விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறிய பிறகு அவர் நடித்துவரும் படங்கள் மீது கவனம் குவிந்துள்ளது...
விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை!

துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு மீண்டும் இணையவுள்ளார்கள் விஜய்யும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும். அட்லி இயக்கும் மெர்சல் படத்தில் தற்போது நடித்துவருகிறார் விஜய். இதற்கடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக இருவரும் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. அக்டோபர் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஏப்ரலில் படம் வெளிவர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் - முருகதாஸ் இணையும் படத்தில் ஓவியா நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக படக்குழுவினர் ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஓவியா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத பட்சத்தில் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்புண்டு. இரு கதாநாயகிகளில் நடிக்கும் இப்படத்தில் ஓவியா முன்னணி கதாநாயகியாக நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறிய பிறகு அவர் நடித்துவரும் படங்கள் மீது கவனம் குவிந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியால் கிடைத்த புகழுக்குப் பிறகு அவருக்குப் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக விஜய் பட வாய்ப்பைப் பெறவுள்ளார் ஓவியா. 

மகேஷ் பாபு நடிக்கும் ஸ்பைடர் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ். இதில் ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிவருகிறது. இசை, ஹாரிஸ் ஜெயராஜ்; ஒளிப்பதிவு, சந்தோஷ் சிவன். செப்டம்பர் 29 அன்று இப்படம் வெளிவரவுள்ளது. இதற்கடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார் முருகதாஸ்.

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்றிருப்பவர், நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன. சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆதரவாக மட்டுமல்லாமல் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகளை எழுதினார்கள். சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகின. தமிழ்த் திரையுலகினரும் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள். இந்நிலையில் காதல் தோல்வியால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறியது எதிர்பாராத திருப்பம்.

நடிகை ஓவியாவின் வெளியேற்றத்துக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரேட்டிங் மிகவும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஓவியா, ஜூலி வெளியேறிய பிறகு பிக் பாஸ் குடும்பத்தினரிடையே பெரிய அளவில் கருத்துவேறுபாடுகள் ஏற்படுவதில்லை. இதனால் நிகழ்ச்சி சுவாரசியமாக இல்லை என்று பார்வையாளர்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து வைல்ட் கார்ட் வழியாக இந்நிகழ்ச்சியில் ஓவியா மீண்டும் கலந்துகொள்ளவுள்ளார் என்று அறியப்படுகிறது. இதுகுறித்து விஜய் டிவி, ஓவியாவிடம் பேசி வருவதாகவும் அவர் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com