விக்ராந்துடன் இணைந்து சிசிஎல் போட்டியிலிருந்து விலகியது ஏன்?: விஷ்ணு விஷால் பதில்!

வாழ்க்கையில் சிலசமயங்களில் சுயமரியாதை மிகவும் முக்கியம். சென்னை ரைனோஸ் மற்றும் சிசிஎல் ரசிகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்...
விக்ராந்துடன் இணைந்து சிசிஎல் போட்டியிலிருந்து விலகியது ஏன்?: விஷ்ணு விஷால் பதில்!

திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் எனப்படும் சி.சி.எல் போட்டியிலிருந்து சென்னை ரைனோஸ் அணியைச் சேர்ந்த பிரபல வீரர்களான விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் விலகியுள்ளார்கள்.

சென்னை ரைனோஸ் அணியில் உள்ள நடிகர்களிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றியதால் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். இதுகுறித்து இருவரும் ட்விட்டர் வழியாகத் தங்கள் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

விக்ராந்த் ட்விட்டரில் கூறியதாவது: இந்த வருட சிசிஎல் போட்டியிலிருந்து நான் விலகியுள்ளேன். சென்னை ரைனோஸ் சார்பாக நான் விளையாடவில்லை. வாழ்க்கையில் சிலசமயங்களில் சுயமரியாதை மிகவும் முக்கியம். சென்னை ரைனோஸ் மற்றும் சிசிஎல் ரசிகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இதுதொடர்பாக நானும் விஷ்ணு விஷாலும் ஒன்றாக முடிவெடுத்துள்ளோம். என் முடிவுக்கு ஆதரவளிக்கும் விஷ்ணு விஷாலுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.  

விஷ்ணு விஷால் இந்த விவகாரம் குறித்து கூறியுள்ளதாவது: உணர்வுகளுக்குப் பதிலாக சுயமரியாதையைத் தேர்வு செய்யவேண்டிய கட்டாயம். சிசிஎல் போட்டியிலிருந்து விலகுகிறேன். என் முடிவுக்கு ஆதரவளிக்கும் விக்ராந்துக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

சென்னை ரைனோஸ் அணியில் ஒற்றுமையின்மை நிலவுவதை மறைமுகமாகவும் வெளிப்படுத்தியுள்ளார் விஷ்ணு விஷால். அவருடைய சமீபத்தில் ட்வீட்டில், மறைந்த துருவ் சர்மாவின் படத்தை சட்டையில் வைத்துக்கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணிக்கு என் சல்யூட். ஓர் அணியில் உள்ள ஒற்றுமையின் அடையாளம் இது என்று ட்வீட் செய்துள்ளார்.

இதுபற்றி ஒரு பேட்டியில் விஷ்ணு விஷால் கூறியதாவது: விளையாட்டின் மீதுள்ள காதலால் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கிறோம். கடந்த சில வருடங்களாக எங்கள் அணியினரே எங்கள் திறமை மீது சந்தேகம் கொள்கிறார்கள். இந்த வருடம் 10 ஓவர் போட்டியாக மாறியுள்ளது. மேலும் பயிற்சி செய்யவும் சரியான நேரம் அமையவில்லை. அதனால் இந்த வருடம் அணியிலிருந்து விலகி மற்றவர்களுக்கு வாய்ப்பு தரலாம் என இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார். 

நட்சத்திர கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியுள்ளது. சிசிஎல் போட்டியின் முதலிரண்டு வருடங்களில் சென்னை ரைனோஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2015-ல் இரண்டாம் இடம் பிடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com