எனக்குப் பிடிக்காத வார்த்தைகளில் ஒன்று வேலைநிறுத்தம்: ஃபெப்சி விவகாரத்தில் சுமுகமாக பேசி தீர்வு காண ரஜினி அறிவுரை

எனக்குப் பிடிக்காத வார்த்தைகளில் ஒன்று வேலைநிறுத்தம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலர் அங்கமுத்து சண்முகம்.
நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலர் அங்கமுத்து சண்முகம்.

எனக்குப் பிடிக்காத வார்த்தைகளில் ஒன்று வேலைநிறுத்தம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஃபெப்சி தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினியின் காலா, விஜயின் மெர்சல், விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை, சசிகுமாரின் கொடி வீரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இரண்டாம் நாளாக புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன.

வெளி மாவட்டங்களில் நடந்து வந்து படப்பிடிப்புப் பணிகளும் பாதிப்படைந்தன. சுமார் 95 சதவீத படப்பிடிப்பு மற்றும் படப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இந்தப் பிரச்னையில் சமரசம் ஏற்படுத்தும் வகையில் ஃபெப்சி அமைப்பு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இதற்கு பதில் இல்லாததால் ரஜினி, கமல் உள்ளிட்ட மூத்த நடிகர்களின் துணையுடன் இந்த பிரச்னையை ஃபெப்சி அமைப்பு அணுகி வருகிறது.

இது தொடர்பாக ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் அங்கமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்தை புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட செய்தி: எனக்குப் பிடிக்காத வார்த்தைகளில் வேலைநிறுத்தம் என்கிறது ஒன்று. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சுய கௌரவம் பார்க்காமல், பொது நலத்தை மட்டுமே கருதி அன்பான வார்த்தைகளிலேயே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும் ஃபெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமுகமான தீர்வு காண வேண்டும் என்று மூத்த கலைஞன் என்ற முறையில் அன்பான வேண்டுகோள் வைக்கிறேன்.
 

விரைவில் பேச்சுவார்த்தை: ஆர்.கே.செல்வமணி 

ஃபெப்சி விவகாரத்தில் விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் நிலை உருவாகி வருவதாக தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது: அனைத்து வித படப்பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எங்களுக்கும் இதில் பெரிய பாதிப்பு. ரஜினியின் காலா படம் நின்று போனதால், சுமார் 1,500 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காலா படப்பிடிப்பு நின்று போனதற்கு நாங்கள் காரணமல்ல என்பதைச் சொல்லவே நாங்கள் ரஜினியை சந்தித்து வந்தோம்.


வேலை நிறுத்தம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ரஜினிகாந்த் சொன்னார். இது பற்றி சுமுக நிலையை உண்டாக்குகிறேன் என்றும் உறுதியளித்தார். அதை ஏற்றுக் கொண்டு வந்தோம். இது தொடர்பாக கமல்ஹாசனையும் சந்தித்துப் பேசவுள்ளோம்.


40 படங்கள் நிறுத்தம்: இதுவரை 40 படங்களின் படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் வெளியூரில் இருப்பதால், அவர் வந்தவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என நினைக்கிறேன். 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். இது எங்களுக்குப் பெரிய பாதிப்பு. வேலை நிறுத்தம் தொடரக் கூடாது என்பதுதான் எங்களின் நிலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com