பெண்களை தவறாக விமர்சிக்க கூடாது: நடிகர் விஜய்

பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் குறித்து ஆபாசமாக ட்வீட் வெளியான விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய், புதன்கிழமை கண்டனம் தெரிவித்தார்.
பெண்களை தவறாக விமர்சிக்க கூடாது: நடிகர் விஜய்

பத்திரிகையாளரான தன்யா ராஜேந்திரன், விஜய் நடித்த சுறா படம் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டார். விஜய் நடித்த சுறா படத்தை இடைவேளை வரை பார்த்து பிறகு வெளியேறிவிட்டேன். ஆனால் ஜப் ஹாரி மெட் சேஜல் படத்தை இடைவேளை வரைக்கும் கூட பார்க்கமுடியவில்லை என்று ட்வீட் செய்தார். இதற்குக் கண்டனம் தெரிவித்து பலர் தன்யாவுக்கு எதிராக ட்வீட்களை வெளியிட்டார்கள்.

ஆனால் அவ்வகையான ட்வீட்கள்  மோசமாகவும் ஆபாசமான முறையிலும் இருந்தன. இதனால் தன்னுடைய ட்வீட்டை தன்யா பிறகு நீக்கிவிட்டார். ஆனாலும் மோசமான வார்த்தைகளைக் கொண்ட ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி தன்யாவுக்கு எதிரான ஆபாசமான ட்வீட்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. 

இதையடுத்து அதுபோன்று ட்வீட் செய்தவர்களுக்குக் கண்டனம் தெரிவித்தும் தன்யாவுக்கு ஆதரவாகவும் பலர் ட்வீட்களை வெளியிட்டு வருகிறார்கள். இதில் நடிகர் விஜய், தனது ரசிகர்களைக் கட்டுப்படுத்தவேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் தன்யா. தன்னை ஆபாசமாக விமரிசனம் செய்த ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள். தன்யா அளித்த புகாரின் பேரில் இரு ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் விஜய் கூறியதாவது:

சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான். யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்துச் சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குரைவாகவோ, விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும். அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com