ரஜினி முதல்வரானால் அமெரிக்கத் தொழில் திட்டங்களைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருவோம்: வட அமெரிக்க ரஜினி பேரவை உறுதி!

அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு இன மக்களின் உதவியுடன் சந்திரபாபு நாயுடு பல்வேறு திட்டங்களை ஆந்திராவுக்குக் கொண்டு செல்கிறார்...
ரஜினி முதல்வரானால் அமெரிக்கத் தொழில் திட்டங்களைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருவோம்: வட அமெரிக்க ரஜினி பேரவை உறுதி!

வட அமெரிக்காவில் ரஜினிகாந்த் பேரவை ஒன்று புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை குறித்து டல்லாஸ் நகரைச் சேர்ந்த ரஜினி ரசிகரும் இந்த அமைப்பின் அமைப்பாளருமான தினகர் கூறியதாவது: 

வட அமெரிக்காவில் வசிக்கும் ரசிகர்களை ஒருங்கிணைத்து, ரஜினியின்  அரசியலுக்கும் ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பதே எங்கள் லட்சியம். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு இன மக்களின் உதவியுடன் பல்வேறு திட்டங்களையும், நிறுவனங்களையும் ஆந்திராவுக்குக் கொண்டு செல்கிறார். அதுபோல் ரஜினி தமிழக முதல்வர் ஆனதும் அமெரிக்காவிலிருந்து திட்டங்களையும் தொழில் நிறுவனங்களையும் தமிழ்நாட்டுக்குக் கொண்டு செல்ல ரஜினிக்கு உறுதுணையாக இருக்கவும் இந்தப் பேரவை செயல்படும்.

புதுத் தொழில் நுட்பங்கள் அமெரிக்காவில்தான் அறிமுகமாகின்றன. அதில் பணிபுரியும் ரஜினி ரசிகர்களை ஒருங்கிணைத்து, ரஜினியின் ஆட்சியில் தமிழகத்துக்குப் புதிய தொழில் நுட்பங்கள் கிடைக்கச் செய்ய உறுதுணையாக செயல்படுவோம் என்றார்.  

இந்த அமைப்பைச் சேர்ந்த அமெரிக்க வாழ் தமிழர்களான ரஜினி ராஜா, அன்புடன் ரவி, சீனிவாசன் மற்றும் ராம்குமார் நடராஜன் ஆகியோர் கூறியதாவது: பெருந்தலைவர் காமராஜர் வழியில், தமிழக விவசாயிகளுக்காக நதி நீர் இணைப்பு உட்பட, நீர் ஆதாரத்தைப் பெருக்குவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் களைவது, தமிழ் மொழியை பேணிக்காப்பது, தமிழர்களின் உரிமைகளை நிலை நாட்டுவது, தமிழகத்தில் தொழில் வளம், கல்வித்தரம் இரண்டையும் உயர்த்துவது, புதிய தொழில் நுட்பங்களில் தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு உட்பட பல தமிழக நலத் திட்டங்களை ரஜினி நிறைவேற்றுவார் என்று கூறியுள்ளார்கள். 

அமெரிக்காவில் வசித்தாலும்,  ராமருக்கு அணில் போல், ரஜினியின் ஆட்சியில் அவருக்கு உறுதுணையாகச் செயல்படப் போவதாகவும் வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவையினர் கூறியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com