மீடியா மற்றும் மார்கெட்டிங் துறையில் பணி புரிபவர்களின் நிலைமை இதுதான்! சர்வே முடிவுகள்

மீடியா, மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்பவர்களுக்கு விடுமுறை தினங்கள் இல்லை,
மீடியா மற்றும் மார்கெட்டிங் துறையில் பணி புரிபவர்களின் நிலைமை இதுதான்! சர்வே முடிவுகள்

இதோ வருடக் கடைசி வந்துவிட்டது. புது வருடம் 2018 காலண்டரும் வெளிவந்துவிட்டது. அலுவலகங்களில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் முதலில் ஆவலுடன் அந்தக் காலண்டரில் புரட்டிப் பார்க்கும் தகவல் எதுவெனில் பண்டிகை தினங்கள் எப்போது வருகிறது, விடுமுறை தினங்கள் என்று வருகின்றன என்பதைத்தான்.

ஆனால் பத்திரிகையாளர்கள் மற்றும் மார்கெட்டிங் துறையில் வேலை செய்பவர்கள் இதையெல்லாம் திருப்பியே பார்க்க மாட்டார்கள். காரணம், மீடியா, மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்பவர்களுக்கு விடுமுறை தினங்கள் என்பதே கிடையாது. ஓய்வின்றி எப்போதும் வேலை செய்பவர்களாகவே அவர்கள் உள்ளனர் என்று உலகளாவிய சர்வே ஒன்று தெரிவிக்கின்றது.

உலகெங்கிலும் உள்ள ஊடகத் துறையினருக்கும், மார்க்கெட்டிங் பணியாளர்களுக்கு லீவ் என்பது கனவில் காணும் ஒரு விஷயமாகிவிட்டது. ஓய்வே இல்லாமல் தொடர் ஓட்டம் அவர்களுடைய வேலையின் தன்மையில் கலந்திருப்பதுதான் அதற்குக் காரணம் எனலாம். நாளொன்றுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை என்று குறைபடும் அளவுக்கு அவர்களது பணி உள்ளது. 24 X 7 என்று கடிகார சுழற்சிக்கு ஈடுகொடுத்து இயங்கிக் கொண்டே இருப்பார்கள்.

'டெட்லைன்னுக்குள்ள வேலை பாக்கணும், இஷ்யூ முடிக்கணும்,  டார்கெட் அச்சீவ் பண்ணனும்’ இவைதான் அடிக்கடி அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள். மற்றத் துறையில் வேலை செய்வோருக்கு பண்டிகை போன்ற வருடாந்திர விடுமுறை தினங்கள் 15 நாட்களாவது இருக்கும். ஆனால் மீடியாவில் வேலை செய்பவர்கள் அதுவும் தினப் பத்திரிகைகளில் பணி புரிபவர்களுக்கு வருடத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட விடுமுறை தினங்கள் ஆகும்.  

சரி அலுவலகத்தில் தான் விடுமுறை இல்லை நாமாவது லீவ் எடுக்கலாம் என்று அவர்களாகவும் விடுமுறை கோருவதில்லை. வேலை நெருக்கடிகள் துரத்திக் கொண்டிருக்கும் போது லீவ் எடுப்பதெல்லாம் ஆகாத காரியம். அவர்களது சொந்த வாழ்க்கையில், குடும்பத்துடன் ஒரு நிகழ்ச்சிக்கு செல்வது, சொன்ன நேரத்துக்கு ஓரிடத்து வருவது எல்லாம் அரிதினும் அரிதுதான். அவர்களை வேலை அந்தளவுக்கு அழுத்திக் கொண்டிருக்கிறது என்று இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

ஊடகம் மற்றும் மார்கெட்டிங் துறைகளில் பணி புரிபவர்களில் 66 சதவிகிதத்தினர் லீவ் எடுக்க முடியாத நிலையில்தான் உள்ளார்கள். காரணம் அவர்களின் பணிச் சூழல் அத்தகையது. அதே சமயம் அரசாங்க வேலை மற்றும் கல்வித் துறைகளில் பணி புரிபவர்களுக்கு அதிகபட்ச விடுமுறை இருப்பதை Vacation Deprivation Report 2017' எனும் சர்வே முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

2017-ம் ஆண்டு செப்டம்பர் 4-15 தேதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 30 நாடுகளில்லிருந்து 15,081 நபர்களை ஆய்வு செய்தனர்.

உணவு மற்றும் குடிநீர் துறைகளில் பதிலளித்தவர்கள் 62 சதவிகிதம், விவசாயத்திற்கு 56 சதவிகிதம், போக்குவரத்து மற்றும் பயணம் 5 சதவிகிதம், வணிகம் மற்றும் ஆலோசனை 55 சதவிகிதம் மற்றும் நிதி மற்றும் சட்டம் 55 சதவிகிதம் என இந்த முடிவில் கண்டறியப்பட்டது.

(55%), சுகாதார (40%), போக்குவரத்து மற்றும் பயண (39%), ரியல் எஸ்டேட் (37%), வணிக மற்றும் ஆலோசனை (36%) மற்றும் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் (34%) துறைகளில் வேலை செய்வோர் கடந்த ஆறு மாதங்களில் விடுமுறை எடுக்கவில்லை.

விவசாயம், ஊடகம், மார்கெட்டிங், உணவு மற்றும் குடிநீர், சில்லறை விற்பனை மற்றும் கல்வி போன்ற துறைகளில் 35 சதவிகித தொழிலாளர்கள் தாங்கள் லீவ் எடுப்பதில்லை என்று கூறியுள்ளனர்.

இருப்பினும், நிதியியல் மற்றும் சட்டத்துறை போன்ற துறைகளில், 28% தொழில் நிபுணர்கள், வேலை குவிந்து கிடக்கும் போது லீவ் எடுத்து நேரத்தை வீணடிக்க முடியாது என்ற காரணத்தால் விடுமுறையை பற்றி எல்லாம் நினைப்பதில்லை என்று கூறியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com