இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது

பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது

பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

திரைத் துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கெளரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது.

சத்யஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, எல்.வி.பிரசாத், ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே.பாலசந்தர் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் பலரின் புகழுக்கு தாதா சாகேப் விருது அணி சேர்த்துள்ளது.

இந்நிலையில், 2016-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இம்முறை சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல திரைப்படங்களை இயக்கிய கே.விஸ்வநாத்துக்கு அவ்விருது கிடைத்துள்ளது.

அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறும் தேசியத் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தாதா சாகேப் பால்கே விருதை விஸ்வநாத்துக்கு வழங்க உள்ளார். அப்போது, தங்கத் தாமரை பதக்கம் மற்றும் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அவருக்கு வழங்கப்படும்.

இந்திய சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற படைப்பாளிகளில் கே.விஸ்வநாத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் குடிவாடா பகுதியில் 1930-ஆம் ஆண்டு பிறந்த அவர், திரைத் துறையின் மீதிருந்த தீராக் காதலால் உதவி இயக்குநராக தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார்.

அதன் பிறகு இயக்குநராக உருவெடுத்த அவர் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி சாதனை படைத்துள்ளார். அவற்றில் 'சங்கராபரணம்', 'சாகர சங்கமம்' (சலங்கை ஒலி), 'ஸ்வாதி முத்யம்' (சிப்பிக்குள் முத்து), உள்ளிட்ட சாகாவரம் பெற்றவை. அவை அனைத்தும் தமிழ் உள்பட பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றன.

வணிக நோக்குக்காக அல்லாமல், கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான கலைப் படங்களை எடுத்த கே.விஸ்வநாத்துக்கு, 5 தேசிய விருதுகளும், 20 நந்தி விருதுகளும் கிடைத்துள்ளன. இதைத் தவிர, கடந்த 1992-ஆம் ஆண்டில் மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.

வயது முதிர்ந்த பிறகு இயக்குநர் என்ற பரிமாணத்திலிருந்து அவர் நடிகராகவும் உருவெடுத்தார். 'யாரடி நீ மோகினி', 'உத்தம வில்லன்', 'லிங்கா', 'ராஜபாட்டை' உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com