப் படங்கள் என்றால் கமர்ஷியலாகத்தான் எடுப்பார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் விசாரணை என் கண்ணைத் திறந்துவிட்டது என்றார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com