எனக்கு ஒரு போன் செய்திருக்கலாமே? இளையராஜா மீது எஸ்பிபி ஆதங்கம்!

ராஜாவிடம் ஒருமுறை தொலைப்பேசியில் பேசியிருக்கலாமே என்று கேட்கிறார்கள். எனக்கும் சுய மரியாதை, தன்மானம் உள்ளது இல்லையா?
எனக்கு ஒரு போன் செய்திருக்கலாமே? இளையராஜா மீது எஸ்பிபி ஆதங்கம்!

காப்புரிமை விவகாரம் தொடர்பாக என்னிடம் தனிப்பட்ட முறையில் தகவல் சொல்லியிருக்கலாம். அதற்குப் பதிலாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது மனத்தைக் காயப்படுத்தியது என்று பாடகர் எஸ்பிபி பேட்டியளித்துள்ளார்.

திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் அவரது இசைக் குழு பயணித்து வருகிறது. இந்த நிலையில் இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அந்த நோட்டீஸில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பிரச்னையை ஃபேஸ்புக்கில் தெரிவித்த எஸ்பிபி இவ்வாறு கூறினார்: இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். மேடைகளில் இனி பாட மாட்டோம்: இந்தச் சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்தக் கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். என்றார். இதையொட்டி சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு எஸ்பிபி அளித்த பேட்டியில் கூறியதாவது: 

1979 முதல் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். இந்தமுறை என் நிகழ்ச்சிகளில் ராஜா பாடல்களைப் பாடாமல் இருந்தது மனத்தைப் பாதித்தது. ஆனால் இசை நிகழ்ச்சிகளைப் பாதிக்கவில்லை. 

இந்த விவகாரம் குறித்து பேஸ்புக்கில், இதுபோல நடந்துள்ளது. அவர் பாடலைப் பாடமுடியாமல் போகலாம் என்றுதான் அறிக்கை வெளியிட்டேன். கடவுள் புண்ணியத்தில் மற்ற இசையமைப்பாளர்களுக்கும் நிறைய பாடல்கள் பாடியுள்ளேன். ஆனால் இந்த நிகழ்ச்சிகளில் ராஜாவின் பாடல்களைப் பாடமுடியாதது மனத்துக்குக் கஷ்டமாக உள்ளது.

வருங்காலத்தில் ராஜா பாடல்களைப் பாடுவேனா என்பதைக் காலம்தான் பதில் சொல்லவேண்டும். ராஜாவுக்கும் எனக்கும் எவ்வித அபிப்ராய வேறுபாடுகள் கிடையாது. நாங்கள் இப்போதும் நண்பர்கள்தான். காலம் சொன்னபடி எதுவும் நடக்கட்டும். எதையும் நான் தலைவணங்கி ஏற்றுக்கொள்வேன். எந்தப் பாடலையும் என் சொந்தம் என நினைக்கமாட்டேன். ஒவ்வொரு பாடலுக்கும் பல சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். 

காப்புரிமைச் சட்டத்தைப் புரிந்துகொள்வது கஷ்டமாக உள்ளது. ராஜா பாடல்களைப் பாட அனுமதி வாங்கவேண்டும் என்பது எனக்கு நிச்சயம் தெரியாது. அப்படி முன்பே தெரிந்திருந்தால் நான் அவருக்குப் போன் செய்து உன் பாடல்களைப் பாடலாமா என்று கேட்டிருப்பேன். இப்படிக் கேட்க நான் தயங்கியிருக்கமாட்டேன். 

இந்தமுறை ஆகஸ்ட் முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். எல்லா இடங்களிலும் ராஜா பாடல்களைப் பாடியே வந்தோம். ஆனால் அமெரிக்க நிகழ்ச்சிகளுக்குத் திடீரென ஏன் இவ்வாறு நடந்தது எனத் தெரியவில்லை. இதுகுறித்து ராஜாவிடம் ஒருமுறை தொலைப்பேசியில் பேசியிருக்கலாமே என்று கேட்கிறார்கள். எனக்கும் சுய மரியாதை, தன்மானம் உள்ளது இல்லையா?{pagination-pagination}

ராஜா 201ல் இதுகுறித்து பேசியுள்ளார். அதற்குப் பிறகு அவருடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன். அவர் படங்களில் பாடியுள்ளேன். நானும் பல இசை நிகழ்ச்சிகளில் அவர் பாடல்களைப் பாடியுள்ளேன். ஆனால் இந்த இரண்டு வருடங்களில் இந்த விவகாரம் குறித்து அவர் என்னிடம் எதுவும் பேசியது கிடையாது. எல்லா இசை நிகழ்ச்சிகளிலும் ஐபிஆர்எஸ் அமைப்புக்குப் பணம் அளிப்பது தொடர்பாக விசாரிப்பேன். மற்றபடி ஒவ்வொரு இசையமைப்பாளரிடமும் அனுமதி கேட்கவேண்டும் என்பது எனக்குத் தெரியாது. என் பாடல்கள் மீது சத்தியமாகச் சொல்கிறேன். எனக்கு இதுபற்றித் தெரியாது.

நோட்டீஸ் கைக்கு கிடைத்தபோது மனது வலித்தது. இந்த விஷயத்தில் நான் அவரைத் தவறு சொல்லவில்லை. அவருக்குக் கேட்க உரிமை உள்ளது. ஆனால் அவர் அலுவலகத்தில் இருந்து ராஜா சார் இதுபோல எண்ணுகிறார் என்று என்னிடம் இப்பிரச்னை குறித்து தொலைப்பேசியில் பேசியிருக்கலாமே. அதற்குப் பதிலாக நோட்டீஸ் அனுப்பியது கஷ்டமாக உள்ளது. அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இருவரும் நண்பர்களாக உள்ளோம். 

அவர்மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு. நான் கிட்டத்தட்ட எல்லா இந்திய இசையமைப்பாளர்களிடமும் பணிபுரிந்துள்ளேன். அவரைப் போல ஓர் இசைமேதையைக் கண்டதில்லை. அவருக்காக நான் பிறந்துள்ளேன். எனக்காக அவர் பிறந்துள்ளார். எனவே இந்தப் பிரச்னையின் முடிவு குறித்து காலம்தான் தெளிவான பதில் சொல்லவேண்டும். எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். எல்லோரும் இந்தப் பிரச்னையைப் பேசிப்பேசி பெரிதுபண்ணவேண்டாம். நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம் என்று பேட்டியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com