தனக்குச் சரியான வாய்ப்புகள் வரவில்லை என்று வருத்தப்பட்டார்: இசையமைப்பாளர் ஆதித்யன் பற்றி கவிஞர் தாமரை!

டி.இமான் இவரது சீடரே ! நான் தனிப்பாடல் எழுதும்போது இமான் பள்ளி மாணவனாக வந்து கீபோர்ட் வாசிப்பார்...
தனக்குச் சரியான வாய்ப்புகள் வரவில்லை என்று வருத்தப்பட்டார்: இசையமைப்பாளர் ஆதித்யன் பற்றி கவிஞர் தாமரை!

மறைந்த இசையமைப்பாளர் ஆதித்யன் பற்றிய பதிவு ஒன்றை கவிஞர் தாமரை எழுதியுள்ளார்.

சிறுநீரகக் கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் கடந்த ஒரு மாத காலமாக சிசிக்சை பெற்று வந்தார் ஆதித்யன். சிறுநீரகக் கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் கடந்த ஒரு மாத காலமாக சிசிக்சை பெற்று வந்தார் ஆதித்யன். 'அமரன்', 'நாளைய செய்தி', 'சீவலப்பேரி பாண்டி', 'லக்கி மேன்', 'அசுரன்', 'மாமன் மகள்', 'சூப்பர் குடும்பம்', கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ள ஆதித்யன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

ஆதித்யனின் மறைவு குறித்து அவருடன் பணியாற்றியுள்ள கவிஞர் தாமரை, ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:

இசையமைப்பாளர் ஆதித்யன் அவர்கள் மறைந்ததாகத் தகவல் வந்துள்ளது. அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 63 வயதுதான். திறமையான இசையமைப்பாளர். சிரித்த முகம், சீரியஸ் முகம் என இரண்டின் கலவையாகப் பணியாற்றுவார்.

திரைப்படத்துறைக்கு நான் வருவதற்கு முன் இவரிடம்தான் என் முதல் தனிப்பாடலை எழுதினேன். 'என்றும் இந்தக் காதல் மாறாது' என்று ஆரம்பிக்கும். அவருடைய தனி ஒலிநாடாவில் அது இடம் பெற்றது. தன்னிடம் வாய்ப்புக் கோரி வந்த முதல் பெண்மணி என்று என்னை வியப்பார். நான் எழுதிய பாடல் வரிகளைப் பார்த்து விட்டு, "உங்க கிட்ட ஏதோ ஒரு ஸ்பார்க் இருக்கு" என்று இருபதாண்டுகளுக்கு முன் அவர் சொன்னது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. என்னைத் திரைப்படத்தில் அறிமுகம் செய்வதாகவும் இருந்தார். அதற்குள் இயக்குநர் சீமானிடமிருந்து அழைப்பு வரவே அதில் அறிமுகமானேன். நான் அறிமுகம் செய்வேன் என்று காத்திருக்க வேண்டாம், திரைத்துறையில் வாய்ப்புக் கிடைப்பது அரிது, கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சொன்னதும் நினைவிருக்கிறது.

பின்னாளில் 'காமா' என்ற படத்தில் (இயக்கம்: ஒளிப்பதிவாளர் அசோக் குமார் ) 'சோனாலி சோனாலி' என்ற பாடலை எழுதினேன். அதற்கும் பிறகு இயக்குநர் ஆர்.கே. செல்வமணியின் படம் ஒன்றுக்கு மெட்டமைப்பு நடைபெற்று என் பாடலும் பதிவாகியது. படம் வெளிவரவில்லை. 

டி.இமான் இவரது சீடரே ! நான் தனிப்பாடல் எழுதும்போது இமான் பள்ளி மாணவனாக வந்து கீபோர்ட் வாசிப்பார்.

பின்னாளில் சமையல் நிகழ்ச்சி பற்றிக் கேட்டதற்கு அதுவும் தனக்கு விருப்பமான வேலையே என்றார். ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இருக்கவேண்டும், அப்போதுதான் மக்கள் மறக்கமாட்டார்கள் என்றார். திரையுலகில் தனக்கான சரியான வாய்ப்புகள் வரவில்லை என்கிற வருத்தம் இருந்தது.

அவருடைய இசையமைப்பில் எனக்கு மிகமிகப் பிடித்த பாடல் சீவலப்பேரி பாண்டி படத்தில் இடம்பெற்ற 'கிழக்கு சிவக்கையிலே'... இன்னொரு மறக்க முடியாத இனிமையான பாடல் 'ரோஜா மலரே' படத்தில் இடம்பெற்ற 'அழகோவியம் உயிரானது'...

அவருடைய மரணம் எனக்கும் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் ஆன்மா அமைதியடையட்டும் என்று எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com