மொபைல் புரஃபைலில் நயன்தாரா புகைப்படத்தைப் பயன்படுத்தி திருடனைக் கையும் களவுமாகப் பிடித்த பெண் போலீஸ்!

பலே போலீஸ், பலே ஐடியா! என சப் இன்ஸ்பெக்டர் மதுபாலா தேவியின் இந்த நூதனமான ட்ரிக்கை தற்போது கொண்டாடி உச்சி முகர்ந்து கொண்டிருக்கிறது பிகார் போலீஸ்!
மொபைல் புரஃபைலில் நயன்தாரா புகைப்படத்தைப் பயன்படுத்தி திருடனைக் கையும் களவுமாகப் பிடித்த பெண் போலீஸ்!

பிகாரில் பாஜக பிரமுகர் ஒருவர் பயன்படுத்தி வந்த விலையுயர்ந்த மொபைல் ஃபோன் ஒன்று 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனது. அது குறித்து காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டிருந்தது. அந்த ஃபோனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபடுகையில் திருடு போன மொபைலைத் திருடிய நபர் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருப்பது தெரியவந்தது. மொபைல் டவர் காட்டிய அடையாளத்தின் படி திருடனை நெருங்கும் ஒவ்வொரு முறையும் அத்திருடன் ஏதோ ஒருவகையில் உஷாராகி தப்பித்துக் கொண்டே இருந்தான். இதனால் சலித்துப் போன பிகார் காவல்துறை அடுத்த கட்டமாகத் திருடனைப் பிடிக்க என்ன செய்யலாம் என யோசிக்கையில், உதவி சப் இன்ஸ்பெக்டரான மதுபாலா தேவி, ஒரு நூதனமான ட்ரிக்கைப் பயன்படுத்தி திருடனைப் பிடிக்கலாம் என ஐடியா அளித்தார்.

அதன்படி மதுபாலா தேவி தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புகைப்படத்தை தனது புரஃபைல் புகைப்படமாக மாற்றி மொபைலில் செட் செய்தார். அந்தப் புகைப்படத்துடன், மொபைல் திருடன் முகமது ஹஸ்னைனுடன் நட்பானார். நட்பானதோடு நில்லாமல், தான் அவனைக் காதலிப்பதாகவும் ஆசைகாட்டத் தொடங்கினார். ஆரம்பத்தில் மதுபாலாவின் காதல் விண்ணப்பத்தைக் கண்டுகொள்ளாத முகமது ஹஸ்னைன்... பிறகு சில நாட்கள் இடைவெளியில் மதுபாலாவின் புரஃபைல் பக்கத்தில் தென்பட்ட நயன் தாரா புகைப்படத்தின் மீது மையலாகி தானும் அவரைக் காதலிக்கத் தொடங்கி இருக்கிறான். இப்படி மொபைல் புரஃபைல் வழியாக வளர்ந்த காதல். ஒரு நாள் நேரில் சந்திப்பதில் வந்து நின்றது.

எத்தனை நாட்கள் தான் நயன் தாரா மாதிரியான பேரழகியை மொபைல் ஃபோனில் மட்டுமே கண்டு ரசித்துக் கொண்டிருப்பது. எனவே நேரில் பார்த்தே ஆக வேண்டும் என முகமது வேண்டுகோள் வைக்க, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி! என குஷியாகி மதுபாலா நேரடி சந்திப்பிற்கு ஓக்கே சொல்ல, சந்திக்க நாள், இடம், நட்சத்திரம் எல்லாம் முடிவானது. தான் மொபைல் மூலமாக மட்டுமே கண்ட ஆசை முகத்தை நேரில் காண பேராசையுடன் காத்திருந்தான் மொபைல் திருடன் முகமது ஹஸ்னைன்.

காத்திருந்தது வீண் போகுமா? பிகார் காவல்துறையினர் கமுக்கமாக வந்து கோழி அமுக்குவது போல காத்திருந்த முகமது ஹஸ்னைனை அமுக்கிக் கொண்டு சென்று லாக்கப்பில் வைத்துக் கவனித்த விதத்தில், அவன்... ஐயோ, இந்த காஸ்ட்லி மொபைல் ஃபோனை நான் திருடவே இல்லை. இது 4,500 ரூபாய் பணம் கொடுத்து நான் விலைக்கு வாங்கிய திருட்டு ஃபோன் என்று போட்டுக் கொடுக்க,  முகமதுவுக்கு திருட்டு ஃபோனை விற்ற நபரும் தற்போது காவல்துறை வலையில் சிக்கியாயிற்றாம்.

பலே போலீஸ், பலே ஐடியா! என சப் இன்ஸ்பெக்டர் மதுபாலா தேவியின் இந்த நூதனமான ட்ரிக்கை தற்போது கொண்டாடி உச்சி முகர்ந்து கொண்டிருக்கிறது பிகார் போலீஸ்!

திருடனைப் பிடிக்க நடிகையின் புகைப்படத்தைப் பயன்படுத்தியது காவல்துறையின் கெட்டிக்காரத்தனம் தான். அதிலும் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடிக்க வட இந்திய நடிகைகளைத் தேடி நமது இயக்குனர்கள் ஓடிக் கொண்டிருக்க, வட இந்தியப் போலீஸோ நம்ம ஊர் நட்சத்திரம் நயன்தாராவைக் கொண்டு ஒரு பலே திருடனைப் பிடித்தது பாராட்டுதலுக்குரிய விஷயம் தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com