ரசிகர்களுடனான சந்திப்பு ரத்து: ரஜினி அறிவிப்பு

வரும் 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக ரஜினி சந்திக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்களுடனான சந்திப்பு ரத்து: ரஜினி அறிவிப்பு

வரும் 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக ரஜினி சந்திக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

1980-ம் ஆண்டுகளில் தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் தனது பிறந்த நாளில் ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி. இப்படி ஒரு சந்திப்புக்காக சென்னைக்கு வந்து விட்டுத் திரும்பும் வழியில், மூன்று ரசிகர்கள் சாலை விபத்தில் இறந்து விட்டனர். அதன் பின்னர் ரஜினி தனது ரசிகர்களை சந்திப்பதைத் தவிர்த்தார்.

கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பின்னர் ரசிகர்களுடன் எந்தவித சந்திப்பும் நடைபெறவில்லை. பிறந்த நாள்களில் பெரும்பாலும் சென்னையில் இருப்பதையே தவிர்த்து வந்தார்.

கடந்த 2011 மே மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின்னர் தீபாவளி, பொங்கல், பிறந்த நாள் என வழக்கமாக போயஸ் கார்டன் இல்லத்தில் திரண்டிருக்கும் ரசிகர்களை அவ்வப்போது சந்தித்து வந்தார். சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின் தனது ரசிகர்களைச் சந்திக்க இருந்தார் ரஜினி. 

இதற்கான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.2) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ரஜினி ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் சத்தியநாராயணா, சுதாகர் இருவரும் கலந்து கொண்டனர். மாவட்ட வாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரஜினியுடன் புகைப்படம் எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதையடுத்து வரும் 12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வாரியாக ஒவ்வொரு நாளும் ரசிகர்களைச் சந்திக்க இருந்த ரஜினி, சுமார் 10 ஆயிரம் ரசிகர்களை சந்திப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ரசிகர்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரஜினி வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியதாவது:

ரசிகர்கள் இரண்டு இரண்டு பேராக என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இரண்டு பேர் உள்ள புகைப்படத்தை எப்படி வீட்டுச்சுவற்றில் மாட்டுவது என்று வருத்தப்பட்டார்கள். அதேசமயம் ஒரே சமயத்தில் எல்லா மாவட்ட ரசிகர்களும் தனித்தனியாக என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதும் பல சிரமங்களைத் தருவதாக உள்ளது.

எனவே வருங்காலத்தில் ஒவ்வொரு மாவட்ட அல்லது இரண்டு மாவட்ட ரசிகர்களை அழைத்து தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துகொள்ளலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது என ரஜினி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com