'திருநங்கைகளுக்கு வேறு எந்தப் படத்திலும் இல்லாத முக்கியத்துவம் அருவியில் உள்ளது': திருநங்கை அஞ்சலி பெருமிதம்!

அருவி கதாநாயகி அதிதி பாலன் என்னை சகமனுஷியாக நினைத்து மிகவும் அன்பாகப் பழகினார்...
'திருநங்கைகளுக்கு வேறு எந்தப் படத்திலும் இல்லாத முக்கியத்துவம் அருவியில் உள்ளது': திருநங்கை அஞ்சலி பெருமிதம்!

அருவி கதாநாயகி அதிதி பாலன் என்னை சகமனுஷியாக நினைத்து மிகவும் அன்பாகப் பழகினார் என திருநங்கை அஞ்சலி கூறியுள்ளார்.

'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அருவி'. அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பிந்து மாலினி & வேதாந்த் பரத்வாஜ். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் கதாநாயகி அதிதி பாலனின் தோழியாக நடித்திருப்பவர் திருநங்கை அஞ்சலி. அவர் படத்தில் நடித்த அனுபவம் குறித்துக் கூறியதாவது:

அருவி படத்தின் நடிகர் – நடிகையர் தேர்வுக்கு நானும் இன்னொரு திருநங்கையும் சென்றிருந்தோம். இருவரையும் நடித்து காட்டச் சொன்னார்கள். அப்படியே செய்தோம். ஒரு மாதம் கழித்து நீங்கள்தான் இந்தப் படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளீர்கள் என்று சொன்னார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது, அதேசமயம் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. 

என் கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல் எனக்குப் பயிற்சி கொடுத்தார்கள். படப்பிடிப்புத் தளத்தில் நான் ஒரு திருநங்கை என்கிற பாகுபாடு பார்க்காமல் அனைவரும் நட்பாகப் பழகினார்கள். சில காட்சிகளில் எனக்கு நடிப்பு வரவில்லை. அதை இயக்குநர் ஒரு முறைக்கு பத்து முறை முயற்சி பண்ணுங்கள் என்று தட்டிக் கொடுத்தார். கேரளா போன்ற வெளியிடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது. ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. 

படத்தின் கதாநாயகி அதிதி பாலன் என்னை சகமனுஷியாக நினைத்து மிகவும் அன்பாகப் பழகினார். இந்தப் படத்தில் நான் எமிலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் என் கதாபாத்திரம் பற்றி கூறும்போது வித்தியாசமாகத்தான் இருந்தது. எனக்கும் நடிப்புக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் நான் எப்படி தேர்வானேன் என்று தெரியவில்லை. திருநங்கை என்கிற பாகுபாடு இல்லாமல் படம் முழுவதும் வருவது போல் காட்சிகள் உள்ளன. 

ஒரு திருநங்கையும், ஒரு பெண்ணும் எப்படி நட்பு ரீதியாக பழகிக்கொள்கிறார்கள் தன்னுடைய சந்தோஷம், துக்கம் என எல்லாவற்றையும் எப்படிப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்கிற விஷயங்கள் படத்தில் இருக்கும். பொதுவாகத் திருநங்கைகள் பற்றி பல திரைப்படங்களில் கேலி கதாபாத்திரமாகத்தான் வைத்திருப்பார்கள் ஆனால் அருவி திரைப்படத்தில் படம் முழுவதும் வருவதுபோல் இருக்கிறது. இதற்கு முன்பு எந்தப் படத்திலும் திருநங்கை கதாபாத்திரம் படம் முழுவதும் வந்தது இல்லை. 

எனக்குச் சொந்த ஊர் பாண்டிச்சேரி. எனக்குச் சகோதரியாகவும், தோழியாகவும் தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கை பொன்னி உள்ளார். அவர்தான் எனக்குப் பரதநாட்டிய குரு. பரதநாட்டியம் கீழ்தட்டு மக்களுக்கு எட்டாத கனியாக இருப்பதால் அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக வியாசர்பாடி பகுதியில் பரதம் கற்றுக் கொடுத்து வருகிறோம். வீணை கற்றுள்ளேன் அதையும் மற்றவர்களுக்கு கற்று கொடுக்கிறேன். மேலும் கைவினைப் பொருளும் செய்து அதனை வியாபாரம் செய்வதன் மூலமாக எங்களுக்கு வருமானம் வருகிறது. அருவி படம்தான் என் முதல் படம். மேலும் பட வாய்ப்புகள் வந்தால் கட்டாயம் நடிப்பேன். 



அருவியில் என்னை திருநங்கையாகவே நினைக்க வேண்டாம் கதாநாயகியின் தோழியாகவே நான் வருவேன். நாங்கள் இருவரும் சேர்ந்து எப்படி எங்களுடைய வாழ்க்கைச் சூழலை கொண்டுபோகிறோம் என்று படத்தில் காண்பித்துள்ளார்கள். மற்றபடி படத்தில் என்னை திருநங்கையாகச் சுட்டிக்காட்டவே இல்லை என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com