2018 பொங்கல் அன்று ரிலீஸ் ஆகவிருக்கும் படங்கள் என்னென்ன?

2018-ல் பொங்கல் அன்று வெளிவரவிருக்கும் படங்கள் ஐந்துதான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
2018 பொங்கல் அன்று ரிலீஸ் ஆகவிருக்கும் படங்கள் என்னென்ன?

2018-ல் பொங்கல் அன்று வெளிவரவிருக்கும் படங்கள் ஐந்துதான் என்கிறது கோலிவுட் வட்டாரம். அவை நடிகர் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’, ஜீவாவின் ‘கலகலப்பு 2’, விஜய்காந்த் மகன் சண்முக பாண்டியனின் ‘மதுர வீரன்’ ஆகியவை. 

ஸ்கெட்ச்

விக்ரம் நடிப்பில் 'ஸ்கெட்ச்' என்ற படம் டிசம்பர் மாதம் வெளி வரவுள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் பட வேலைகள் முடிவடையாத காரணத்தால் அதன் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது பொங்கல் விடுமுறைக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார்.  ஆக்‌ஷன் த்ரில்லர் படமான தனது இரண்டாவது படம் குறித்து அவர் பேசுகையில், ‘ஸ்கெட்ச் வடசென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். வடசென்னையில் வாழும் சில அசலான மனிதர்களை வைத்து உருவாக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் உள்ளனர். வடசென்னையின் ஒரு பகுதியில் வசிக்கும் மெக்கானிக்காக விக்ரம் நடித்துள்ளார் ’ என்றார்.

நடிகர் விக்ரமின் 53-வது படமிது. ராதாரவி, ஸ்ரீபிரியங்கா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக முதல் முறையாக தமன்னா நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார் 

தானா சேர்ந்த கூட்டம்

சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 12 அன்று வெளியாகும் என ஒரு பேட்டியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். தற்போது பொங்கல் அன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் குறித்து விக்னேஷ் சிவன் கூறியது : நானும் ரெளடிதான் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை இயக்குவதாக இருந்தேன் ஆனால், தேதிகள் பிரச்னைகளால் அவர் கவண் படத்தை ஒப்புக்கொண்டுவிட்டார். ஞானவேல்ராஜா ஒரு படம் பண்ண அழைத்தார். குறுகிய காலத்தில் முடிவு செய்யவேண்டியதாக இருந்தது. நேரம் குறைவாக இருந்ததால் என்னுடைய சொந்தக் கதை இல்லாமல் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக்கை இயக்க ஒப்புக்கொண்டேன். அதிகாரபூர்வமாக உரிமம் வாங்கி ரீமேக் செய்துள்ளோம். ஆனால் என் பாணியில் ரீமேக்கை இயக்கியுள்ளேன். 

ஸ்பெஷல் 26 படத்தைத் தாண்டிய ஒரு நிஜ சம்பவத்தைப் படத்தில் இணைத்துள்ளேன். ஸ்பெஷல் 26 போன்ற ஒரு படத்தில் சொடக்கு மேல பாடலுக்கு இடம் கிடையாது. பொழுதுபோக்கான ஒரு படம் தரவேண்டும். அதை மனத்தில் வைத்துக்கொண்டுதான் படம் இயக்கியுள்ளேன் என்று கூறியுள்ளார். இத்திரைப்படம்‘கேங்’ என்ற பெயரில் இந்தப் படம் தெலுங்கிலும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கலகலப்பு 2

சுந்தர்.சி இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான கலகலப்பு திரைப்படத்தின் இரண்டாம் பாகம்தான் கலகலப்பு 2.

கலகலப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர்.

`கலகலப்பு-2' படத்தில் ஜீவா, ஜெய், கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி வையாபுரி, மனோபாலா, விடிவி கணேஷ், சந்தான பாரதி, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுந்தர்.சி-யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் தயாரித்துள்ளது.

குலேபகாவலி

பிரபுதேவா நடிப்பில் எஸ்.கல்யாண் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் ‘குலேபகாவலி’.  ஹன்ஷிகா கதாநாயகியாகவும், நடிகை ரேவதி முக்கியமான ஒரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு விவேக், மெர்வின் இசையமைத்துள்ளனர். ஆர்.எஸ்.ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.

மதுர வீரன்

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மதுர வீரன்’. விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படம் பொங்கல் அன்று ரிலீசாகும்.

மீனாட்சி, சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, பால சரவணன், மைம் கோபி, மாரிமுத்து ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

விமல் நடிப்பில் ‘மன்னர் வகையறா’ படமும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளிவரவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com