இயக்குநர்  மணிரத்னத்தின் அடுத்த படத்திலும் வேலை செய்வேன்! ஷர்மிஷ்டா ராய் உருக்கம்!

தேசிய விருது வாங்கியுள்ள திரைப்படக் கலை இயக்குநர் ஷர்மிஷ்டா ராய் இயக்குநர்
இயக்குநர்  மணிரத்னத்தின் அடுத்த படத்திலும் வேலை செய்வேன்! ஷர்மிஷ்டா ராய் உருக்கம்!

தேசிய விருது வாங்கியுள்ள திரைப்படக் கலை இயக்குநர் ஷர்மிஷ்டா ராய் இயக்குநர் மணிரத்னத்துடன் 'காற்று வெளியிடை’ திரைப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக அவருடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். ‘ஒரு வேலையை எப்படி முழுமையாகவும் அதே சமயம் சுலபமாகவும் செய்யறதுன்னு மணி சாரிடம்தான் கத்துக்கிட்டேன். அவரோட ஏற்கனவே ‘ஓகே கண்மணி’,யில் வேலை செஞ்சிருந்தாலும், ‘காற்று வெளியிடை’யில பங்கேற்றது முற்றிலும் புதிய அனுபவம். இந்த இரண்டு படங்களுமே வேலை சார்ந்த என்னோட அணுகுமுறையை நிறைய மாற்றியிருக்கு’ என்றார் ஷர்மிஷ்டா ராய்.

'இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநர் மணிரத்னத்துக்கு புரொடக்‌ஷன் டிசைனராக வேலை செய்யறது அவ்வளவு ஈஸி இல்லை. ஆனால் அதை ஈஸியாகவே பண்ணேன். படம் முழுக்க என்னோட வேலை வேற நான் வேற இல்லை. அந்தளவுக்கு ஒன்ற வைச்சது மணி சார் தான். அவரிடம் தான் வேலைக்கான நெறிமுறைகள் கத்துக்கிட்டேன். அந்தந்த வேலைக்கான நீரோட்டமான சுலபான அப்ரோச் இப்ப எனக்கு கைவந்திருக்கு. என்னுடைய இந்தப் புதிய மாற்றம் மத்தவங்களுக்கு எப்படி தெரியுதோ இல்லையோ, என்னை பொருத்தவரையில் ஒரு திரைக்கதையை எப்படி அணுகணும்ங்கற தெளிவு உள்ளுக்குள்ள ஏற்பட்டிருக்கு, அந்த வரைபடத்தை முழு மனசா தொடர்ந்தா போதும் அதுக்கப்பறம் அது நம்மை வழிநடத்தும்’ என்றார்

தில் தோ பாகல் ஹை, மீனாக்‌ஷி – எ டேல் ஆஃப் த்ரி சிட்டீஸ், வீர் ஜரா போன்ற பிரபல இந்திப்படங்களில் பணிபுரிந்திருக்கிறார் ஷர்மிஷ்டா. அவருடைய திரையுலக நண்பரான ஷாத் அலி மூலம் மணிரத்னத்தின் அறிமுகம் கிடைத்ததை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறார்.

'காற்று வெளியிடை படத்துக்காக பல ஊர்களுக்கு விதவிதமான காலவரிசையில் பயணிக்க வேண்டியிருந்தது' என்றார் ஷர்மிஷ்டா. மேலும் அவர் கூறுகையில், 'ஆடியன்ஸுக்கு படத்தைப் பார்க்கும் போது எந்தவிதமான குழப்பமும் ஏற்படக்கூடாது. காலம், சூழ்நிலை, கதாபாத்திரங்கள் எல்லாமே சரியானபடி காட்சிப்படுத்தணும். கார்த்தி, அதிதி ராவ் ஹிதாரி பத்தி சொல்லணும்னா, அவங்க கதாபாத்திரங்களின் தன்மை எனக்கு ரொம்ப பிடிச்சுது. படத்துல அவங்களோட வேலை சார்ந்த காட்சிப்பதிவுகளை துல்லியமான அழகியலுடன் தர முடிவு செய்தேன். அதனால படம் முழுக்க நான் அந்த கதாபாத்திரங்களை ஆழமாக தொடர்ந்துட்டு இருந்தேன். என்னோட கட்டுப்பாட்டுல சில விஷயங்களை வைச்சிருக்க விரும்பினேன். உண்மையில் சொல்லணும்னா அது புரொடக்‌ஷன் டிசைனுக்கு சம்பந்தம் இல்லைதான். ஆனா என்னோட வேலையை சிறப்பா செய்ய, நான் அப்படிதான் இருந்தேன். என் மனசுக்குள்ள இந்தக் கதாபாத்திரங்கள் இப்படித்தான் வாழணும், இதுதான் அவங்களுக்குப் பிடிச்ச விஷயங்கள்னு ஒரு அவுட்லைன் போட்டு அதன்படி வேலை செய்தேன்.’ என்றார் ஷர்மிஷ்டா.

இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படத்துல வேலை செஞ்சது ஆச்சரியமாக இருந்தது. தவிர எனக்கு இது சவாலாகவும் புதுசாகவும் கூட இருந்தது.  ஒரு இடத்தோட அடையாளத்தையே மறைச்சுட்டு, அதுல நமக்கு என்ன தேவையோ அதை உருவாக்கி, கதைக்கும் காட்சிக்கும் ஏற்றபடி மாத்தி மாத்தி வடிவமைச்சது ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. படத்துல கலர்களைப் பொருத்தவரை உறுத்தாத அழகான காட்சிக்குத் தேவையானதை கவனத்தில் வைத்து வடிவமைச்சிருக்கேன். இப்படி பார்த்து பார்த்து வேலை செஞ்சது ரொம்பவே உற்சாகமா இருந்தது.’

மணி சார் வேலை செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஓகே கண்மணி பொருத்தவரை நான் அவருக்குத் தேவையானதை அவரின் விருப்பப்படி செய்து கொடுத்தேன். அது வெற்றிகரமாகவே முடிந்தது. ஓகே கண்மணி போல இந்த படம் அவ்வளவு ஈஸியானது இல்லை. நிறைய சவால்கள் இருந்தது உண்மை. பல சமயம் ஒரு இடத்தில் படப்பிடிப்பு இருந்தது என்றால், மறுபடியும் அதே இடத்தில் இருக்கும். செட் வேலைக்கான பொருட்கள் மற்றும் அலங்காரப் சமான்கள் பல சமயம் கிடைக்காது. தவிர கொந்தளிப்பான வானிலை, கடுமையான சீதோஷ்ண நிலையில கால வரையறைக்கு உட்பட்டு வேலை செஞ்ச அனுபவம் மறக்க முடியாதது.  அதுவும் ஒரு பாடல் காட்சிக்காக அரும்பாடுபட்டு கிடைச்சதை வைச்சு ஒப்பேத்தினேன். ஆரம்பத்துல கோபமா இருந்தது, ஆனால் கடைசியில் வேலை சரியா முடிச்சதும் அது எனக்குப் பிடிச்ச செட்டுகள்ல ஒண்ணா இப்ப இருக்கு’ என்றார்.

எல்லோரையும் நன்றாக வேலை வாங்குபவர் என்று திரையுலகில் பாராட்டைப் பெற்றவர் ஷர்மிஷ்டா. மணி சாரைப் பொருத்தவரையில் அவரோட டீம் மொத்தமும் வேலையில் ஆழமான ஈடுபாட்டுடன் இருக்கறதை விரும்புவார். எல்லோரும் ஒரு சின்க்ல வேலை செய்வாங்க. நானும் அப்படித்தான் பரபரன்னு வேலை செஞ்சேன். எங்க டீம் மொத்தமும் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்போட இந்தக் கதையை ரசிகர்களிடம் அழகா கொண்டு போய் சேர்க்கணும்ங்கற ஆர்வத்துல உழைச்சிருக்கோம். மணி சார் இன்னும் கூடுதல் உற்சாகமா இருந்தார். ஒரு துளி களைப்போ, சலிப்போ இல்லை. அவ்வளவு வேகமாகவும், உற்சாகமாகவும் இருந்தார். அவரோட இந்த எனர்ஜியின் ரகசியம் என்னன்னு நாங்க எல்லோருமே தெரிஞ்சுக்க ஆசைப்பட்டோம். அவரோட அடுத்த படத்துக்கும் வாய்ப்பு கிடைச்சா அது பாக்கியம்’ என்று கூறினார் ஷர்மிஷ்டா.

- ஹரிசரண் (தமிழில் உமா ஷக்தி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com