பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு: ஃபெப்சி வேலைநிறுத்தம் வாபஸ்

முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளதையடுத்து, ஃபெப்சி தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை
பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு: ஃபெப்சி வேலைநிறுத்தம் வாபஸ்

முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளதையடுத்து, ஃபெப்சி தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை (ஆக 4) முதல் பணிக்குத் திரும்புவார்கள் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் (ஃபெப்சி) தலவைர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த வேலைநிறுத்தம் மூன்றாம் நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்தது. இதன் விளைவாக, ரஜினியின் 'காலா', விஜய்யின் 'மெர்சல்' உள்ளிட்ட 50 -க்கும் அதிகமான திரைப்படங்களின் படப்பிடிப்புகள் மூன்று நாள்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டிருந்தது. வெளிமாவட்டங்களில் நடந்து வந்து படப்பிடிப்பு பணிகளும் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

தயாரிப்பாளர் சங்கம் எடுத்த சில தன்னிச்சையான முடிவுகளால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக தொழிலாளர் துறை ஆணையரை சந்தித்து எங்களது கோரிக்கைகளை தெரிவித்தோம். மனு கொடுத்ததுமே தயாரிப்பாளர் சங்கத்துடன் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை (ஆக. 4) இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிகிறது. அதில், எங்களது கோரிக்கைளை நிறைவேற்றி தருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அந்த உத்தரவாதத்தின் அடிப்படையிலும், ரஜினி, கமல் உள்ளிட்ட மூத்த நடிகர்ளின் அறிவுறுத்தலின் பேரிலும், இந்த விவகாரம் குறித்து பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பேசி வருவதன் அடிப்படையிலும், வெள்ளிக்கிழமை முதல் பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளோம்.
 

எங்களிடம் நிபந்தனை இல்லை: இந்த 3 நாள்களில் தொழிலாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தரப்பில் எத்தனை கோடி ரூபாய் இழப்பு என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். ஃபெப்சியில் உள்ள 23 சங்கங்களைப் பிளவுப்படுத்த வேண்டாம் என்பதை தவிர முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு எங்களிடம் வேறு எந்த நிபந்தனையும் இல்லை என்றார் ஆர்.கே.செல்வமணி.


யாருடனும் பணி புரிவோம்


ஏற்கெனவே அறிவித்தபடி, வேறு எந்த அமைப்பு தொழிலாளர்களுடனும் பணி புரிவோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:


ஃபெப்சி அமைப்பு வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. நாங்கள் ஏற்கெனவே அறிவித்தபடி ஃபெப்சி அமைப்புடனும், வேறு எந்த அமைப்புடனும் பணி புரிவோம் என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுப்படுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் விஷால்.
அரசு அழைத்துள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஃபெப்சி அமைப்பு நிபந்தனை எதுவும் விதிக்காத நிலையில், தயாரிப்பாளர் சங்கம் ஏற்கெனவே அறிவித்ததையே நிபந்தனையாக வைத்துள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சிக்கல் எழும் என தெரிகிறது.
இதனிடையே தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்குவது என்பது குறித்து தயாரிப்பாளர் சங்கம் குறிப்பேடு தயாரித்துள்ளது. அதை படப்பிடிப்பில் இருக்கும் தயாரிப்பாளர்கள் பெற்று, தொழிலாளர்களுக்கு அதன்படி சம்பளம் வழங்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com