தனுஷின் அருகில் நிற்பதைப் பெரிதாக எண்ணுகிறேன்: சிம்பு பேச்சு

அவர் சரியாகப் படங்கள் செய்துகொண்டிருப்பதால்தான் என்னால் இப்படி சரியில்லாமல் இருக்கமுடிகிறது...
தனுஷின் அருகில் நிற்பதைப் பெரிதாக எண்ணுகிறேன்: சிம்பு பேச்சு

நான் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் சிம்பு - அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படம் தொடர்பான சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்துக்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். இப்படத்தில் வைபவி, விவேக் போன்றோர் நடித்துள்ளார்கள். தயாரிப்பு - விடிவி கணேஷ். இயக்கம் - சேதுராமன்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் ராஜேஷ், நடிகர் மயில்சாமி, ரோபோ சங்கர் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் சிம்பு பேசியதாவது:

சந்தானத்துக்காக இந்தப் படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டேன். வாலி சார், வைரமுத்து சார், யுவன் சங்கர் ராஜா என பலர் என்னுடைய வளர்ச்சிக்கும் இந்த முயற்சிக்கும் உதவியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றிகள். இளையராஜாவின் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன். அவர் இசை எனக்குப் பெரிய ஊக்கம். அதேபோல மைக்கேல் ஜாக்சன் பாடல்களும் மிகவும் பிடிக்கும். ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களும் எனக்கு ஊக்கமாக இருந்துள்ளன. யுவனின் கீபோர்டில் நான் நிறைய விளையாடுவேன். ஆனால் அவர் கோபித்துக்கொள்ளவே மாட்டார். அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளார். நானே யுவனிடம் கேட்டுள்ளேன், உங்களுடைய ஜாதகத்தை எனக்குக் கொடுங்கள். அதேபோல பெண்ணைத் தேடிக்கொள்கிறேன் என்று சொல்லியுள்ளேன். 

எல்லாப் பாடல்களும் தயாரான பிறகு தனுஷுக்கு அனுப்பி கருத்துகளைக் கேட்டேன். பிறகு பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். உடனே ஒப்புக்கொண்டார். இருவருக்குமிடையில் நிறைய அன்பு உள்ளது. அவர் சரியாகப் படங்கள் செய்துகொண்டிருப்பதால்தான் என்னால் இப்படி சரியில்லாமல் இருக்கமுடிகிறது. அவருடைய முதல் படத்திலிருந்தே கவனித்து வருகிறேன். காதல் கொண்டேன் படத்தை பிரிவியூ-வில் பார்த்து அசந்துபோனேன். அப்படத்தின் முதல் ஷோவை தனுஷுடன் சேர்ந்துதான் பார்த்தேன். தனுஷ் என்னைப் போல சினிமாவுக்கு விரும்பி வரவில்லை. ஆனால் அவர் மீது சுமத்தப்பட்ட பொறுப்பை அருமையாக ஏற்றுக்கொண்டுள்ளார். மிகவும் பொறுப்புடன் படங்கள் செய்கிறார். இறைவனால் அவருக்கு அருகில் நானும் நிற்பதற்கு ஓர் இடம் கிடைத்ததைப் பெரிதாக எண்ணுகிறேன். 

எல்லோரும் என் மீது தவறு சொல்கிறார்கள். எதுவும் இல்லாமல் யாரும் சொல்லமாட்டார்கள். என் மீதும் தவறு இருக்கிறது. நான் இதை ஒப்புக்கொள்கிறேன். 

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் சரியாகப் போகவில்லை. ரசிகர்களுக்காக ஜாலியாக செய்த படம். ஒரே பாகமாக எடுக்கவேண்டும் என்று எண்ணித்தான் படமெடுத்தோம். ஆனால் அதுபோல செய்யமுடியவில்லை. அதனால் கொஞ்சம் செலவானதால் தயாரிப்பாளருக்கு வேதனை இருந்தது. இந்தப் படத்தின் தோல்வி அடுத்தடுத்த படங்களில் சரியாகிவிடும். 

பிரச்னைகளைப் படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது சொல்லியிருக்கலாம். அல்லது படம் வெளியான பிறகு சொல்லியிருக்கலாம். ஒரு மாதம் கழித்துச் சொல்லியிருக்கலாம். 6 மாதத்துக்குப் பிறகு சொல்வதுதான் வருத்தமாக உள்ளது. அதையும் மீறி நான் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

நான் நல்லவன் என்று எப்போதும் சொல்லமாட்டேன். நான் என்னென்ன தவறு செய்துள்ளேன் என்பது எனக்குத் தெரியும். மற்றபடி என்மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க விரும்பவில்லை. யாருக்கு விளக்கம் அளிக்கிறோம் என்பது முக்கியம் அல்லவா.  

இனிமேல் நடிக்கமுடியாது என்றுகூட சொல்கிறார்கள். இன்றுவரை மணிரத்னம் படத்தில் இருக்கிறேன். அப்படித்தான் மணி ரத்னம் கூறியுள்ளார். அவரும் எனக்கு ரசிகரா என்பது எனக்குத் தெரியாது. சரி, ரெட் போட்டு நடிக்கமுடியாமல் செய்தாலும் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அப்போதும் என் ரசிகர்களுக்காக ஏதாவது செய்வேன். அதை யாராவது தடுத்தால் நான் சும்மா விடமாட்டேன் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com