ஃபெப்சி ஊழியர்கள் 2-வது நாள் வேலை நிறுத்தம்!

ஃபெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாகத் தொடர்கிறது. இதனால்...
ஃபெப்சி ஊழியர்கள் 2-வது நாள் வேலை நிறுத்தம்!

ஃபெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாகத் தொடர்கிறது. இதனால் ரஜினியின் காலா உள்ளிட்ட 90 சதவீத படப்பிடிப்பு மற்றும் படப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சம்பள உயர்வு உள்ளிட்ட ஃபெப்சி தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நிராகரித்துள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமை முதல் ஃபெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நடந்து வந்த பெரும்பான்மையான படத்தின் படப்பிடிப்புகளை ஃபெப்சி தொழிலாளர்கள் புறக்கணித்தனர். செவ்வாய்க்கிழமை காலை முதலே தொழிலாளர்கள் யாரும் படப்பிடிப்புத் தளத்துக்குச் செல்லாததால், படப்பிடிப்புகளைத் திட்டமிட்டவாறு தொடங்க முடியவில்லை. சென்னை பூந்தமல்லியில் நடந்து வந்த ரஜினியின் காலா, விஜயின் மெர்சல் உள்ளிட்ட பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. சென்னைக்கு வெளியே மற்ற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் நடந்து வந்த படப்பிடிப்புகள், எந்த வித இடையூறும் இன்றி நடந்தது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் துப்பறிவாளன் படப்பிடிப்பு சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் பகுதியில் நடந்தது. இதே போல் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி, சரத்குமார், சசிகுமார், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட நடிகர்களின் வெளிப்புறப் படப்பிடிப்புகள் நடந்தன. இதில் ஃபெப்சி தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் இருக்கும் 100-க்கும் அதிகமான படங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

விஷாலுக்கு ஒளிப்பதிவாளர் சங்கம் ஆதரவு: ஃபெப்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைப்பான ஒளிப்பதிவாளர் சங்கம், இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஆதரவு அளித்துள்ளது. வழக்கம் போல் படப்பிடிப்பில் பங்கேற்போம் என அந்த சங்கத்தின் தலைவர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்திருந்தார். இதன்படி ஒளிப்பதிவாளர்கள் பலர் படப்பிடிப்பில் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஃபெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாகத் தொடர்கிறது. இதனால் ரஜினியின் காலா உள்ளிட்ட 90 சதவீத படப்பிடிப்பு மற்றும் படப் பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்த இரு நாள்களில் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்புக்கும் சமாதானம் ஏற்பட்டு, வேலை நிறுத்தம் விரைவில் வாபஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com