சென்னையில் கபாலி வசூலை மிஞ்சியது: கோடிகளைக் கொட்டும் அஜித்தின் விவேகம்!

இதுவரை வந்த எந்தப் படங்களையும் விடவும் விவேகம் படத்தின் முதல் நாள் வசூல் அதிகம் என திரையரங்கு சார்பில்...
சென்னையில் கபாலி வசூலை மிஞ்சியது: கோடிகளைக் கொட்டும் அஜித்தின் விவேகம்!

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்தப் படம் நேற்று வெளியானது. படத்துக்குக் கலவையான விமரிசனங்கள் வெளிவந்தாலும் வசூலில் பல சாதனைகளைப் படைக்கும் என்பது முதல் நாள் வசூல் விவரங்களில் இருந்து தெரியவருகிறது.

சென்னையில் மட்டும் விவேகம் படம் ரூ. 1.21 கோடி வசூலித்துள்ளது. இது கபாலியின் முதல் நாள் வசூலை விடவும் அதிகம். சென்னையில் முதல் நாளன்று கபாலி, தெறி, விவேகம் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே ரூ. 1 கோடி வசூலை முதல் நாளன்று பெற்றுள்ளது. சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கில் இதுவரை வந்த எந்தப் படங்களையும் விடவும் விவேகம் படத்தின் முதல் நாள் வசூல் அதிகம் என அத்திரையரங்கு சார்பில் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜிஎஸ்டி காரணமாக டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது விவேகம் படத்தின் வசூலுக்கு மிகவும் உதவியுள்ளது. 

சென்னை - முதல்நாள் வசூல்

1. விவேகம் - ரூ. 1.21 கோடி
2. கபாலி - ரூ. 1.12 கோடி
3. தெறி - ரூ. 1.05 கோடி

இந்த வசூலை தீபாவளி சமயத்தில் வெளியாகும் விஜய்யின் மெர்சல் படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல கேரளாவில் முதல் நாள் வசூலாக மட்டும் ரூ. 2.90 கோடியைப் பெற்றுள்ளது விவேகம். 

கர்நாடகாவில் 75 திரையரங்குகளில் விவேகம் வெளியாகியுள்ளது. அதில் 40 பெங்களூரில் மட்டும். முதல் நாளன்று பெங்களூரில் மட்டும் 400 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. வழக்கமாக பாலிவுட் படங்களுக்கே பெங்களூரில் முதல் நாளன்று 300 காட்சிகள் ஒதுக்கப்படும். இந்நிலையில் அந்த அளவுகோலையும் விவேகம் மிஞ்சியுள்ளது. விவேகம் படத்துக்கான கர்நாடக உரிமையை ரூ. 5 கோடிக்குப் பெற்றுள்ளது ப்ருந்தா அசோசியேட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் தரப்பில் வெளியான தகவலின்படி, கர்நாடகத்தில் முதல் நாளில் மட்டும் ரூ. 1 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது விவேகம். இன்னும் அதிகாரபூர்வத் தகவல்கள் வெளிவராத நிலையில் கர்நாடகாவில் முதல் நாளன்று கிட்டத்தட்ட ரூ. 2 கோடி வசூல் செய்திருக்கவும் வாய்ப்புண்டு என்றறியப்படுகிறது. 

இத்தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, ஒட்டுமொத்தமாக முதல் நாளன்று ரூ. 30 கோடி வசூலை விவேகம் படம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com