ரஜினியுடன் பேசியது என்ன?: செல்வமணி பேட்டி

இன்று மட்டுமல்ல எந்தக் காலக்கட்டத்திலும் வேலைநிறுத்தத்துக்கு எதிராகவே ரஜினி இருந்துள்ளார்...
ரஜினியுடன் பேசியது என்ன?: செல்வமணி பேட்டி

ஃபெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாகத் தொடர்கிறது. இதனால் ரஜினியின் காலா உள்ளிட்ட 90 சதவீத படப்பிடிப்பு மற்றும் படப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் செல்வமணி உள்ளிட்ட ஃபெப்சி நிர்வாகிகள் ரஜினியை இன்று சந்தித்துப் பேசியுள்ளார்கள். ரஜினியுடன் பேசியது குறித்து செல்வமணி பேட்டியளித்துள்ளார். 

சம்பள உயர்வு உள்ளிட்ட ஃபெப்சி தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நிராகரித்துள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமை முதல் ஃபெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நடந்து வந்த பெரும்பான்மையான படத்தின் படப்பிடிப்புகளை ஃபெப்சி தொழிலாளர்கள் புறக்கணித்தனர். செவ்வாய்க்கிழமை காலை முதலே தொழிலாளர்கள் யாரும் படப்பிடிப்புத் தளத்துக்குச் செல்லாததால், படப்பிடிப்புகளைத் திட்டமிட்டவாறு தொடங்க முடியவில்லை. சென்னை பூந்தமல்லியில் நடந்து வந்த ரஜினியின் காலா, விஜயின் மெர்சல் உள்ளிட்ட பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. 

இந்நிலையில், ஃபெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாகத் தொடர்கிறது. இதனால் ரஜினியின் காலா உள்ளிட்ட 90 சதவீத படப்பிடிப்பு மற்றும் படப் பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, செல்வமணி தலைமையில் ஃபெப்சி நிர்வாகிகள் ரஜினியை இன்று சந்தித்தார்கள். ரஜினி அவர்களிடம் வேலை நிறுத்தம், தொழிலாளர் நிலை குறித்துக் கேட்டறிந்தார். ரஜினி நடிக்கும் காலா படத்தின் படப்பிடிப்பும் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் ரஜினி நேரடியாக இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. இப்பிரச்னையில் இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படுத்த ரஜினி முயல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரஜினியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் ஃபெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி கூறியதாவது: 

வேலை நிறுத்தம் எதற்கும் தீர்வாகாது என ரஜினி சொன்னார். கமலிடமும் இந்த விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். சுமூக உறவு ஏற்பட நடவடிக்கை எடுப்பதாக ரஜினி கூறினார். எனவே சமரசம் ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் அவர் இறங்குவார் என எதிர்பார்க்கிறோம். இன்று மட்டுமல்ல எந்தக் காலக்கட்டத்திலும் வேலைநிறுத்தத்துக்கு எதிராகவே ரஜினி இருந்துள்ளார். யார் தவறு செய்தாலும் பேச்சுவார்த்தையின் மூலமாகவே தீர்வு காணவேண்டும் என்று கூறுவார். 

வேலைநிறுத்தம் ஃபெப்சி தொழிலாளர்களை வெகுவாகப் பாதித்துள்ளது. ஃபெப்சி போன்ற மற்றொரு தொழிலாளர் சங்கத்தை உருவாக்கத் தயாரிப்பாளர் சங்கம் முயற்சி செய்யலாம். ஆனால் அதற்குக் காலமாகும். சம்பளத்தில் பிரச்னை இல்லை. பொது விதிகளில் தான் பிரச்னை. எந்தெந்த நேரத்தில் எப்படிச் சம்பளம் வழங்கவேண்டும் என்பதில் சிக்கல் உள்ளது. 

ரஜினி - கமலுக்கு தயாரிப்பாளர் சங்கம் - ஃபெப்சி ஆகிய இரு தரப்பும் சகோதரர்கள் போல. எனவே இப்பிரச்னையில் தலையிட்டால் மற்றொரு அமைப்பிடம் கெட்டப் பெயர் உருவாகுமோ என இருவரும் எண்ணவேண்டியதில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com