ரஜினியின் அரசியல் பிரவேசம், புதிய ஹிந்தி எதிர்ப்பு: மணி ரத்னம் என்ன சொல்கிறார்?

ரஜினி அரசியலுக்குள் நுழையவேண்டும் என மக்கள் அவரை வற்புறுத்துவது சரியல்ல...
ரஜினியின் அரசியல் பிரவேசம், புதிய ஹிந்தி எதிர்ப்பு: மணி ரத்னம் என்ன சொல்கிறார்?

மணி ரத்னம் இயக்கியுள்ள காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ரவிவர்மன், இசை - ஏ.ஆர். ரஹ்மான். இப்படத்துக்குத் தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. நாளை இந்தப் படம் வெளியாகிறது.

இந்நிலையில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரஜினியின் அரசியல் பிரவேசம் மற்றும் தமிழ்நாட்டில் புதிதாக எழுந்துள்ள ஹிந்தி எதிர்ப்பு ஆகியவை குறித்து அவர் கூறியதாவது: 

ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தால் அது அவருடைய முடிவு. தன்னால் அரசியலில் நன்றாக பண்ணமுடியுமா, இது சரியான நேரமா என்பதை அவர்தான் முடிவு செய்யவேண்டும். ரஜினி அரசியலுக்குள் நுழையவேண்டும் என மக்கள் அவரை வற்புறுத்துவது சரியல்ல. உங்களையும் என்னையும் போல அவரும் இந்த நாட்டின் குடிமகன். இதைச் செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பது அவர் முடிவு. அவருக்கு எதைப் பற்றியும் ஒரு கருத்து உண்டு என்பதில் சந்தோஷப்படுகிறேன். தேவைப்படும்போது மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்கிறார். மிகவும் தெளிவாக இருக்கிறார். அவரிடம் எந்தவொரு முன்தீர்மானங்களும் இல்லை. எதைச் செய்தால் சரியாக இருக்கும் என்பது அவருக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். 

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கல்களில் ஆங்கிலத்தை நீக்கி, அதற்கு பதிலாக ஹிந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்புக் கருத்துகளை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து மணி ரத்னம் கூறியதாவது: ஹிந்தி எதிர்ப்பு 1960களில் வலுவாக இருந்தது. இப்போது ஹிந்தி எதிர்ப்பு ஒரு பிரச்னையே கிடையாது என நினைக்கிறேன். நான் 1960களில் வளர்ந்தவன். எனவே என்னிடம் இன்னமும் ஹிந்தி எதிர்ப்புணர்வு இருக்கலாம். இப்போது மக்கள் திறந்த மனத்துடன் உள்ளார்கள். ஒரு மொழியைப் பழக்கப்படுத்திக்கொள்ள மக்களுக்குக் கடினமாகவே இருக்கும். இது அரசியல் எதிர்ப்பு அல்ல. ஹிந்திக்கு எதிரான அரசியல் இயக்கமும் அல்ல என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com