சத்யராஜை எதிர்க்க பாகுபலிக்குத் தடை விதிப்பது ஏன்? இயக்குநர் ராஜமெளலி கேள்வி!

சத்யராஜை எதிர்க்க பாகுபலிக்குத் தடை விதிப்பது ஏன்? இயக்குநர் ராஜமெளலி கேள்வி!

பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியிட ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கன்னட மக்களுக்கு இயக்குநர் ராஜமெளலி கோரிக்கை

பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியிட ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கன்னட மக்களுக்கு இயக்குநர் ராஜமெளலி கோரிக்கை விடுத்துள்ளார். 

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படம் ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. பாகுபலி 2 படம் எப்போது வெளிவரும் என்று சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க கர்நாடகாவில் மட்டும் இன்னமும் அந்தப் படத்தின் விநியோக உரிமையை வாங்க ஆளில்லாத நிலையே உள்ளது. ஒரே காரணம் - சத்யராஜ்!

சிலவருடங்களுக்கு முன்பு, காவிரி நீர் பிரச்னை தமிழக கர்நாடக மாநிலங்களில் வெடித்துக்கிளம்பியபோது கர்நாடகத்துக்கு எதிராக சத்யராஜ் பேசியுள்ளார். இதுதான் இப்போது பெரிய சிக்கல் ஆகியிருக்கிறது. கர்நாடகத்துக்கும் கன்னடர்களுக்கும் எதிராக பேசிய சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே அவர் நடித்துள்ள பாகுபலி 2 படம் கர்நாடகாவில் வெளியாகும் என்று கன்னட அமைப்புகள் மல்லுக்கட்டுகின்றன. பிரச்னை பெரிதாக உள்ளதால் பாகுபலி 2 படத்தின் கர்நாடக உரிமையை வாங்கத் தயங்கி கடைசியில் இதுவரை அது விற்கப்படாமல் உள்ளது. மேலும் படம் வெளியாகும் நாளன்று பெங்களூரில் பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார் கன்னட சலுவளிக் கட்சியின் தலைவரும், கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ். அன்று பெங்களூரில் ஒரு பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சத்யராஜ் மன்னிப்பு கேட்காமல் பாகுபலி படத்தை கர்நாடகாவில் வெளியிடமுடியாது என்று கன்னட அமைப்புகள் தங்கள் முடிவில் தொடர்ந்து உறுதியாக உள்ளன. படத்தை எதிர்க்கும்  முக்கிய பிரமுகர்களை பாகுபலி படக்குழு நேரில் சென்று சந்தித்து தடையை விலக்குமாறு கோரின. ஆனால் சத்யராஜ் மன்னிப்பு கேட்காமல் படத்தைத் திரையிடமுடியாது என்பதில் கன்னட அமைப்புகள் உறுதியாக உள்ளன. 

இந்த விவகாரம் குறித்து இயக்குநர் ராஜமெளலி, கன்னட மக்களுக்கு வீடியோ வழியாக வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது: 

9 வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் ஒரு கருத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அவருடைய பல படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளன. பாகுபலி 1 வெளியாகும்போதும் எந்தப் பிரச்னையும் இல்லை. இப்படத்தில் அவர் நடிகர் மட்டுமே. தயாரிப்பாளரோ, இயக்குநரோ அல்லர். உங்களுடைய எதிர்ப்பை சத்யராஜிடம் போனில் கூறிவிட்டேன். இதற்கு மேல் என்னால் என்ன செய்வதென்று தெரியவில்லை.

சத்யராஜ் மீதான கோபத்தை பாகுபலி 2 மீது காட்டுவது சரியல்ல. பாகுபலி 2 படத்தைத் தடுப்பதால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஒருவருடைய கருத்துக்காக பலரைத் தண்டிப்பது சரியல்ல. நாங்கள் இந்தப் பிரச்னையுடன் தொடர்புடையவர்கள் கிடையாது. பாகுபலி 1 படத்துக்குக் காண்பித்த அதே ஒத்துழைப்பை பாகுபலி 2 படத்துக்கும் அளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com