தமிழ்ப் படங்களுக்காக உலகத் தரத்தில் ஓர் ஒலிப்பதிவுக் கூடம்: ஹாரிஸ் ஜெயராஜ் (வீடியோ, படங்கள்)

ஒலிப்பதிவுக் கூடத்தை நான் வாடகைக்கு கொடுப்பதில்லை. நான் மட்டுமே உபயோகிக்க கட்டியுள்ளேன்.
தமிழ்ப் படங்களுக்காக உலகத் தரத்தில் ஓர் ஒலிப்பதிவுக் கூடம்: ஹாரிஸ் ஜெயராஜ் (வீடியோ, படங்கள்)

தமிழ் சினிமாவுக்கு எல்லாமே சிறப்பாக இருக்கவேண்டும். முதல் தரமான விஷயங்கள் இந்த தமிழ் சினிமாவுக்கு கிடைக்க நாம் எல்லோரும் பாடுபடவேண்டும். அதன் முதல் அடியாகத் தான் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது "ஸ்டுடியோ-எச்' என்ற ஒலிப்பதிவுக் கூடத்தை அமைத்துள்ளார். சென்னை, வளசரவாக்கத்தில் அமைந்துள்ள இந்த ஸ்டுடியோ பற்றியும், அதன் சிறப்புக்கள் பற்றியும் நமக்கு கூறுகிறார் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்:

"ஆரம்பத்தில் இருந்தே எனக்கு வாழ்க்கை கொடுத்த இந்த தமிழ் சினிமாவுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று என் மனம் யோசித்துக் கொண்டிருந்தது. நான் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவனல்ல. கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலையை அடைந்தேன். ஆரம்பத்தில் இருந்தே வருடத்திற்கு மூன்று படங்கள் மட்டுமே செய்யவேண்டும் என்ற முடிவுடன் தான் நான் இசையமைக்க தொடங்கினேன். சில சமயம் அது நான்கு படங்களாகிவிடும். சரி அடுத்த வருடம் குறைத்துக் கொள்ளலாம் என்று என்னை நான் சமாதானம் செய்து கொள்வேன். காரணம், என் ஒவ்வொரு படத்திற்கும் என் பங்களிப்பு அதிகமாக இருக்கும். கம்போசிங்கில் இருந்து படம் முடித்து வெளிவரும் வரை ஒவ்வொரு நிலையிலும் நான் பார்த்தே அனுப்புவேன். அதன் விளைவு பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, திருப்தியாக இருந்தால்தான் எனக்கு நிம்மதி ஏற்படும். வெளிநாடுகளில் நான் பார்த்த ஒலிப்பதிவுக் கூடங்களில் சில கம்போஸிங்குக்கு மட்டுமே வசதிகள் உள்ளன. சிலவற்றில் பாடல்கள் மட்டுமே ரெகார்ட் செய்ய முடியும். சில பின்னணி இசைக்காக மட்டுமே உள்ளது. என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. நாமே  ஒரு ஸ்டுடியோ கட்டி எல்லாவற்றையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்தால் என்ன? என்ற எண்ணத்தில் சுமார் நான்கு ஆண்டுகள் முன் ஆரம்பித்ததுதான் இந்த  ஸ்டுடியோ-எச்.

இடம் வாங்கிய பின் அந்த இடத்தில் உலகத்தரத்தில் ஓர் ஒலிப்பதிவுக்கூடத்தை தமிழ் நாட்டின் தலைநகரான இந்த சென்னையில் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து வேலையைத் தொடங்கினேன். 9500 சதுர அடி கொண்ட இந்த இடத்தில் இரண்டு ஸ்டுடியோக்கள் உள்ளன. ஒரே சமயத்தில் சுமார் 75 இசை கலைஞர்கள் அமர்ந்து வாசிக்கும் வகையில் இந்த ஸ்டுடியோ அமைந்துள்ளது. காரணம், இதை அமைத்துக் கொடுத்தவர்கள் SOUND WIZARD நிறுவனத்தினர்.

இதில் உள்ள ஒளிப்பதிவு இயந்திரங்கள் எல்லாமே உலகில் இன்று எது சிறந்தது என்று எல்லோரும் கூறுகிறார்களோ அதையே நாங்கள் வாங்கி இங்கு பொருத்தி உள்ளோம். அதுமட்டுமல்லாமல் இந்த ஸ்டுடியோவில் உள்ள அனைத்து நாற்காலிகளும், மேஜைகளும் Luxhamburg-கில் இருந்து வந்தது. 

United  Kingdom  ஸ்டுடியோ-எச்சுக்காக மட்டுமே தயாரித்த ஒலிபெருக்கிகள் அங்குள்ள Quested என்ற கம்பெனி அனுப்பியது. குறிப்பாக இசை கலைஞர்கள் உட்காரும் நாற்காலி மற்றும் அவர்கள் முன் இருக்கும் music  stand இத்தாலியில் உள்ள B & B என்ற நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்டது. இப்படி ஒவ்வொரு சிறு விஷயத்திலும் நான் தனி கவனம் செலுத்தி சிறந்தவற்றையே வாங்கியதால் பணம் அதிகம் செலவானது உண்மைதான்.

ஆனால்  இப்படி ஒரு சிறந்த, உலகத்தரம் வாய்ந்த ஒலிப்பதிவுக் கூடம் நமக்கு கிடைத்ததல்லவா?  உலகிலேயே ஒரே குடையின் கீழ் எல்லாமே கிடைக்கும் ஒலிப்பதிவுக் கூடம் பத்து இருக்கிறதென்றால், அந்த பத்தில் "ஸ்டுடியோ -எச்' கண்டிப்பாக ஒரு இடத்தை பிடிக்கும் என்பது திண்ணம். 

இந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் நான் முழுமையாக உழைத்து உருவாக்கிய படம்தான் எனது 50ஆவது படம் "வனமகன்'. 

இந்த ஒலிப்பதிவுக் கூடத்தை நான் வாடகைக்கு கொடுப்பதில்லை. நான் மட்டுமே உபயோகிக்க கட்டியுள்ளேன். மற்றொரு விஷயம், இந்த உலகத்தரம் வாய்ந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒலிப்பதிவு செய்வதற்காக ஒரு பைசா கூட அதிகமாகத் தயாரிப்பாளர்களிடம் நான் வாங்குவதில்லை. பழைய ஒலிப்பதிவு கூடத்தில் என்ன சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேனோ அதுவே இன்றும் தொடர்கிறது. ஆக நான் இதை கட்டியுள்ளது தமிழ்ப் படங்களுக்காக, என் இசை உலகத்தரம் வாய்ந்த இசையாக மாற வேண்டும் என்பதற்காகவும்தான். 

இயக்குநர் ஷங்கர் என்  "ஸ்டுடியோ-எச்'சைப் பார்த்து விட்டு கூறியதுதான் என் மனதில் இன்றும் இருக்கிறது.  "ஹாரிஸ், நீங்கள் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக தமிழ் படங்களின் இசைத்தரத்தை உயர்த்த பாடுபடுகிறீர்கள். நீங்கள் ஆங்கிலப் படங்களுக்கே இசை அமைக்கலாம்' என்றார். அவரது பாராட்டு எனக்கு சந்தோஷத்தை அளித்தது என்றால் அது மிகை இல்லை'' என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com