ஃபெப்சி விவகாரம்: ஆக.11-ல் இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை

ஃபெப்சி தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஆக. 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத நிலையில்
ஃபெப்சி விவகாரம்: ஆக.11-ல் இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை

ஃபெப்சி தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஆக. 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய வேலை நிறுத்தம் மூன்று நாள்கள் நீடித்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அறிவுறுத்தலின் படியும், தமிழக அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்றும் ஃபெப்சி தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர்.

இந்நிலையில், அரசின் முத்தரப்பு பேச்சுவார்த்தை சனிக்கிழமை (ஆக.4)-ல் நடைபெற்றது. இதில் தமிழக தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளும், ஆர்.கே.செல்வமணி தலைமையிலான ஃபெப்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் அந்த சங்கத்தின் துணைத் தலைவர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் தங்களது கோரிக்கைகளை அரசின் முன் வைத்தனர். அரசு அதிகாரிகளும் இது தரப்பு கோரிக்கைகளை கேட்டறிந்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக நிலை ஏற்படவில்லை. இதையடுத்து அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும் 11-ஆம் தேதி அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஃபெப்சியின் கோரிக்கை என்ன...?

தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஒப்பந்தப்படி, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பொதுவிதிகளை எழுதி புத்தகம் போட வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் என்ன எழுதியிருக்கிறதோ, அதைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டும். அந்தச் சம்பளத்தைத்தான் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால், 2008-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை போடப்பட்ட புத்தகத்தின் பொதுவிதி நடைமுறைதான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. அதில் போடப்பட்ட பொதுவிதியின்படிதான் இன்றும் சம்பளம் உள்ளிட்ட சில சலுகைகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக புது புத்தம் போடப்படவில்லை. தற்போது அதிலுள்ள பொது விதிகளையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது தயாரிப்பாளர் சங்கம். நாங்கள் கொடுப்பதைத்தான் நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும் என, தடலாடியாக தயாரிப்பாளர் அறிவித்திருப்பதுதான் இப்போது பிரச்னை. கடந்த 50 வருடங்களாக இருந்து வந்த நடைமுறையை மாற்றுவதைத்தான் ஃபெப்சி அமைப்பு எதிர்க்கிறது.

தயாரிப்பாளர்கள் சொல்வது என்ன...?

பெருகி விட்ட படத் தயாரிப்பு செலவு, ஜி.எஸ்.டி. வரி மற்றும் கேளிக்கை வரி உள்ளிட்ட பல பிரச்னைகளை தயாரிப்பாளர் சங்கம் பிரதானமாக முன் வைக்கிறது. ஃபெப்சி தொழிலாளர்களுடனும் வேலை செய்வோம். தேவைப்பட்டால் வெளி ஆள்களை வைத்தும் வேலை செய்வோம் என்பது தயாரிப்பாளர்களின் நிலைப்பாடு. ஃபெப்சி அமைப்புடன் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும் என்ற தொழிலாளர்களின் நிபந்தனையை ஒட்டு மொத்தமாக ஏற்க மறுக்கின்றனர் தயாரிப்பாளர்கள். தேவைப்பட்டால் மட்டுமே ஃபெப்சி தொழிலாளர்களையும் சேர்த்துக்கொள்வோம் என்பது தயாரிப்பாளர்களின் நிலை. பொதுவிதி புத்தகத்தில் உள்ள அம்சங்களையும், நடைமுறையில் இருக்கும் அம்சங்களையும் எதிர்க்கும் வகையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல்பாடு உள்ளது. பழைய நிர்வாகம் கொடுத்த சம்பளத்தையும் சலுகைகளையும் நாங்கள் கொடுக்க முடியாது என்பது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் முக்கிய நிபந்தனை. சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு சில சலுகைகளை ஃபெப்சி கொடுக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கைகளில் ஒன்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com