அஜித்தின் ‘விவேகம்’ வெளியீட்டினால் தள்ளி போன விஜய்யின் ‘மெர்சல்’ டீஸர்! 

மெர்சல் மற்றும் விவேகம் படத்தின் படத்தொகுப்பாளரான ரூபன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது.
அஜித்தின் ‘விவேகம்’ வெளியீட்டினால் தள்ளி போன விஜய்யின் ‘மெர்சல்’ டீஸர்! 

முன்னணி நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே மோதல் வருவது தமிழ் சினிமாவிற்குப் புதிது இல்லை என்றாலும், இந்தக் கால ரசிகர்கள் சினிமா சார்ந்த தெளிவை அதிகம் பெற்றிருந்தும் கண்மூடித்தனமாக மோதல்களில் ஈடுபட்டுத்தான் வருகிறார்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது இவர்களது மோதல்கள் பல கோடி பேர் பார்க்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகரைத் தாழ்த்தி பேசுவது, அவர்களது படங்களை கேலி செய்து மீம்கள் மற்றும் கருத்துகளை பகிர்வது என இவர்களது அட்டூழியங்களுக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. உண்மையான ரசிகர்களைக் கூட ஒரு சில பதிவுகள் முகம் சுளிக்க வைக்கிறது.

இந்நிலையில் விஜய் மற்றும் அஜித்தின் சமீபத்திய படங்களான மெர்சல் மற்றும் விவேகம் படத்தின் படத்தொகுப்பாளரான ரூபன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது;

"நான் கடந்த சில நாட்களாக சினிமா துறைக்கு எதிரான பல செயல்களைக் காண்கிறேன். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இப்போது அனைவரும் சினிமா விமர்சகர்களாக மாறிவிட்டார்கள். அதிலும் குறிப்பாக பணத்திற்காக முரண்பாடான விமர்சனங்களைக் கூறுபவர்களும், ரசிகர்களைப் போன்று வேடம் அணிந்தவர்களும், படத்தைக் குறித்தும், அதில் நடித்த நடிகர் மற்றும் இயக்குநரைப் பற்றியும் தவறான கருத்துக்களை கூறுகிறார்கள் (இன்றைய காலகட்டத்தில் நல்லதைவிடக் கெட்டது அதிகமானவர்களைச் சென்றடைகிறது) 

இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் என்னுடைய நடிகர்களான அஜித் மற்றும் விஜய், இயக்குநர்கள் அட்லி குமார் மற்றும் சிவா குமார், தயாரிப்பாளர்களான சத்யஜோதி ஃபில்ம்ஸ் மற்றும் தேனாண்டால் ஸ்டுடியோஸ் ஆகிய அனைவருக்கும் அவர்களுடைய சமமான அன்பு மற்றும் மரியாதைக்கு நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். இவர்கள் இருவரும் அவரவர் படங்களின் முதல் பார்வை, டீஸர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு நிரல்களை ஒன்றோடொன்று மோதாத வகையில் வடிவமைத்தனர். 

உதாரணத்திற்கு: விவேகம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்காக மெர்சல் படத்தின் சிங்கிள் டிராக் வெளியீட்டிற்காகத் தள்ளி வைக்கப்பட்டது. அதே போல் மெர்சல் படத்தின் டீஸர் விவேகம் படம் வெளியீட்டிற்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

பின் குறிப்பு: எது எப்படியிருந்தாலும் நாம் அனைவரும் சினிமா என்னும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், அதனால் பரந்த மனப்பான்மையுடன் ஒருவரை ஒருவர் மதிப்போம். ஆம் நான் ஒத்துக்கொள்கிறேன், இது ஒரு போட்டி உலகம்தான் ஆனால் அதற்காகக் கட்டுப்படுத்த முடியாத வன்முறைகள் தேவையில்லை."

என்று அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜா ராணி, தெறி, டார்லிங், வேதாளம், ரெமோ போன்ற படங்களின் படத்தொகுப்பாளரான ரூபன் தெரிவித்துள்ள இந்தக் கருத்து பலதரப்பட்ட ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com