ராஜிநாமா வாபஸ் ஏன்?: நடிகர் சங்கத் துணைத்தலைவர் பொன்வண்ணன் விளக்கம்! 

நடிகர் சங்கத் துணைத்தலைவர் பதவி ராஜிநாமா முடிவை வாபஸ் பெற்றது ஏன் என்று, நடிகர் பொன்வண்ணன், தற்போது விளக்கமளித்துள்ளார்.
ராஜிநாமா வாபஸ் ஏன்?: நடிகர் சங்கத் துணைத்தலைவர் பொன்வண்ணன் விளக்கம்! 

சென்னை: நடிகர் சங்கத் துணைத்தலைவர் பதவி ராஜிநாமா முடிவை வாபஸ் பெற்றது ஏன் என்று, நடிகர் பொன்வண்ணன், தற்போது விளக்கமளித்துள்ளார்.

நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை வகித்து வருகிறார். அதே சமயம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட விரும்பி அவர் மனுத்தாக்கல் செய்தது திரையுலகில் சர்ச்சைகளை எழுப்பியது.

சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் பொழுது அவர் தேர்தலில் நிற்பது சங்க விதிகளுக்கு முரணானது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதன் எதிரொலியாக, நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக கடிதம் எழுதி, அதனை நடிகர் சங்கத்தின் தலைவர் நாசருக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் டிசம்பர் 11-ம் தேதி நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில்,   பொன்வண்ணனின் ராஜிநாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என்று நடிகர் சங்கம் தீர்மானித்தது. அதே சமயம்  அவருடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள அவகாசமும் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பதவி ராஜிநாமா முடிவை வாபஸ் பெறுவதாக பொன்வண்ணன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நடிகர் சங்கத்திற்கு என கட்டிடம் கட்டி முடிக்க வேண்டும். அத்துடன் மலேசியா சென்று சிறப்பாக கலை நிகழ்ச்சி முடித்துவிட்டு, அடுத்த ஆறு மாத காலம் நல்ல முறையில் செயல்பட வேண்டும் ஆகிய வேலைகள் எங்கள் முன்னால் உள்ளன.

இதர நண்பர்களை விட தீவிரமாகப் பணியாற்ற வேண்டிய கட்டத்தில் இருப்பதினால் நான் நடிகர் சங்க துணைத் தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்றுகொண்டு நண்பர்களுடன் இணைந்து நடிகர் சங்கத்துக்காக என் பணியினை தொடர்ந்து செய்வேன்.

அதே சமயம் நடிகர் சங்கத்தில் இருந்து கொண்டு அரசியலில் ஈடுபடுவதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை என்ற என் தனிப்பட்ட கருத்தில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இவ்வாறு பொன்வண்ணன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com